Posted in

அண்மைக் காலமாக கல்குடா முஸ்லிம் பிரதேசங்களைக் குறிவைத்து பிரமிட் முறையிலான வணிகம் மேற்கொள்ளும் ஒரு சில நிறுவனங்கள் தங்களது யுக்திகளைக் கையாண்டு அப்பாவிப் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டுச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இஸ்லாத்தில் கூடுமா? இது சட்டக்காப்புக்குட்பட்டதா? உண்மையில் இதன் நோக்கம் என்ன என்பது பற்றி யோசிக்காமல் குறித்த நிறுவன ஏஜென்டுகளின் கவர்ச்சிப் பேச்சில் மதிமயங்கி தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தினை விரைவில் பல மடங்காக மாற்றலாம் என்ற கனவுடன் குறித்த நிறுவனம் வழங்கும் பெறுமதியற்ற பொருளை பெருந்தொகை கொடுத்து வாங்குவது மட்டுமல்லாது அந்த நிறுவனத்தின் தூண்டுதலால் மற்றையவர்களையும் இந்த வியாபாரத்திற்கு உள்நுழைக்க இந்த சதிவலையில் விழுந்த ஆண்கள், பெண்கள் எனப் பலரும் பாடுபடுகின்றனர். தான் சதிவலையில் விழுந்தது மட்டும் போதாது மற்றவர்களையும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படையாகவும் காணப்படுகின்றது.
இந்த விடயம் அண்மைக் காலமாக சமூக சிந்தனை கொண்ட சில நண்பர்களினால் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக ஆக்கப்பட்டிருந்தது. அத்தோடு இன்னும் சில நண்பர்கள் அரசாங்கத்திற்கும் இது தொடர்பாக அறிவித்திருந்தனர்.
இருந்தாலும் ஏற்கனவே இந்த வணிகத்தில் சிக்குண்டவர்களை எவ்வாறு தெளிவுபடுத்தி மீட்க முடியும், இனியும் சேரவிருப்பவர்களை எவ்வாறு தெளிவுபடுத்தி தடுப்பது என்ற ஆதங்கம் பலரிடமும் இருந்தது. அந்தவகையில் ஜம்இய்யது தஹ்வதில் இஸ்லாமியா – கல்குடா (JDIK) அமைப்பும், அதன் பொதுத் தலைவர் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களும் ஊர் பொதுமக்களை இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் முன்மாதிரியாகக் களமிறங்கியிருப்பதானது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை 16.02.2018ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களினால் நிகழ்த்தப்பட்ட குத்பாப் பிரசங்கமும் இந்த பிரமிட் வணிகம் சம்மந்தமான பல தெளிவான விடயங்களை பொதுமக்களுக்குக் கொடுத்திருந்தது. அத்தோடு எதிர்வரும் 22.02.2018ம் திகதி வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் “பிரமிட் வணிகம், இஸ்லாமியப் பார்வை” என்ற தொனிப் பொருளில் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களினால் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.
சமூகம் சார்ந்த பாதிப்பைத் தடுக்க JDIKயினால் எடுக்கப்படும் இம்முயற்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கவை மற்றும் பாராட்டத்தக்கவை.

-ஆதம் றிஸ்வின் -
© ODDAMAVADI NEWS