0
“கல்குடாவில் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்” - ஏ.எல்.எம். சதாம்
Posted in
கல்குடா ACMC இளைஞர் அணியின் அன்பளிப்புடன் இளம்பிறை விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று 08.12.2018ம் திகதி 04.30 மணியளவில் மீராவோடையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் அமைப்பாளர் ஏ.எல்.எம். சதாம் அவர்கள் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து பாவனை இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவதனையும், இளைஞர்கள் போதைவஸ்தின் பக்கம் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் அதனை தடுத்து நிறுத்த இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இன்றைய இளைஞர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
அத்தோடு சமூகத்திலுள்ள சகல மட்டத்தினரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டு ஒரு கட்டமைப்பின் கீழ் போதைவஸ்து பரவலுக்கெதிராக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இல்லாதுபோனால் எமது ஊர் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தானதொன்றாக மாறி முஸ்லிம் சமூகத்திற்கே பெரியதொரு சவாலாக அமைந்துவிடும் என்றும் மேலும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் அல்தாப் அலி அவர்களும், முன்னாள் மீன்பிடி நீரியல்வள, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.எம். றிஸ்மின் (ஆசிரியர்) அவர்களும், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் அவர்களும், செம்மண்ணோடை பிரதேச சபை வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியர் அவர்களும் இன்னும் சில அதிதிகளும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பட உதவி நுசைக் அஹமட்