Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலும் எதிர்பார்ப்பில் ஏமாற்றமடையப் போகும் வேட்பாளர்களும்

Posted in
 - அரசியல் ஆய்வு -

விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அதுவும் குறிப்பாக ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய இரு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மஹிந்தவின் கூட்டு எதிர்கட்சி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி (PMGG), அலிசாஹிர் மௌலானாவின் சுயேட்சைக் குழு ஆகியவை களமிறங்கலாம் என்று பரவாலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் அதிக போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இடம்பெற்ற முஸ்லிம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே பொதுவாகப் போட்டியிட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ தத்தமது சின்னங்களில் போட்டியிட முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான உறுதியான ஆசனங்களாக 10உம் போனஸ் ஆசனங்களாக 6உம் காணப்படுகின்ற நிலையில் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா 10 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும். அவ்வாறெனின் மேற்படி UNP, SLMC, ACMC சார்பாக மொத்தம் 30 வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள்.

ஆனால் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடவே பெரும்பாலும் உடன்பட்டிருப்பதால் மூன்று கட்சிகளையும் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியும். அவ்வாறு ஏற்படின் தனித்தனியாக கட்சிகள் போட்டியிடும்போது தனக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்த்திருந்த மேற்படி மூன்று கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20 பேரின் வேட்பாளர் கனவும் கலைவதோடு அவர்களது எதிர்பார்ப்புக்கு பாரிய ஏமாற்றமும் ஏற்படப் போகின்றது.

UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக சாதகங்கள் இருப்பதனை இக்கட்சிகளின் தலைமைகள் தங்களது அடுத்த மட்டத்திற்கு அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தந்த கட்சிகள் சார்பாக யாருக்கு முன்னுரிமை கொடுத்து தலைமைத்துவம் தெரிவு செய்யப் போகின்றது என்று ஒரு சிக்கலான நிலை ஏற்படும். அவ்வாறு நடக்கும்போது வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாது ஏமாற்றமடைபவர்கள் தத்தம் கட்சி மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விரக்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுதவிர ஏற்கனவே சிலர் தாங்கள் தேர்தலில் இறங்கப் போவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்தமையும் ஆனால் தற்போது கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் குறித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதும் தெளிவாகின்றது.

ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் இக்கூட்டணி சபையைக் கைப்பற்றுவதற்கான நூற்றுக்கு தொன்னூற்றைந்து வீத வாய்ப்புக்கள் உள்ளது. இவ்வாறு கூட்டணி அமைத்து சபைகளை கைப்பற்றுவதையே பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தனது பிரதான திட்டமாக வகுத்துள்ளது. அவ்வாறு ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP, SLMC, ACMC ஆகிய கட்சிகள் கூட்டணியாகக் களமிறங்கினால் கூட்டணி சார்பாக வரும் 10 வேட்பாளர்களில் கட்சிகள் வாரியான ஒதுக்கீடாக SLMC – 04 வேட்பாளர்கள், ACMC - 03 வேட்பாளர்கள், UNP -03 வேட்பாளர்கள் உள்ளடங்கிய பட்டியலே தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறு அமையுமிடத்து ஓட்டமாவடிப் பிரதேச சபைக்கான தேர்தலில் UNP சார்பாக ஹனீபா (மம்மலி) ஜீஎஸ், புர்க்கான், சபீர் மௌலவி ஆகிய மூவரும், ACMC சார்பாக ஐ.ரி. அஸ்மி, கே.பி.எஸ். ஹமீட் (முன்னாள் தவிசாளர்),நௌபர் (முன்னாள் பிரதித் தவிசாளர்) ஆகிய மூவரும் SLMC சார்பாக விஜித அன்வர், முஹாஜிரின் ஆசிரியர், அன்வர் ஆசிரியர், மாஞ்சோலை கபீர் ஹாஜியார் ஆகிய நால்வரையும் அடக்கிய மொத்தம் 10 பேரைக் கொண்ட கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பெயர்ப் பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண் வேட்பாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் இந்த மூன்று கட்சிகளின் கூட்டணியானது அமையும் பட்சத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் என்பதில் ஐயம் இல்லை.

இருந்தாலும் SLMC மற்றும் ACMC ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் பாம்பும் கீரியும் போன்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறிருக்க கூட்டணியாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஒரே மேடையில் பிரச்சாரத்தினை ஒற்றுமையாக மேற்கொள்ளப் போகின்றார்கள், கடந்தகாலங்களில் ஆளாலுக்குக் கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து எவ்வாறு பொது மேடையில் பேசி வாக்குக் கேட்கப் போகின்றார்கள்? அதனை வாக்களார்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்ற சுவாரசியமே எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கின்றது.

இக்கூட்டணி தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான (SLFP) வேட்பாளர் பட்டியல் சட்டத்தரணி மாஹிர் அவர்களின் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. இந்தக் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஹாரூன் ஸஹ்வி அவர்கள் ஒரு பின்புலத்தைக் கொண்டு காணப்படுவதாலும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கல்குடாத் தொகுதி, வாழைச்சேனை, ஓட்டமாவடிப் பிரதேசத்திற்கான அமைப்பாளர்கள் நமது ஓரைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டல் இருக்கும் என்பதாலும் இத்தேர்தலில் SLFPஉம் தாக்கம் செலுத்தக் கூடிய கட்சியாக இருப்பதோடு எதிர்கட்சியாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது.

இதுதவிர PMGGஉம் களமிறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றது. இதுதவிர ஹாபிஸ் நஸீர் அவர்களுடனான முரண்பாட்டின் பின்னர் மௌலானாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயட்சைக்குழு, கருணா அம்மானின் வழிகாட்டலில் கூட்டு எதிர்க்கட்சி ஒரு பெயரிலும் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவருகின்றது.

அத்தோடு UNP, SLMC, ACMC கூட்டணியில் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் SLFP, PMGG போன்ற கட்சிகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும்போது SLFP, PMGG கட்சிகள் வெற்றிபெறுகின்றனவோ இல்லையோ முன்னரைவிட புதிய வருகைகளினால் பலமடையும் என்பதும் உண்மை.

எவ்வாறாயினும் UNP, SLMC, ACMC கூட்டணி அமைந்தால் ஓட்டமாவடி பிரதேச சபையை இலகுவாகக் கைப்பற்றும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதோடு, அவ்வாறு கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தில் இம்மூன்று கட்சிகளையும் சேர்ந்த தங்களை வேட்பாளர்களாக நிறுத்துவார்கள் என்று பாரிய எதிர்பார்ப்புடன் இருந்த ஒரு தொகை தீவிர அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏமாற்றமடையப் போவதும் அரசியல் எதிரிகளுடன் எவ்வாறு ஒன்றிணைந்து கூட்டணியாக இத்தேர்தலில் செயலாற்ற முடியும் என்று கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஒரு குழப்பமான நிலைப்பாடு ஏற்படப் போவதும் தின்னம்.

-அபு முஜாஹித்-

© ODDAMAVADI NEWS

ரெயில்வே அத்தியவசிய சேவையாக அறிவிப்பு - இராணுவத்தினருக்கு ரெயில்வே துறையில் பயிற்சி

Posted in

தற்போது இடம்பெற்றுவரும் ரெயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரெயில்வே சேவை நாட்டின் அத்தியவசிய சேவையாக இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாலளர் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தவகையில் வேலைக்கு உடனடியாகத் திரும்பாத ரெயில்வே சேவை ஊழியர்கள் பணியிலிருந்து தாமாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அத்தோடு ரெயில்வே பணிப் பகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மறு அறிவித்தல் வரை தனியார் பேரூந்துகளை அதிவேக நெடுந்சாலைகளில் கட்டணமின்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் ரெயில்வே சேவையில் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால் அதனை சுமூகமாக்குவதற்காக இராணுவத்தினருக்கு ரெயில்வே சேவையின் அனைத்துத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© ODDAMAVADI NEWS

மட்டக்களப்பில் சிக்கிய பாரிய தொகைப் பாம்புகள் அனர்த்தமொன்று ஏற்படுவதற்கான முன்னறிவித்தலா?

Posted in
மட்டக்களப்பு நாவலடி கடற்பிரதேசத்தில் மீனவர்களின் கரைவலைகளில் ஓரிரு தினங்களாக பெருமளவிலான பாம்புகள் சிக்கியுள்ளன. இதனால் மீனவர்களும் பொதுமக்களும் அதிகம் அச்சமடைந்துள்ளதோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை ஆராய்ந்து அனர்த்தங்கள் தொடர்பிலான அறிவித்தல்களை முன்கூட்டி அறிவிப்பதன் மூலம் தங்களை அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.



2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற சுனாமி அனர்த்தம், மற்றும் 2011ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை நிகழ்வதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு பாரியளவில் பாம்புகள் கரைவலைகளில் சிக்கிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி அனுபவங்களினாலும் தற்போது அதிக சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாகவும் அத்தோடு இந்திய அனர்த்த முகாமைத்துவ நிலையம் விரைவில் பூகம்பம் ஏற்படலாம் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளமையாலும் மக்கள் இவ்வாறு பாம்புகள் அதிகளவில் சிக்கியுள்ளமையானது ஒரு அனர்த்தத்திற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பெரிதும் அச்சப்படுகின்றனர்.




© ODDAMAVADI NEWS