Follow me on Twitter RSS FEED

முன்னாள் விடுதலைப் புலிகளிடம் தீவிர விசாரணை அவசியம் - Dr. M.L.A.M. Hizbullah M.P.

Posted in
By: Dr. MLAM Hizbullah
முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பதாகவும், எனக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் அதனுடன் தொடர்பு இருப்பதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு உரிய விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும், குற்றச்சாட்டு முன்வைத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

என்னிடமும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடமும் ஆயுதம் இருப்பதாகவும் காத்தான்குடி, மூதூர், கிண்ணியா பகுதிகளில் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாங்கள் மிகவும் கவனமாகவும் - நிதானமாகவும் அனுகுவோம். இவ்வாறான கருத்துக்கள் இதற்கு முன்னரும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பாதுகாப்பு தரப்பு அதனை முற்றாக நிராகரித்திருந்தது.


இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிரச்சினைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதே தீவிரவாதகடும்போக்குவாத அமைப்புக்களின் நோக்கமாகும். நாங்கள் இவ்வாறான விடயத்தை உரிய விசாரணைகள் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவ்வாறான கற்பனைகள் எதிர்காலத்திலும் சிலருக்கு ஏற்படலாம்.

அரசியல் ரீதியாக எம்மீது கால்புணர்ச்சி கொண்டவர்களும், டயஸ்போராக்களுமே இவ்வாறன சதித்திட்டங்களை எமக்கெதிராக முன்னெடுக்கின்றன. அதற்கு சில சிங்கள இனவாத அமைப்புக்களும் துணைநிற்கின்றன. இதன் விளைவுகள் தெரியாமல் ஊடகங்களும் செயற்படுகின்றன

நாங்கள் முப்பது வருட கொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், ஆயுத போராட்டதால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டதை நாங்கள் கண் எதிரே பார்த்தவர்கள். ஆகவே, நாங்கள் நாட்டில் மீண்டுமொரு ஆயுதம் போரட்டம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன இந்த விடயம் தொடர்பில் கரிசனையோடு உள்ளன. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தவுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் வரவேற்பதுடன் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்.


இவ்வாறான அனுகுமுறை மூலமே எமக்கெதிரான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க முடியும். குற்றச்சாட்டை முன்வைத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை அழைத்து விசாரணை நடத்தி அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பில் தீர விசரணை நடத்த வேண்டும். அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும்” - என்றார்

ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும் வாழ்த்துச் செய்தியில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவிப்பு

Posted in
-M.T.M. Haither Ali-

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும் வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும். ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாம் எமது இஸ்லாமிய விழுமியங்களையும், சிறந்த பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுடன் வாழுக்கின்ற ஒரு சூழலை எம்மத்தியில் எமக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாளாகும்.

ஏக வல்லோன் அல்லாஹுவின் இறைக்கட்டளையினை ஏற்று, பல்லாண்டு காலம் இறைவனிடத்தில் மன்றாடி கேட்டுப்பெற்ற தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை இறைவனுக்காக பலியிட தயாரானஅந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே அல்லாஹ் அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டான். படைத்த இரட்சகனுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்ததியாகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாகஒரு ஆட்டை குர்பான் கொடுக்கச் செய்தான் இறைவன்

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு எடுத்து நடக்க முடியுமோ அந்தளவு இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தர்களில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளான இந்த ஹஜ்ஜுப் பெருநாளில் நல்லஎண்ணங்களோடு வாழ்ந்து மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக. அந்த வகையில் இன்று நம்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலும், சமாதானமும், இன ஒற்றுமையும் தொடர்ச்சியாக தொடர வேண்டும். நாம் அனைவரும் நிம்மதியோடும், ஒற்றுமையோடும் வாழ்வதற்காக ஏக வல்லோனான அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போமாக. மேலும் அனைத்து நாடுகளிலுமிருந்து இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகருக்கு சென்றிருக்கும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக என்ற பிரார்த்தனையோடு தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடட திணைக்கள பிரதம பொறியியலாளருடன் சந்திப்பு

Posted in
-M.T.M. Haither Ali-

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மாவட்ட கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளரை 2018.08.20ஆம் திகதி - திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்

இச்சந்திப்பானது சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமினால் இவ்வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டதுடன், இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு கட்டிடம் ஒன்று அமையப்பெறுவதன் அவசியத்தினையும் தெளிவுபடுத்தினார்

அத்துடன், பல அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் இந்நிதியினை கொண்டு வருவதற்கு அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட முன்னெடுப்புக்களையும் பிரதம பொறியிலாளருக்கு மேலும் தெளிவுபடுத்தி, இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார். இவ்விடயங்களை கருத்திற் கொண்ட பிரதம பொறியியலாளர் நிருவாக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல விடயங்களையும் மிக விரைவில் பூர்த்தி செய்து தன்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கி கூடிய சீக்கிரத்தில் இக்கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்தார். இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி பல குறைபாடுகளுடன் காணப்படுவதனால் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைத்துத்ததருமாறு பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக பல சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் இந்நிதி கொண்டுவரப்பட்டுள்ளது.

சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் மீராவோடை வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Posted in
M.T.M. HAITHAR ALI
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் பத்து மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியின் பயனால் இந்நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினராலும், இவ்வைத்தியசாலையினால் பயனடையும் பொதுமக்களாலும் பாராட்டப்பட வேண்டியவராகும்.



சென்ற வருடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளுக்கமைவாக இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளை கேட்டறிந்து கொண்டார். அச்சந்திப்பின்போது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் இவ்வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர். அதன்பயனாக ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கான கடிதத்தினை சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சில் வைத்து வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரிடம் பிரதி அமைச்சர் பைசல் காசிம் 2018.08.15ஆம்திகதி - புதன்கிழமை (நேற்று) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மீராவோடை வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கடிதப் பிரதியினை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் அமைச்சிலிருந்து உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக இவ்வைத்தியசாலையில் அக்கறைகொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.. அன்வர் - ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், East Gate வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எம்.எம். ஹலால்தீன் இருவரும் முற்றுமுழுதாக உதவிக்கரம் நீட்டியதுடன், இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பாராட்டப்பட வேண்டியவர்களாகும். அத்துடன், இவ்வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று அமையப்பெறவேண்டுமென்று ஆரம்பத்திலிருந்து இவ்வைத்தியசாலையில் அக்கறைகொண்டு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு இன்று ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற காரணமாக இருந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எம்.. அஹமட் கபீர் இருவரும் இத்தருணத்தில் நன்றியுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பாராட்டப்பட வேண்டியவர்களாகும்.


அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத் தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழும் இத்தருனத்தில் நினைவுகூறப்பட வேண்டியதுடன், கல்குடாப் பிரதேசத்திற்கு பல்வேபட்ட அபிவிருத்தி பணிகளையும் கொண்டுவந்தவராவார். அத்துடன், சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமிடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் மேலும் இரு வைத்தியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் (MLT) மற்றும் புதியதொரு அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினையும் பெற்றுக்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதுடன், மிகவிரைவில் அவற்றையும் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இவ்வைத்தியசாலையில் கட்டிடம் அமையப்பெற நிதி ஒதுக்கீடு செய்தவர்களாகும். தற்போது அமைந்துள்ள நோயாளர் விடுதி இராஜாங்க அமைச்சர் கௌரவ. எம்.எல்..எம். ஹிஸ்புல்லாவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகும்.

இதன் பிற்பாடு இன்று சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று அமையப்பெறுவதற்கு முதற்கட்ட ஆரம்ப வேலைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிம். அத்துடன் கலைக்கப்பட்ட மாகாண ஆட்சியின்போது மாகாண சுகாதார அமைச்சினால் நிருவாக கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கான வேலைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2017ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளை இவ்வைத்தியசாலை பெற்றிருந்தபோதும் இதற்கு முன்னரான மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது இவ்வைத்தியசாலை சகல வழிகளிலும் முற்றுமுழுதாக புறக்கணிப்பு செய்யப்பட்டு எந்த வகையிலும் முன்னேற்றமடையாத நிலையில் இருந்துவந்துள்ளது.









மீராவோடை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் முன்னெடுப்புக்களை ஆராயும் கூட்டம்

Posted in
M.T.M. Haither Ali

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா தலைமையில் 2018.08.18ஆம் திகதி - சனிக்கிழமை நடைபெற்றது

இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி பல குறைபாடுகளுடன் காணப்படுவதனால் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை புதிதாக அமைத்துக் கொள்வதற்கு பல சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வெற்றிகண்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக, சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினாரால் பிரதி அமைச்சர் நன்றி கூறப்பட்டார். இக்கூட்டத்தின்போது கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்வதற்காக புதியதொரு தரவுகள் அடங்கிய ஆவணப்படுத்தலுடன் இதற்கு பொறுப்பான அதிகாரிகளை சந்தித்து, அவர்களினூடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும், இதற்கு முன்னர் அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைக்கு மேலும் இரு வைத்தியர்களையும், மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் (MLT) மற்றும் புதிய அம்பியுலன்ஸ் வண்டி என்பன பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை துரிதகதியில் பெறுவதற்கான முன்னெடுப்புக்களும் நடைபெற்று வருகின்றது. சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால் இவ்வைத்தியசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாவுக்கான கடிதத்தினை அபிவிருத்திக் குழுவினர் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.