Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பு காணி வழங்கலில் முஸ்லிம்கள் முற்றாகப்புறக்கணிப்பு : திட்டமிட்ட அநீதி

Posted in
எம்.ஐ.லெப்பைத்தம்பி 
தகவல் உதவி-ஏ.எச்.நுபைல் 

நாளை 23.03.2019ம் திகதி சனிக்கிழமை பிரதமர் தலைமையில் மட்டு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கலில் மட்டு மாவட்ட முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். பல தாசப்த காலமாக பல்வேறு கோணங்களில் காணி வழங்கலிலும் காணிக்கான உறுதி வழங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் நாளைய நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அதிகாரிகளின் ஒரு தலைப்பட்சமான செற்பாடாகும்.


மட்டு மாவட்டத்திலும் குறிப்பாக கல்குடா பிரதேசத்திலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான், வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பல ஆண்டு காலமாக காணி ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதும் அநீதி இழைக்கப்பட்டே வருவதும் எவராலும் மறுதலிக்க முடியாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சமூக மட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்களிடம் மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், நாளை 23.03.2019ம் திகதி நாட்டின் பிரதமர் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த முஸ்லிம்களுக்கு கடைசியாக இருந்த நம்பிக்கையும் இழந்து போயுள்ளது. இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு காணிப்பிரச்சினை உண்டென்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக முஸ்லிம்களுக்கு நெடுங்காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றமையை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கான காணிப்பங்கீடு மாவட்டத்தில் சரியாக பின்பற்றப்படாத நிலையில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளுக்குக்கூட செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் அரச மட்ட அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காலாகாலமாக இருந்து வரும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தேர்தல் கால பேசு பொருளாக மட்டும் இருந்து வருகிறதேயொழிய, அதற்கான தீர்வுகள் தொடர்பில் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெட்டத்தெளிவானது. இதற்கான பழியை மாவட்ட முஸ்லிம் தலைமைகளும் உள்ளூர் அரசியல் தலைமைகள், சமூக அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். வெறுமனே தேர்தல் கால கோசங்களாகவும் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த மக்களுக்கு கானல் நீராகவுமே போய் விட்டதை தற்போது உணர்கிறோம். நாட்டின் பிரதமர் கையாலேயே இந்த அநியாயம் நடக்கப் போகிறதே என்பதுடன், நாளைய நிகழ்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு என்ன பதிலை வழங்கப்போகிறார்கள்? நாளை நிகழ்வில் இழைக்கப்பட்டுள்ள முஸ்லிகளுக்கான அநீதியைக் கண்டித்து, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் நிகழ்வை புறக்கணிக்க போகிறார்கள்? சுமார் 7206 உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதில் எத்தனை உறுதிகளை பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க போகிறார்கள்.

அதே நேரம் சுமார் 800 உறுதிகள் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வழங்கப்படவுள்ள நிலையில் ஒரு முஸ்லிமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிய வருகிறது. இப்பிரதேசத்திலுள்ள சுமார் ஐந்து கிராம சேவகர்கள் தற்காலிக இணைப்பாக தாரைவார்க்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் அரச இயந்திரத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். எனவே, நிச்சயமாக நாம் போராடி எமது காணிப்பிரச்சிக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளாதவரை எவரும் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதானது இருப்பதையும் பறி கொடுக்கும் நிலையையே தோற்றுவிக்கும்.

0 comments: