நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இது சத்தியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக கிழக்கில் பொய்ப் பிரசாரம் செய்கின்றவர் அமைச்சரவையில் அது குறித்து எதுவும் பேசவில்லை. என்னுடனும் மிக அன்பாகவே பேசுகின்றார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அதன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் பெஸ்டர் ஏ.எம்.றியாஸை ஆதரித்து கல்முனைகுடி சுனாமி வீட்டுத்திட்ட வெளியரங்கில் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது தெரிவித்ததாவது;,
“நான் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள் அணைவருக்குமான ஜனாதிபதியாவேன். முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, பௌத்தர் என்ற வேறுபாடு காட்டி நான் ஆட்சி செய்ய முடியாது. எல்லா மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் நான் மதிப்பளிக்கின்றேன். விகாரைகளையும் பள்ளிவாசல்களையும் கோவில்களையும் பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தேர்தலில் உங்கள் வாக்குகளை பெறுவதற்காக பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக இங்கு இனவாத பிரசாரம் செய்யப்படுகிறது. பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்று இங்கு பிரசாரம் செய்பவர் என்னிடமோ அமைச்சரவையிலோ இதுவரை முறையிடவில்லை. அவர் என்னுடன் மிகவும் அன்பாகவே பேசுகின்றார். இது என்ன நியாயம்? எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்களும் ஏமாற வேண்டாம்.
இந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி உட்பட எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் அவ்வாறு நடந்ததாக கூறவில்லை. என்னை உங்களிடமிருந்து பிரிப்பதற்காகவே இனவாதம் பேசுகின்றனர். அதன் மூலம் சில வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான புண்ணியம் எனக்கே கிடைக்கும்.
மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். இனவாதம் பேசி என்ன பலம். அதுதான் அரசியல் இலாபம். அதற்காகவே இன்று இனவாத பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதி மக்கள் என்றும் ஏமாளிகளாக வாழ மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
ஏற்கனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு போதிய உரமானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தேவைகளை நாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலாக நாம் எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கின்றோம் என்பதில் நான் நிம்மதிப் பெருமிதத்துடன் இருக்கின்றேன். மக்களின் அர்ப்பணிப்பாலும் நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த சமாதானத்தையும் இன ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
ஆகையினால் நீங்கள் என்னை முழுமையாக நம்புங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அத்தனையும் செய்து தருவேன். என்னுடன் நம்பிக்கையாக இணைந்து சேவையாற்றக் கூடியவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள். அதுவே இந்த மண்ணுக்கும் உங்களுக்கும் நல்லது. அதன் மூலம் எனக்கும் உங்களுக்கு சேவை செய்ய இலகுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, வேட்பாளர்களான முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், ஏ.எம்.றியாஸ், ஜமாலியா சுபைர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதி தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.