Follow me on Twitter RSS FEED

நாம் நேற்று உத்தேசித்தது இன்று உண்மையாகியது...

Posted in

ஐக்கிய தேசியக் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவோடு சபையைக் கைப்பற்றும் என்று நேற்றே நாம் ஆதாரங்களை முன்வைத்து புலனாய்வுச் செய்தியாக முன் வைத்திருந்தோம். அது இன்று உண்மையாகியுள்ளது.

ஒரு பொறுப்பான சமூக ஊடகம் என்ற வகையில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே நம்பகமான தகவல்களை வைத்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்கான அனைத்து உதவிகளையும் பல வழிகளில் எமக்கு வழங்கிய நண்பர்களுக்கு எமது ஊடகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதற்கு முன்னர் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு நடப்பதற்கு முன்பாக உத்தேசக் கணீப்பீட்டினை நாம் மிகத் துல்லியமாக வழங்கியிருந்தோம். அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் சரியான கருத்துக் கணிப்பினை முன்கூட்டி வழங்கியிருந்தோம். இப்போது ஓட்டமாவடி பிரதேச சரபயில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? என்னென்ன உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் முன்கூட்டி செய்தி வெளியிட்டிருந்தோம்.

சரியான நேரத்தில் சரியான செய்திகளை உடனுக்குடன் வழங்க நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என்பதோடு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வரவேற்பினையும் எதிர்பார்க்கின்றோம். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவும் கோ.ப. மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை - ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முடிவு?

Posted in

கடந்த பெப்ரவரியில் தேர்தல் இடம்பெற்று முடிந்து நாளை 06.04.2018ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு கோ.ப. மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெறவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்தக் கட்சி சபையில் ஆட்சியமைக்கப் போகின்றதென்ற ஆர்வம் இப்போதுவரை எல்லோர் மனதிலும் கோலூன்றி நிற்கின்றது.


அந்தவகையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 05 ஆசனங்களையும் 03 போனஸ் ஆசனங்களையும் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய ஒற்றை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சியை நிலைநாட்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இருந்தாலும் 05 ஆசனங்களையும் 02 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சளைக்காமல் தொடர்ந்தும் ஒற்றை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாட்சியமைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை இன்றைய தினம் வரை நடத்தி வருகின்றது. இருபக்கமும் ஒரு ஸ்திரத்தன்மையான உடன்பாடின்மை காரணமாக இன்றுவரை இந்த இழுபறி நிலை நீடித்து வந்தது.

இருந்தாலும் எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவே துரும்புச் சீட்டாகவும் பார்க்கப்பட்டது. 

தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள நம்பகமான தகவல்களின் படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் அதற்காக சபையில் பிரதித் தவிசாளர் பதவி வழங்கப்பட இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இன்று 05.04.2018ம் திகதி பி.ப. 4.00 மணியளவில் ஹாரூன் மௌலவி தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள்  பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் கொண்டிருக்கும் நட்பும் அதேநேரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கொண்டுள்ள உடன்பாடின்மையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியமைக்க உதவலாம் என்றும் நம்பப்படுகின்றது.

அதேவேளை  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹாரூன் சஹ்வி கடந்த காலங்களில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் ஒரேயொரு போனஸ் ஆசனத்திற்காக பிரதித் தவிசாளர் பதவி தனது கட்சிக்கு வழங்கப்படுவதற்கு உடன்பட்டுள்ளமையால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்றே ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு அமையுமானால் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் ஹாரூன் சஹ்வி அவர்கள் கொண்டிருந்த கருத்து முரண்பாடுகளைக் களைந்து அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற தொனியில் தானும் ஒரு முழுநேர அரசியல்வாதிதான் என்பதனை ஹாரூன் சஹ்வி அவர்கள் வெளிப்படுத்தும் தருணமாகவும் இது அமையும்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி சபையைக் கைப்பற்றினால் பெரும்பாலும் தவிசாளராக ஐ.ரி. அஸ்மி (அமீஸ்டீன்) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது. பிரதித் தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போனஸ் ஆசனத்திற்குரிய அஹமட் அவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற மாஞ்சோலை நௌபர் அவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்க வேண்டுமென்ற கோசங்களும் அப்பகுதியிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றுவதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பு முக்கியமான விடயமாகக் கருதப்பட்டாலும் ஸ்ரீ.ல.மு.கா. இன்னுமொரு சிக்கலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏறாவூரிலே அலிசாஹிர் மௌலானா சார்பான ஒருவர் சூரியன் கட்சிக்கு ஆதரவாக கையைத் தூக்கியமைக்கு பலிவாங்கும் நோக்கில் ஓட்டமாவடி சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  ஐக்கிய தேசியக் கட்சி சபையைக் கைப்பற்றுவதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்காக ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தற்போது மட்டக்களப்புக்குத் தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


இதையெல்லாம் தாண்டி ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபையைக் கைப்பற்றினால் தவிசாளராக விஜித அன்வர் அவர்களும் பிரதித் தவிசாளராக அன்வர் ஆசிரியர் அவர்களும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.            


-ஆதம் றிஸ்வின் -     

© ODDAMAVADI NEWS