Follow me on Twitter RSS FEED

மீராவோடை வைத்தியசாலையில் ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் சந்திப்பு

Posted in
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை 2018.08.20ஆம் திகதி - திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். வைத்தியசாலையில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறிப்பாக ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையிலும் இச்சந்திப்பு இடம்பெற்றது


அத்துடன், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அபிவிருத்திக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது மிக அவசியத் தேவைப்பாடாகவுள்ள சிற்றூழியர்கள் மற்றும் வைத்தியர்களின் குறைபாடுகள் குறித்தும் இதனால் இவ்வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும் அவற்றுக்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருமாறும் அபிவிருத்திக் குழுவினர் இச்சந்திப்பில் கேட்டுக்கொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினாலும் இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும், இவ்வைத்தியசாலையினால் இரு சமூகங்களைச் சார்ந்த மக்களும் பயன்பெறுவதுடன், இதில் நிலவும் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வேண்டியதன் தேவைப்பாட்டினையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டினார்

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் ஆளணி தொடர்பான ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. இவற்றினை கருத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினரால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதாகவும், தன்னாலான அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை குறைந்தளவுக்கு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
-M.T. Haither Ali-

முஸ்லிம்கள் ஒற்றுமையாக, புரிந்துணர்வுடன், தியாக சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும் வாழ்த்துச் செய்தியில் ஆர்.எம். அன்வர்

Posted in


மலர்ந்திருக்கின்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது. அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து அருமைப் புதல்வனை அறுத்துப் பலியிடத் துணிந்த அருமைத் தந்தையினதும், அருமைத் தந்தையின் ஆணையை அணுவளவேணும் தவறாமல் அறிய உயிரை அர்ப்பணிக்கத் துணிந்த அருமைப் புதல்வனினதும் தியாக வரலாற்றை உலகறியச் செய்யும், நாளே ஈதுல் அல்ஹாஹஜ்ஜூப் பெருநாளாகும்

முஸ்லிம்கள் ஒற்றுமையாகபுரிந்துணர்வுடன்தியாக சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதி பூணுவோம். எம்மிடையே ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலே எமக்கு எதிரான சவால்களை வெற்றி கொள்ள முடியும். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்கம். அதன் அடிப்படையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழகிக்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே தொடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-M.T.M. Haither Ali-

ஒரு குடும்பத்தின் வரலாற்றையே இஸ்லாம் இந்த தியாகத்திருநாளின் வாயிலாக நமக்கு கற்றுத்தந்துள்ளது வாழ்த்துச் செய்தியில் எச்.எம்.எம்.றியாழ்

Posted in

இனங்களுக்கிடையே சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை, தியாக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில் நமது சகோதரர்கள் ஒன்றுகூடி அழுது, தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகின்றனர். நமக்கு அந்த பாக்கியம் இன்றைய நாளில் கிடைக்காவிடினும் இப்ராஹிம் நபி, அவரது அருமை மகன் இஸ்மாயில் நபியின் தியாக உணர்வுகளை நினைத்துக் கண்ணீர் மல்கி நிற்கின்றோம்.

இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல இன, மத மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு ஏனையவர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை, பாதிப்புகளை தங்களது சொந்த நலன்களுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் பலரும் சுயநலமாக இன்று பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இறைவனின் கட்டளையை ஏற்று தனது சொந்த விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி சமூக மாற்றங்களுக்காக மாபெரும் தியாகங்களை நிகழ்த்திக்காட்டிய ஒரு குடும்பத்தின் வரலாற்றையே இஸ்லாம் இந்த தியாகத்திருநாளின் வாயிலாக நமக்கு கற்றுத்தந்துள்ளது. உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், சந்தோசமகவும் வாழ்வதற்கு இந்த திருநாள் வழிவகுக்க வேண்டுமென இறைவனை பிரார்திப்போம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் விடுதுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.