Follow me on Twitter RSS FEED

கிழக்கின் ஆளுனர் தன் அதிகாரத்தை படிப்படியாக இழந்து வருகின்றாரா?

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
இன்று 23.03.2019ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதமரின் பங்கு பற்றுதலோடு இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கும் வைபவத்தில் சுமார் 7206 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த காணி உறுதிகள் வழங்கலில் மட்டு.மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு தலைப்பட்சமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநரின் முயற்சியில் சுமார் 7206 காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும், மற்றொரு செய்தியில் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் தானா என்ற கேள்வியும் எழுகின்றது.

இதே நிலையில், மாகாண சபையின் ஆட்சி மாறி, கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மூவினத்திற்கும் பொதுவான அடிப்படையில் தனது சேவைகளை முன்னெடுத்து வரும் ஆளுநர் ஒட்டுமொத்த மாகாணத்தின் அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துள்ள அவர், காணி உறுதி வழங்கலில் தனது அதிகாரத்தை இழந்துள்ளாரா?

அல்லது முழு மாகாணத்தின் அதிகார மையமாக ஆளுநர் இருக்கத்தக்கதாக அதிகாரிகளின் கை மேலோங்கி ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளனரா?

ஏனென்றால், வழங்கப்படும் சுமார் 7206 உறுதிகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்து இல்லாவிட்டாலும் மாவட்ட விகிதாசார அடிப்படையிலாவது சுமார் இரண்டாயிரம் உறுதிகளேனும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமை மாகாண ஆளுநர் மாவட்ட அதிகார மையத்திடம் தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

தசாப்த கால முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு நியாயமான அடிப்படையில் தமிழ் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தீர்வு கிடைக்குமென நம்பியிருந்த மாவட்ட முஸ்லிம்களுக்கு இவ்வாறாக அநீதியிழைக்கப்பட்டுள்ளமை வரலாற்று ரீதியில் நடந்து வரும் நிருவாக அடக்குமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

முஸ்லிம் ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக சேவையாற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எப்போதும் முஸ்லிம் சமூகத்திடம் இல்லை. கிடைக்க வேண்டிய பங்கீடு கிடைக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

அதே நேரம், கடந்த 02.03.2019, 03.03.2019ம் திகதிகளில் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை இட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு தலைப்பட்சமாக தமிழினத்திற்கும் மாத்திரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள செய்திகள் வெளியில் கசிந்தமையால் குறித்த மாகாண அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டனரா? என இப்போது சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

யுத்த காலத்தில் பயங்கரவாத அடக்குமுறைக்குள் தமது நிலபுலங்களை இழந்த முஸ்லிம்கள் பயங்கவாதம் முற்றுப்பெற்றும் நிருவாகப் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படுவதையும் அநீதியிழைக்கப்படுவதையும் அரசியல் தலைமைத்துவங்கள் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதனூடாக எதிர்காலத்தில் தமது இருக்கைக்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு செயற்படுகிறார்களா?

தமது எதிர்கால அரசியல் இருப்புக்காக சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த மாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காக அதே சமூகத்திடம் மண்டியிட்டுக் கிடக்கும் சூழலை நநாமே உருவாக்குகின்றோம் என்பதே மறைமுக உண்மை என்பதை மனதிற்கொண்டு ஒட்டுமொத்த மாகாண அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ள ஆளுநர் காணி வழங்கலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு காணி வழங்கலில் முஸ்லிம்கள் முற்றாகப்புறக்கணிப்பு : திட்டமிட்ட அநீதி

Posted in
எம்.ஐ.லெப்பைத்தம்பி 
தகவல் உதவி-ஏ.எச்.நுபைல் 

நாளை 23.03.2019ம் திகதி சனிக்கிழமை பிரதமர் தலைமையில் மட்டு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கலில் மட்டு மாவட்ட முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். பல தாசப்த காலமாக பல்வேறு கோணங்களில் காணி வழங்கலிலும் காணிக்கான உறுதி வழங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் நாளைய நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அதிகாரிகளின் ஒரு தலைப்பட்சமான செற்பாடாகும்.


மட்டு மாவட்டத்திலும் குறிப்பாக கல்குடா பிரதேசத்திலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான், வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பல ஆண்டு காலமாக காணி ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதும் அநீதி இழைக்கப்பட்டே வருவதும் எவராலும் மறுதலிக்க முடியாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சமூக மட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்களிடம் மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், நாளை 23.03.2019ம் திகதி நாட்டின் பிரதமர் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த முஸ்லிம்களுக்கு கடைசியாக இருந்த நம்பிக்கையும் இழந்து போயுள்ளது. இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு காணிப்பிரச்சினை உண்டென்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக முஸ்லிம்களுக்கு நெடுங்காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றமையை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கான காணிப்பங்கீடு மாவட்டத்தில் சரியாக பின்பற்றப்படாத நிலையில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளுக்குக்கூட செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் அரச மட்ட அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காலாகாலமாக இருந்து வரும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தேர்தல் கால பேசு பொருளாக மட்டும் இருந்து வருகிறதேயொழிய, அதற்கான தீர்வுகள் தொடர்பில் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெட்டத்தெளிவானது. இதற்கான பழியை மாவட்ட முஸ்லிம் தலைமைகளும் உள்ளூர் அரசியல் தலைமைகள், சமூக அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். வெறுமனே தேர்தல் கால கோசங்களாகவும் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த மக்களுக்கு கானல் நீராகவுமே போய் விட்டதை தற்போது உணர்கிறோம். நாட்டின் பிரதமர் கையாலேயே இந்த அநியாயம் நடக்கப் போகிறதே என்பதுடன், நாளைய நிகழ்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு என்ன பதிலை வழங்கப்போகிறார்கள்? நாளை நிகழ்வில் இழைக்கப்பட்டுள்ள முஸ்லிகளுக்கான அநீதியைக் கண்டித்து, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் நிகழ்வை புறக்கணிக்க போகிறார்கள்? சுமார் 7206 உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதில் எத்தனை உறுதிகளை பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க போகிறார்கள்.

அதே நேரம் சுமார் 800 உறுதிகள் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வழங்கப்படவுள்ள நிலையில் ஒரு முஸ்லிமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிய வருகிறது. இப்பிரதேசத்திலுள்ள சுமார் ஐந்து கிராம சேவகர்கள் தற்காலிக இணைப்பாக தாரைவார்க்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் அரச இயந்திரத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். எனவே, நிச்சயமாக நாம் போராடி எமது காணிப்பிரச்சிக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளாதவரை எவரும் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதானது இருப்பதையும் பறி கொடுக்கும் நிலையையே தோற்றுவிக்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு ஹரீஸ் எம்.பியே பொருத்தமானவர்

Posted in
-முஹம்மட் அர்ஹம் (சாய்ந்தமருது)-

ஆல விருட்சமாய் வியாபித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் தலைமைத்துவப் போட்டிகளினாலும் காட்டிக் கொடுப்புகளினாலும் துண்டாடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் கட்சியில் இருந்த சகல பிரதிநிதிகளும் தம்மாலான விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவப் பொறுப்பைப் பாதுகாப்பதற்காக இன்றுவரை செய்து வந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்த ரவூப் ஹக்கீம் அவர்களை தலைமைத்துவமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட எமது கட்சிப் போராளிகளின் உன்னதத் தன்மைக்கு பிரதியுபகாரமாக அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தலைமை நிறைவேற்ற தவறியுள்ளமையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கையில் தலைமைத்துவ செயற்பாடுகளும் வலுவிழந்து கொண்டு வருகின்றமையையும் நாம் கண் முன்னே கண்டு வருகின்றோம். 

சாணக்கியம் எனும் பெயரில் பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி இழுத்தடிப்புச் செய்வதினால் ஒவ்வொரு பிரதேச போராளிகளும் மனதளவிலும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 

தீகவாபி பிரச்சினையாக இருக்கட்டும், ஒலுவில் துறைமுகப் பிரச்சினையாக இருக்கட்டும், மண்ணறிப்புப் பிரச்சினையாக இருக்கட்டும், சாய்ந்தமருது பிரதேச சபை விடயமாக இருக்கட்டும் கோறளை மத்தி பிரதேச சபை உருவாக்கமாக இருக்கட்டும். இவை போன்ற பல பிரச்சினைகள் எழுந்தபோது நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை நம்பி நின்ற கட்சி போராளிகளுக்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. அனைத்தும் சாணக்கியம் என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு தேர்தல் காலங்களில் தூசு தட்டி எடுக்கப்படும் விடயங்களாகவே காணப்படுகின்றன. 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஹரீஸ் எம்.பி. அவர்கள் தீர்வுகளை காலத்திற்குக் காலம் முன்வைத்திருந்தாலும் அதனை தலைமைத்துவம் ஏற்காமல் விட்டது மட்டுமன்றி அவரையும் சுயாதீனமாக இயங்க விடாமல் முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது. 

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவு தொடக்கம் இன்றுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ விடயத்தில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளதானது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு சமகால சூழ்நிலையில் மிகப் பொருத்தமானவர் யார் என்று பார்த்தால் அது கௌரவ ஹரீஸ் எம்.பி. அவர்கள் மட்டுமேயாகும். செயல் வீரராகவும் இளம் தலைவராகவும், அனைவரையும் சாந்தமாக அரவணைத்து போவதற்கும் பிரச்சினைகளின் போது களத்தில் முன் நிற்பதற்கும் பொருத்தமானவர் ஹரீஸ் எம்.பி. அவர்கள் மாத்திரமே. ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடாத்தக் கூடிய தகைமையுள்ள ஹரீஸ் எம்.பி. அவர்களிடம் தலைமைத்துவப் பொறுபப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எம் இளம் சந்ததியினரின் எதிர்பார்ப்பாகும். 


ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்

Posted in
-M.T.M. Haithar Ali-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டமாகும்.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட வீதிகளை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டம் கடந்த 10.05.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.

இதன் போது, காத்தான்குடி பிரதேசம் உட்பட அதன் அயல் கிராமங்களின் வீதிகளை உள்வாங்கும் விடயத்தில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் வீதிகளை ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.

இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.

இதன் பிரகாரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் தங்களுக்கு எத்தகைய சம்பந்தமுமில்லாத, முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஐ ரோட் வேலைத் திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், பொய்யான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுவதுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே, போலியான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய அரசியல் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இத்திட்டத்திற்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் இது கிழக்கு மாகாணம் ரீதியாக செயற்படுத்தப்படும் திட்டம் என்பதைகூட அறிந்திராதவர்கள் காத்தான்குடிக்கு என்னுடைய அழுத்தத்தால் “ஐ ரோட் (I Road)” திட்டம் அமுலாக்கப்படப்போகின்றது என்று சிறுபிள்ளைதனமாக முகப்புத்ததகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றார்கள் இதற்கான மறுப்பினை ஆதாரபூர்வமாக கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாகவும், ஆவணங்களினூடாகவும் காணொளியினூடாகவும் காணமுடியும்.