Posted in
-முஹம்மட் அர்ஹம் (சாய்ந்தமருது)-
ஆல விருட்சமாய் வியாபித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் தலைமைத்துவப் போட்டிகளினாலும் காட்டிக் கொடுப்புகளினாலும் துண்டாடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் கட்சியில் இருந்த சகல பிரதிநிதிகளும் தம்மாலான விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவப் பொறுப்பைப் பாதுகாப்பதற்காக இன்றுவரை செய்து வந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்த ரவூப் ஹக்கீம் அவர்களை தலைமைத்துவமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட எமது கட்சிப் போராளிகளின் உன்னதத் தன்மைக்கு பிரதியுபகாரமாக அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தலைமை நிறைவேற்ற தவறியுள்ளமையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கையில் தலைமைத்துவ செயற்பாடுகளும் வலுவிழந்து கொண்டு வருகின்றமையையும் நாம் கண் முன்னே கண்டு வருகின்றோம்.
சாணக்கியம் எனும் பெயரில் பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி இழுத்தடிப்புச் செய்வதினால் ஒவ்வொரு பிரதேச போராளிகளும் மனதளவிலும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
தீகவாபி பிரச்சினையாக இருக்கட்டும், ஒலுவில் துறைமுகப் பிரச்சினையாக இருக்கட்டும், மண்ணறிப்புப் பிரச்சினையாக இருக்கட்டும், சாய்ந்தமருது பிரதேச சபை விடயமாக இருக்கட்டும் கோறளை மத்தி பிரதேச சபை உருவாக்கமாக இருக்கட்டும். இவை போன்ற பல பிரச்சினைகள் எழுந்தபோது நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை நம்பி நின்ற கட்சி போராளிகளுக்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. அனைத்தும் சாணக்கியம் என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு தேர்தல் காலங்களில் தூசு தட்டி எடுக்கப்படும் விடயங்களாகவே காணப்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஹரீஸ் எம்.பி. அவர்கள் தீர்வுகளை காலத்திற்குக் காலம் முன்வைத்திருந்தாலும் அதனை தலைமைத்துவம் ஏற்காமல் விட்டது மட்டுமன்றி அவரையும் சுயாதீனமாக இயங்க விடாமல் முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவு தொடக்கம் இன்றுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ விடயத்தில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளதானது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு சமகால சூழ்நிலையில் மிகப் பொருத்தமானவர் யார் என்று பார்த்தால் அது கௌரவ ஹரீஸ் எம்.பி. அவர்கள் மட்டுமேயாகும். செயல் வீரராகவும் இளம் தலைவராகவும், அனைவரையும் சாந்தமாக அரவணைத்து போவதற்கும் பிரச்சினைகளின் போது களத்தில் முன் நிற்பதற்கும் பொருத்தமானவர் ஹரீஸ் எம்.பி. அவர்கள் மாத்திரமே. ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடாத்தக் கூடிய தகைமையுள்ள ஹரீஸ் எம்.பி. அவர்களிடம் தலைமைத்துவப் பொறுபப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எம் இளம் சந்ததியினரின் எதிர்பார்ப்பாகும்.