Follow me on Twitter RSS FEED

கிழக்கின் ஆளுனர் தன் அதிகாரத்தை படிப்படியாக இழந்து வருகின்றாரா?

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
இன்று 23.03.2019ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதமரின் பங்கு பற்றுதலோடு இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கும் வைபவத்தில் சுமார் 7206 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த காணி உறுதிகள் வழங்கலில் மட்டு.மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு தலைப்பட்சமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநரின் முயற்சியில் சுமார் 7206 காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும், மற்றொரு செய்தியில் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் தானா என்ற கேள்வியும் எழுகின்றது.

இதே நிலையில், மாகாண சபையின் ஆட்சி மாறி, கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மூவினத்திற்கும் பொதுவான அடிப்படையில் தனது சேவைகளை முன்னெடுத்து வரும் ஆளுநர் ஒட்டுமொத்த மாகாணத்தின் அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துள்ள அவர், காணி உறுதி வழங்கலில் தனது அதிகாரத்தை இழந்துள்ளாரா?

அல்லது முழு மாகாணத்தின் அதிகார மையமாக ஆளுநர் இருக்கத்தக்கதாக அதிகாரிகளின் கை மேலோங்கி ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளனரா?

ஏனென்றால், வழங்கப்படும் சுமார் 7206 உறுதிகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்து இல்லாவிட்டாலும் மாவட்ட விகிதாசார அடிப்படையிலாவது சுமார் இரண்டாயிரம் உறுதிகளேனும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமை மாகாண ஆளுநர் மாவட்ட அதிகார மையத்திடம் தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

தசாப்த கால முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு நியாயமான அடிப்படையில் தமிழ் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தீர்வு கிடைக்குமென நம்பியிருந்த மாவட்ட முஸ்லிம்களுக்கு இவ்வாறாக அநீதியிழைக்கப்பட்டுள்ளமை வரலாற்று ரீதியில் நடந்து வரும் நிருவாக அடக்குமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

முஸ்லிம் ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக சேவையாற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எப்போதும் முஸ்லிம் சமூகத்திடம் இல்லை. கிடைக்க வேண்டிய பங்கீடு கிடைக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

அதே நேரம், கடந்த 02.03.2019, 03.03.2019ம் திகதிகளில் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை இட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு தலைப்பட்சமாக தமிழினத்திற்கும் மாத்திரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள செய்திகள் வெளியில் கசிந்தமையால் குறித்த மாகாண அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டனரா? என இப்போது சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

யுத்த காலத்தில் பயங்கரவாத அடக்குமுறைக்குள் தமது நிலபுலங்களை இழந்த முஸ்லிம்கள் பயங்கவாதம் முற்றுப்பெற்றும் நிருவாகப் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படுவதையும் அநீதியிழைக்கப்படுவதையும் அரசியல் தலைமைத்துவங்கள் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதனூடாக எதிர்காலத்தில் தமது இருக்கைக்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு செயற்படுகிறார்களா?

தமது எதிர்கால அரசியல் இருப்புக்காக சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த மாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காக அதே சமூகத்திடம் மண்டியிட்டுக் கிடக்கும் சூழலை நநாமே உருவாக்குகின்றோம் என்பதே மறைமுக உண்மை என்பதை மனதிற்கொண்டு ஒட்டுமொத்த மாகாண அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ள ஆளுநர் காணி வழங்கலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

0 comments: