மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தாரைவார்த்துக் கொடுத்தாரா? யதார்த்தத்தை புரிய மறுக்கும் நாம்.
(சற்று நீண்ட பதிவு)கல்குடா முஸ்லிம்களாகிய நாம் இழந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பாக மூளையில் ஞாபகம் வந்து கதவைத் தட்டும்போதெல்லாம் கடந்த 20 வருடங்களாக இடையிடையே பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நாம் அனுப்பிய பிரதிநிதிகளும் இந்த விடயம் பற்றி அந்தந்த உயரிய சபைகளிலே குரல் கொடுத்தும் வருகின்றனர். முக்கியமாக தேர்தல் காலங்களில் கட்சிப் பாகுபாடின்றி இவ்விடயம் பல பிரச்சார மேடைகளை அலங்கரித்துச் சென்றிருக்கிறது.
இருந்தாலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமைச்சரவையும் அரசாங்கமும் நடைமுறைப்படுத்தியது.
அமைச்சரவை அங்கீகாரத்தின்படி கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகம் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளும் இணைக்கப்பட்டு அவை அடங்கலான 18 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு கடந்த 2002ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது.
அதேநேரம் துரதிஸ்டவசமாக அமைச்சரவை அங்கீகாரம் நடைமுறைப்படுத்தப்படாமலும் அரச வர்த்தமானி வெளியிடப்படாமலும் வெறும் 7.78 சதுரகிலோமீட்டர் நிலத்துடன் கோறளை மத்தி பிரதேச செயலகம் துவங்கி வைக்கப்பட்டது. இன்றுவரை இந்நிலையே நீடிக்கின்றது.
எல்லை நிர்ணய விடயத்தில் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கும் அரசாங்க நடைமுறைக்கும் மேலதிகமாக அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் இருந்த மர்ஹ{ம் முகைதீன் அப்துல் காதர் அவர்களினால் எவ்வாறு இந்த 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்?. அரச காணி விடயத்தில் அதனை விட்டுக் கொடுப்பதற்கும் தக்க வைத்திருப்பதற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான வகிபாகம் என்ன?.
மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களே இதை விட்டுக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறெனின் அவர் எல்லாவற்றையும் தாண்டி தன்னிச்சையாக முடிவெடுக்க இந்த நிலங்கள் அவரது தந்தை வழி சொத்தா? அதுவுமில்லை. அப்படி இருந்தும் ஏன் முழு கல்குடாத் தொகுதி முஸ்லிம்களும் இந்த விடயத்தில் அவரை எதிர்த்து நிற்கவில்லை?. புத்திஜீவிகள் என்று ஒரு உயர் வர்க்கம் இருந்ததே அவர்களாவது இதற்கெதிராக கிளம்பியிருக்கலாமே. நிலம் பறிபோகிறது என்று முழு ஊரையும் கூட்டி மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களுக்கும் அரசாங்க ஆணைக்குழுவுக்கும் எதிராக எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கலாம். ஏன் அதனை செய்யவில்லை?.
அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் அது அரசாங்கத்தின் முடிவு.
எல்லாவற்றையும் புதுனம் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு மரணித்த ஒருவரின் தலையில் பழியைப் போடுகின்றோம். இந்த பழிபோடுதல் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இரண்டு வகையான பழிகள் அவர் மீது திட்டமிட்டு பரப்பப்பட்டு அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதில் ஒன்று ஊர்த்துவேசம்: ஓட்டமாவடி மக்களின் காணியை தமிழர்களுக்கு விட்டுக் கொடுத்து வாழைச்சேனைக்கு தனியான பிரதேச செயலகம் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டது.
இன்னொன்று பன்னம்பலன ஆணைக்குழுவின் பரிந்துரைகளினால் அரசாங்க உத்தரவுப்படி விட்டுக் கொடுக்கப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளையும் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் தனியொரு ஆளாக அவரது வீட்டுக் காணியைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டார் என்று திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.
இவையெல்லாம் காரணமின்றி பரப்பப்படவில்லை. மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அதே சமகாலப்பகுதியில் சுகயீனமுற்றிருந்த வேளையில் அவரை கல்குடா அரசியலில் இருந்து வெளியேற்றி இன்னொருவரைக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட வேலைத் திட்டமாக இது இருந்தது. அது அப்போதைய பிரச்சாரங்களின் முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது.
பிழை எங்கே யாரால் நடந்தது?
ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான மேலதிக இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கத்துடன் வாகரை எல்லையிலுள்ள இரு பிரிவுகளையும் இணைத்து தற்போதுள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாக 11 கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட்டு 240 சதுர கிலோமீட்டர் நிலம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் இழந்த கிராம சேவகர் பிரிவுகள் பற்றிய பேச்சுக்கே இடமிருந்திருக்காது.
ஆணைக்குழுவின் பரிந்துரையையும் அமைச்சரவை அங்கீகாரத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த அரச வர்த்தமானி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிய மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் (சுகயீனமுற்றிருந்தமை) அதன் பின்னர் வந்த அரசியல் தலைமை இவர்களோடு கூடவே இருந்த புத்திஜீவிகள் அழுத்தம் கொடுக்கத் தவறியமை மற்றும் இவர்கள் அனைவருக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கத் தவறிய பொதுமக்கள் ஆகிய நாமும்தான் காரணம்.
அதேவேளை முன்னாள் அமைச்சர் அமீர்அலி அவர்களும் மாவட்டம் தொடக்கம் பாராளுமன்றம் வரையும் இவ்விடயத்தை பல தடவைகளில் புள்ளி விபரங்களுடன் கொண்டு சென்றிருந்தார். அண்மையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்றத்திற்குக் கொணடு சென்றிருந்தார். அதேபோன்று பாராளுமனற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அவர்களும் பேசியிருந்தார். இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் பஷீர் சேகுதாவுத் அவர்களும் சில தடவைகளில் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.
இனிவரும் காலங்களில் கூட்டான முயற்சி ஒன்றின் மூலம் தொடர் அழுத்தங்களை இவ்விடயத்தில் காட்டி கோறளைப்பற்று மத்திக்கான 240 சதுர கிலோமீட்டர் நிலத்தைப் பெறுவதே ஒரே தீர்வு. ஏற்கனவே 5 கிராம சேவகர் பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் மாத்திரமே கிரானுக்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர அதன் பெரும்பாலான உரிமைகள் எமது ஊரைச் சேர்ந்தவர்களுக்கே சொந்தமாக உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
-ஆதம் றிஸ்வின்-