Follow me on Twitter RSS FEED

வாழைச்சேனை பிரதேச சபையின் பொண்டுகள்சேனை புனித கங்கைப் பிரகடனமும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும்

Posted in

நன்றி - thehotline.lk

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பொண்டுகள்சேனை பிரதேசத்தில்  அமைந்துள்ள  மகாவலி  கங்கையின் கிளை ஆற்றினை புனித கங்கையாகப்  பிரகடனப்படுத்தி வாழைச்சேனை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது.  வயல் சார்ந்த பிரதேசத்தில் காணப்படும் இந்த ஆற்றுப்பகுதி மூலம் இப்பிரதேசத்தில் காணப்படும் வயல்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கி வருவதுடன், இப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம்கள் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலுமில்லாமல் அரச மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் இலட்சினை பொறிக்கப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபையால் குறித்த பகுதி புனித கங்கையாகப் பிரகனப்படுத்தப்பட்டுள்ளமை பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது

குறிப்பாக, இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்களை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை எனத்தெரிவித்தனர். அதே நேரம், ஒரு இடத்தை புனித பிரதேசமாக அறிவிப்புச் செய்வது அரசாங்கமாகும். ஆனால், புனித கங்கை என எதுவித வர்த்தமானி அறிவித்தலிலோ பிரசுரிக்கப்படாத ஓரிடத்தை எவ்வாறு புனித கங்கையாக பிரகடனப்படுத்த முடியுமென பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறித்த ஆறும் அதனோடு இணைந்த பகுதிகளும் அதன் புனரமைப்பும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கே உரித்தானது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இச்செயற்பாடு இரு இனங்களுக்கிடையிலும் ஒரு சந்தேகப்பார்வையை உண்டு பண்ணியுள்ளதோடு, ஆட்சியில் பங்காளர்களாகவுள்ள முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது இன விரிசலை உண்டு பண்ணும் செயலாகவும் அமையுமென கவலை தெரிவிக்கின்றனர்.
ஆட்சியில் பங்காளிகளாக முஸ்லீம் காங்கிரஸ் சேர்ந்ததே இன ஒற்றுமை ஏற்படும் என்பதற்காக என்று தான் சொல்லப்பட்டது. அப்படியென்றால், இதனை என்னவென்று சொல்வது? கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் இருந்த கிராம சேவகர் பிரிவுகளை தாரைவார்த்துக் கொடுத்து நிருவாக ரீதியாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வரும் இப்பிரதேச முஸ்லிம்களை மென்மேலும் ஒரு குறுகிய நிலப்பரப்புகள் சுருக்கி விடுவதற்கான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது

இது விடயத்திலும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை இழந்துள்ள கிராம சேவகர் பிரிவுகளை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பிரதேச உள்ளூர் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் கனிந்துள்ளதாக மேற்குறித்த புனித கங்கையாகப் பிரகனப்படுத்தப்பட்ட செய்தி குறித்து நிற்கிறது.

கிராம சேவகர் பிரிவுகளை மீட்பது வெறுமனே தேர்தல் கால கோசங்களாக மாத்திரம் இருந்து விடாது, எம் சமூகம் இழந்து நிற்கும் எமது நிலப்பரப்பையாவது பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கட்சி பேதங்களை மறந்து சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலியும் சரி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசும் சரி தேர்தல் வாக்குறுதியோடு நிறுத்தி விடாமல் கட்சி பேதங்களுக்கப்பால் இதைப்பெற்றுத்தர வேண்டும். மேடைப்பேச்சாக மாத்திரம் இவ்விடயம் இருந்து விடக்கூடாது. இது விடயத்தில் கரிசணையற்றிருப்போமானால் எஞ்சி இருக்கும் குறுகிய நிலப்பரப்புகளையும் இழந்து இருப்பிடமிழந்த சமூகமாக இப்பிரதேச மக்கள் மாறும் அபாயகரமான சூழல் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. இது விடயத்தில் தனிப்பட்ட அரசியல் விமர்சனங்களை தள்ளி வைத்து, ஆக்கபூர்வமான செயற்பாடுகளே அவசியமாகின்றது.

ஓய்வு பெற்றுச் செல்லும் மீராவோடை உப தபாலகத்தின் உப தபாலதிபரும், தரமுயர்த்தப்பட இருக்கும் தபாலகமும்

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-


மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீராவோடை உப தபாலகத்தின் உப தபாலதிபராக கடமையாற்றி வந்த சம்சுதீன் அப்துல் ஹமீது (இஸ்மாயில்) 2018.08.11ஆம்திகதி - சனிக்கிழமையுடன் தனது 23 வருடகால சேவைக்காலத்தினை நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

தனது 23 வருடகால உப தபாலதிபர் சேவைக்காலத்தில் தனது பணியினை திறன்பட ஆற்றியதுடன், நாளாந்தம் இவ் தபாலகத்தில் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக வருகைதரும் பொதுமக்களுக்கு தன்னால் முடியுமான வகையில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நீதியாகவும், நேர்மையாகவும்சேவைகளை வழங்கிய ஒருவராகும்.

ஒரு நபர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பலித்து தனது கடமையினை நீதியாகவும், நேர்மையாகவும், செயற்படுத்தும்போது சிலருக்கு அவரின் செயற்பாடுகள் பிடிக்காமல் இருக்கலாம் அதற்கு அவர் பொறுப்பாகமுடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறான நிலை எவருக்கும் தோன்றி இருந்தால் தனது சேவைக் காலத்திலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இத்தருணத்தில் எவருக்கேனும் தீங்கிழைக்கப்பட்டிருந்தால் அதனை நாம் மன்னிப்பது நமது பெறுந்தன்மையாகும்.

தனது சேவையின் முதல் நியமனத்தினை 1990.03.24ஆம் திகதி தற்காலிக நியமனத்துடன் சேவையினை ஆரம்பித்து கடமையாற்றிய நிலையில் 1995.07.24ஆம்திகதி நிரந்தர நியமனத்தில் அமர்த்தப்பட்டு அன்று தொடக்கம் தனது இறுதி சேவைக் காலமான 2018.08.11ஆம்திகதி வரை உப தபாலதிபராக கடமையாற்றியுள்ளதுடன், தனது பணியினூடாக மக்களுக்கான சேவையினை திறன்பட செய்து இன்று அச்சேவையிலிருந்து பிரியாவிடையும் பெற்றுள்ளார்

மீராவோடை உப தபாலகமானது 1953.04.16ஆம் திகதி மீராவோடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆரம்பிக்கப்பட்ட அன்று தொடக்கம் இன்றுவரை தரமுயர்த்தப்படாத நிலையில் உப தபாலகமாகவே காணப்படுகின்றது
மீராவோடை உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்த வேண்டுமென்ற எண்ணமும், ஆசையும் கல்குடாத் தொகுதியின் முதல் முஸ்லிம் மக்கள் பிரதிநிதியான மர்ஹூம் முன்னாள் பிரதியமைச்சர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் கனவாகவும் இருந்துள்ளது.

அத்துடன், இந்த உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதற்கானதொரு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கிவந்த நிலையில் அதற்கானதொரு காணி கொள்வனவு செய்யப்பட்டு, நிரந்தர கட்டிடம் அமையப் பெற்று தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற எண்ணம் தற்போது ஓய்வுபெற்றுச் சென்றுள்ள உப தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது அவர்களின் கனவாகவும், ஆசையாகவும் இருந்தது

இதற்காக அவர் பல்வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு அவைகளில் அவர் தோற்றுப்போனார். அவரின் ஆசைகளில் ஒன்றான இந்த உப தபாலகம் தன்னுடைய சேவைக்காலத்தில் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாத நிலையில் இன்று ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்

அத்துடன், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்குச் சொந்தமான காணியில் ஒரு சிறு பகுதியினை பெற்று பொதுமக்களின் நன்மைகருதி உப தபாலகத்திற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு உப தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது மற்றும் இப்பிரதேச மக்கள் ஆகியோரால் அப்போதைய ஜூம்ஆப் பள்ளிவாயலின் தலைவராக இருந்த அல்ஹாஜ். எஸ்.. அஹமது முகைதீன் (மகுமூது ஹாஜியார்) அவர்களின் தலைமையிலுள்ள நிருவாகத்தினரிடம் இட ஒதுக்கீடு கோரிக்கை ஒன்றினை  முன்வைத்திருந்தனர்.

அதன் பயனாக பொதுமகக்ளின் தேவையினையும், அவர்களுக்கான சேவையினையும் உணர்ந்து கொண்ட பள்ளிவாயல் நிருவாகத்தினர் நிரந்தர கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிவாயல் காணியிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தினை உப தபாலக கட்டிடம் அமையப்பெறுவதற்கு நன்கொடையாக வழங்கியிருந்தனர்

அதன் பிற்பாடு, அப்போது தபால், தபால் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சராக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், தற்போதைய நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களினால் தனது தபால் அமைச்சினூடாக ரூபா. எண்பத்தியேழு இலட்சம் (8700000/-) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிவாயலினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் சகல நவீன வசதிகளையும் கொண்ட வகையில் மீராவோடை உப தபாலகத்திற்கான கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு நிறைவுற்ற சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் அவர்களினால் 2011.11.11ஆம்திகதி உத்தியோகபூர்வமாக திறந்தும் வைக்கப்பட்டது.

அதன்பிற்பாடு தனது மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016ஆம் ஆண்டு மீராவோடை உப தபாலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டபோது இன்று ஓய்வுபெற்றுச் சென்றுள்ள உப தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது அவர்களினால் தன்னாள் முன்னெடுக்கப்பட்ட விடயங்களையும், அதில் ஏற்பட்ட தடைகளையும், அதனால் தரமுயர்த்தப்படாமல் புரக்கணிக்கப்பட்டு வருவதனையும் சுட்டிக்காட்டி இவ் உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்தி தருமாறு அச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார்.

இதனை கருத்திற்கொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இதனை தரமுயர்த்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதாவும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு இவ் உப தபாலகத்தினால் சுற்றிவர நன்மையடையும் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக அமைப்புக்கள் என 45 நிறுவனங்களிடம் இவ் உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்தி தருமாறு வழங்கப்பட்ட சிபாரிசு கடிதங்கள் அடங்கிய ஆவணங்கள் 2016.10ஆம் மாதம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

அதன் தொடர் முயற்சியின் பயனாக மட்டு மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நேரில்சென்று கலந்துரையாடி இவ் உப தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தினை உணரச் செய்து தயாரிக்கப்பட்ட ஆவணங்களையும் கையளித்திருந்தார்.

மாகாண சபை உறுப்பினரினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் அதிகாரிகள் மட்டத்தில் நிருவாக ரீதியில் இவ் உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்துவதற்குரிய மேலதிக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு சகல சிபாரிசுகளுடனும் தபால், தபால் தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிற்பாடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மக்ரூப் ஊடாக தபால், தபால் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ. எம்.எச்.. ஹலீம் அவர்களை கொழும்பிலுள்ள அவரின் அமைச்சில் நேரடியாக சந்தித்து மீராவோடை உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது அமைச்சர் தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் தரமுயர்த்துவதற்காக பல உப தபாலகங்கள் காணப்படுவதாகவும், இவற்றினை தரமுயர்த்துவதால் இவற்றுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள், ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை சார்ந்த தேவைப்பாடுகள் காணப்படும் என்பதனையும் சுட்டிக்காட்டியதுடன், மீராவோடை உப தபாலகம் மக்களுக்கான தேவையும், சேவையும் அதிகமாக காணப்படுவதாகவும் அதன் விரிவாக்கத்தையும் தரமுயர்த்த வேண்டிய தேவைப்பாட்டினையும் உணர்ந்துகொண்டார்.

மேலும், தன்னுடைய காலத்தில் நாட்டிலுள்ள உப தபாலகங்களை தரமுயர்த்துவதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறும்போது அவற்றில் துரிதகதியில் மீராவோடை உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு தரமுயர்த்தி தருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார்

இவ்வாறு அனைத்து விதமான நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் மீராவோடை உப தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தப்படும்போது இதற்காக மிகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு ஆரம்ப வித்திட்டு இறுதியில் அமைச்சரவையின் அனுமதியுடன் தரமுயர்த்தப்படும்போது இதன் முழு உரிமமும் உரித்துடையவர்களாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மட்டக்களப்பு மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் மற்றும் ஒய்வுபெற்றுச் செல்லும் மீராவோடை உப தபாலகத்தின் உப தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது ஆகியோரே என்றும் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களாகும்.

இந்த உப தபாலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் வயோதிபர்களின் நன்மைகருதி சில தளபாடங்களை பெற்றுக்கொடுத்த அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனம், இறால் பன்ணையாளர் சங்கம் மற்றும் வரவேற்பு கூரை திருத்த பனிக்காக நிதி உதவி செய்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரும் இவ்விடத்தில் நினைவுகூறப்பட வேண்டியவர்களாகும்.


50 இராணுவத்தினர் ரயில் சாரதிப் பயிற்சிக்காக இந்தியா பயணம்

Posted in
இலங்கை இராணுவத்தில் கடமை புரியும் வாகன சாரதிகளில் தேர்ச்சிபெற்ற 50 பேர்கள் தெரிவு செய்யப்பட்டு ரயில் இயந்திரத்தினை இயக்கும் சாரதிப் பயிற்சி பெறுவதற்காக உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். 


தற்போது நாட்டில் ரயில் சாரதிகள் மற்றும் ஊழியர்களின் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர், தூர இடங்களுக்குச் செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நிலைமையை ஓரளவேனும் சீர் செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரின் 44 பஸ் வண்டிகள் இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 28 பஸ் வண்கள் நாளை முதல் இலவச சேவையை முன்னெடுத்து ரயில் சேவை வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளைத் திருப்திப்படுத்த இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றனர். 

இதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரும் ரயில் சேவை வேலை நிறுத்தம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  அரச சேவையில் அதிக சம்பளம் பெரும் ஊழியர்களாக ரயில்வே பணியாளர்கள் காணப்பட்டாலும் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதானது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கியமாக ரயில் சாரதிகள் எதிர்காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை சுமூகமாக்கும் வகையில் இராணுவத்தினரை ரயில் சாரதிகளாகப் பயன்படுத்த இலங்கை இராணுவம் முன்வந்துள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக 50 தேர்ச்சி பெற்ற இராணுவ வாகன சாரதிகள் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு ரயில் ஓட்டுனர்களாக பயிற்சி பெற்று வரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ‘மோமோ’- பெற்றோர்களே ஜாக்கிரதை!!

Posted in


வாட்ஸ்அப்பில் மோமோ என்ற தற்கொலை கேம் பரவுவதால் உலக நாடுகளிலுள்ள பெற்றோர்கள் தமது குழுந்தைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென இங்கிலாந்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கேமை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டதே அதற்கு காரணம். உலகளவில் இதன் தாக்கத்தினால் சுமார் 130 பேர் வரை தற்கொலை செய்திருந்தனர். இதையடுத்து, இந்த கேமின் ஆபத்தை உணர்ந்த சர்வதேச நாடுகள், அதை தடை செய்தன. இந்நிலையில், தற்போது ‘மோமோ’ என்ற தற்கொலை கேம் வாட்ஸ்அப்பில் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னர் இளைய தலைமுறையினரை குறிவைத்து தாக்கிய அபாயகரமான விளையாட்டான ப்ளுவேல் விளையாட்டை தொடரந்து வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் கிகி சேலஞ்ச் பிரபல்யமானது. அந்த வரிசையில் தற்போது ”மோமோ செலஞ்ச்” விளையாட்டானது இணைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

மனநிலை பாதிக்கப்பட்ட ஏலியன் (வேற்றுக் கிரகவாசி) போன்ற தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன்னிறுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஏலியன் உருவமுள்ள பெண்ணின் பெயரே ”மோமோ” ஆகும். 

பேஸ்புக்கில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு போன் செய்ய வேண்டும் என தொடங்கிய இந்த சேலஞ்ச், சமூக வலைத்தளங்களில் கிகிசேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் வைரலாவதைப் போல, வாட்ஸ்அப்பில் பரவத் தொடங்கியது. 

இந்த சேலஞ்சில் பங்கேற்க, வாட்ஸ்அப்பில் பகிரப்படும் மோமோ என்ற எண்ணை சேமித்து, அதற்கு மெசேஜ் செய்ய வேண்டும். அந்த மோமோ தொடர்பு எண் பார்க்க மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் பேய் போல இருக்கும்.

ஆர்ஜன்டினா நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி கேம் ஒன்றை விளையாடியதன் பின்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். குறித்த சிறுமியின் செல்போனை ஆராய்ந்ததில் வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜை பார்த்த பின்பு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப்பில் வந்த ஒரு லிங்கில் மோமோ செலஞ்ச் கேம் இருந்துள்ளது. பேஸ்புக் மூலம் கைத்தொலைபேசி இலக்கம் எடுக்கப்பட்டு அதற்கு இந்த லிங் வட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த கேமில் மனநிலையைப் பாதிக்கும் வகையில் பல புகைப்படங்கள் முதலில் பகிரப்படுகின்றன. அதன் பிறகு ஒருவரது அந்தரங்கம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு கேமில் விறுவிறுப்புடன் பங்கேற்கத் தூண்டுகின்றனர். குறிப்பிட்ட ஒவ்வொரு படிமுறையிலும் வரும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சவாலை ஏற்காதவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும் என்பதுதான் மோமோ செலஞ்ச் கேம் ஆகும். 

அப்படி சவாலின் படி தற்கொலைக்கு முயற்சிக்காவிட்டால் நமது செல்போனிலிருந்து இரகசியமாகப் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களையும், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் நம்மிடம் கேள்விகேட்டு பெறப்பட்ட அந்தரங்க தகவல்களையும் இணையத்தில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டப்படுகிறது.

அதாவது மோமோ லிங்கை ஓபன் செய்தவுடனேயே எமது செல்போனின் கெமராவை எமக்குத் தெரியாமல் இயக்குவதற்கான அனுமதி மோமோ கேம் தளத்திற்குக் கிடைத்து விடுகிறது. இதனால் நமக்குத் தெரியாமலேயே நமது அந்தரங்கள் நமது செல்போனினூடாகவே பதிவுசெய்யப்பட்டு குறித்த தளத்திற்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது. நாங்கள் சவாலை ஏற்காமல் தற்கொலை செய்ய மறுத்தால் குறித்த வீடியோக்கள், போட்டோக்கள், நமது அந்தரங்க தகவல்கள் எல்லாம் வெளியாக்க நேரிடும் என மிரட்டப்படுவதால் இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

இதனால் மோமோ லிங் வட்ஸ்அப்பில் வந்தால் அதனை என்னவென்று பார்ப்போம் என்று கூட அதாவது தவறுதலாகக் கூட ஓபன் செய்யவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றோம். தங்களின் பிள்ளைகள் செல்போனில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 

PARENTAL CONTROL SETTINGS 

 

உங்களது போனில் அல்லது அன்டி வைரஸ் சொப்ட்வெயாரிலுள்ள, அல்லது சிஷ்டம் செகியூரிட்டி செட்டிங்ஸில் உள்ள பேரன்டல் கொன்ட்ரோல் மூலம் உங்களது பிள்ளைகள் செல்போனில் அல்லது கனணியில் எந்தெந்த பகுதியில் அல்லது இணையத்தில் அல்லது கேமில் எந்தெந்தப் பகுதிகளில் நுழைய அனுமதிக்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இதற்கான சொப்ட்வெயார் அப்ளிகேசன்கள் இணையத்திலிருந்தும் மேலதிகமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இலவசமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த அப்ளிகேசன் சிலவற்றின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்து உங்களுக்கேற்றால் போல் தன் குழந்தைகள் செல்போனில் எந்தெந்த செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்ற கட்டப்பாடுகளை விதித்துக் கொள்ள முடியும். 

BEST FREE PARENTAL CONTROL APPS FOR Android, iOs and Other Plateforms

01. Kaspersky Safe Kids - Kids Mode
02. Norton Family Parental Control
03. Kids Place Parental Control
04. Screen Time Parental Control
05. Funamo  Parental Control


-ஆதம் றிஸ்வின்-




நாம் நேற்று உத்தேசித்தது இன்று உண்மையாகியது...

Posted in

ஐக்கிய தேசியக் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவோடு சபையைக் கைப்பற்றும் என்று நேற்றே நாம் ஆதாரங்களை முன்வைத்து புலனாய்வுச் செய்தியாக முன் வைத்திருந்தோம். அது இன்று உண்மையாகியுள்ளது.

ஒரு பொறுப்பான சமூக ஊடகம் என்ற வகையில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே நம்பகமான தகவல்களை வைத்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்கான அனைத்து உதவிகளையும் பல வழிகளில் எமக்கு வழங்கிய நண்பர்களுக்கு எமது ஊடகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதற்கு முன்னர் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு நடப்பதற்கு முன்பாக உத்தேசக் கணீப்பீட்டினை நாம் மிகத் துல்லியமாக வழங்கியிருந்தோம். அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் சரியான கருத்துக் கணிப்பினை முன்கூட்டி வழங்கியிருந்தோம். இப்போது ஓட்டமாவடி பிரதேச சரபயில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? என்னென்ன உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் முன்கூட்டி செய்தி வெளியிட்டிருந்தோம்.

சரியான நேரத்தில் சரியான செய்திகளை உடனுக்குடன் வழங்க நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என்பதோடு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வரவேற்பினையும் எதிர்பார்க்கின்றோம். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவும் கோ.ப. மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை - ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முடிவு?

Posted in

கடந்த பெப்ரவரியில் தேர்தல் இடம்பெற்று முடிந்து நாளை 06.04.2018ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு கோ.ப. மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெறவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்தக் கட்சி சபையில் ஆட்சியமைக்கப் போகின்றதென்ற ஆர்வம் இப்போதுவரை எல்லோர் மனதிலும் கோலூன்றி நிற்கின்றது.


அந்தவகையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 05 ஆசனங்களையும் 03 போனஸ் ஆசனங்களையும் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய ஒற்றை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சியை நிலைநாட்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இருந்தாலும் 05 ஆசனங்களையும் 02 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சளைக்காமல் தொடர்ந்தும் ஒற்றை ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டாட்சியமைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை இன்றைய தினம் வரை நடத்தி வருகின்றது. இருபக்கமும் ஒரு ஸ்திரத்தன்மையான உடன்பாடின்மை காரணமாக இன்றுவரை இந்த இழுபறி நிலை நீடித்து வந்தது.

இருந்தாலும் எந்தக் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவே துரும்புச் சீட்டாகவும் பார்க்கப்பட்டது. 

தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள நம்பகமான தகவல்களின் படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் அதற்காக சபையில் பிரதித் தவிசாளர் பதவி வழங்கப்பட இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இன்று 05.04.2018ம் திகதி பி.ப. 4.00 மணியளவில் ஹாரூன் மௌலவி தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள்  பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் கொண்டிருக்கும் நட்பும் அதேநேரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கொண்டுள்ள உடன்பாடின்மையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியமைக்க உதவலாம் என்றும் நம்பப்படுகின்றது.

அதேவேளை  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹாரூன் சஹ்வி கடந்த காலங்களில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் ஒரேயொரு போனஸ் ஆசனத்திற்காக பிரதித் தவிசாளர் பதவி தனது கட்சிக்கு வழங்கப்படுவதற்கு உடன்பட்டுள்ளமையால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்றே ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு அமையுமானால் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களுடன் ஹாரூன் சஹ்வி அவர்கள் கொண்டிருந்த கருத்து முரண்பாடுகளைக் களைந்து அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற தொனியில் தானும் ஒரு முழுநேர அரசியல்வாதிதான் என்பதனை ஹாரூன் சஹ்வி அவர்கள் வெளிப்படுத்தும் தருணமாகவும் இது அமையும்.

அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி சபையைக் கைப்பற்றினால் பெரும்பாலும் தவிசாளராக ஐ.ரி. அஸ்மி (அமீஸ்டீன்) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது. பிரதித் தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போனஸ் ஆசனத்திற்குரிய அஹமட் அவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற மாஞ்சோலை நௌபர் அவர்களுக்கு தவிசாளர் பதவி வழங்க வேண்டுமென்ற கோசங்களும் அப்பகுதியிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றுவதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பு முக்கியமான விடயமாகக் கருதப்பட்டாலும் ஸ்ரீ.ல.மு.கா. இன்னுமொரு சிக்கலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏறாவூரிலே அலிசாஹிர் மௌலானா சார்பான ஒருவர் சூரியன் கட்சிக்கு ஆதரவாக கையைத் தூக்கியமைக்கு பலிவாங்கும் நோக்கில் ஓட்டமாவடி சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  ஐக்கிய தேசியக் கட்சி சபையைக் கைப்பற்றுவதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்காக ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தற்போது மட்டக்களப்புக்குத் தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


இதையெல்லாம் தாண்டி ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபையைக் கைப்பற்றினால் தவிசாளராக விஜித அன்வர் அவர்களும் பிரதித் தவிசாளராக அன்வர் ஆசிரியர் அவர்களும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.            


-ஆதம் றிஸ்வின் -     

© ODDAMAVADI NEWS

பிரமிட் வணிகத்தினால் சமூகம் பாதிப்படைவதை தடுக்க களமிறங்கியுள்ள JDIKயின் முன்மாதிரி

Posted in

அண்மைக் காலமாக கல்குடா முஸ்லிம் பிரதேசங்களைக் குறிவைத்து பிரமிட் முறையிலான வணிகம் மேற்கொள்ளும் ஒரு சில நிறுவனங்கள் தங்களது யுக்திகளைக் கையாண்டு அப்பாவிப் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டுச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இஸ்லாத்தில் கூடுமா? இது சட்டக்காப்புக்குட்பட்டதா? உண்மையில் இதன் நோக்கம் என்ன என்பது பற்றி யோசிக்காமல் குறித்த நிறுவன ஏஜென்டுகளின் கவர்ச்சிப் பேச்சில் மதிமயங்கி தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தினை விரைவில் பல மடங்காக மாற்றலாம் என்ற கனவுடன் குறித்த நிறுவனம் வழங்கும் பெறுமதியற்ற பொருளை பெருந்தொகை கொடுத்து வாங்குவது மட்டுமல்லாது அந்த நிறுவனத்தின் தூண்டுதலால் மற்றையவர்களையும் இந்த வியாபாரத்திற்கு உள்நுழைக்க இந்த சதிவலையில் விழுந்த ஆண்கள், பெண்கள் எனப் பலரும் பாடுபடுகின்றனர். தான் சதிவலையில் விழுந்தது மட்டும் போதாது மற்றவர்களையும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படையாகவும் காணப்படுகின்றது.


எமது பகுதியைச் சேர்ந்த இந்த வணிகத்தில் சிக்குண்டவர்கள் வெளியேற முடியாதளவு மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றமான ஒரு யூத சிந்தையுடைய இந்த பிரமிட் வணிகத்தை முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு நுணுக்கமான முறையில் பரவச் செய்ய தன்னிலை மறந்து இரவு பகலாக ஆண் பெண் கலப்பாகப் பாடுபடுகின்றனர்.
இந்த விடயம் அண்மைக் காலமாக சமூக சிந்தனை கொண்ட சில நண்பர்களினால் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக ஆக்கப்பட்டிருந்தது. அத்தோடு இன்னும் சில நண்பர்கள் அரசாங்கத்திற்கும் இது தொடர்பாக அறிவித்திருந்தனர்.

இருந்தாலும் ஏற்கனவே இந்த வணிகத்தில் சிக்குண்டவர்களை எவ்வாறு தெளிவுபடுத்தி மீட்க முடியும், இனியும் சேரவிருப்பவர்களை எவ்வாறு தெளிவுபடுத்தி தடுப்பது என்ற ஆதங்கம் பலரிடமும் இருந்தது. அந்தவகையில் ஜம்இய்யது தஹ்வதில் இஸ்லாமியா – கல்குடா (JDIK) அமைப்பும், அதன் பொதுத் தலைவர் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களும் ஊர் பொதுமக்களை இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் முன்மாதிரியாகக் களமிறங்கியிருப்பதானது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை 16.02.2018ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களினால் நிகழ்த்தப்பட்ட குத்பாப் பிரசங்கமும் இந்த பிரமிட் வணிகம் சம்மந்தமான பல தெளிவான விடயங்களை பொதுமக்களுக்குக் கொடுத்திருந்தது. அத்தோடு எதிர்வரும் 22.02.2018ம் திகதி வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் “பிரமிட் வணிகம், இஸ்லாமியப் பார்வை” என்ற தொனிப் பொருளில்  ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களினால்  மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

சமூகம் சார்ந்த பாதிப்பைத் தடுக்க JDIKயினால் எடுக்கப்படும் இம்முயற்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கவை மற்றும் பாராட்டத்தக்கவை.

இவ்வாறானதொரு சமூகம் சார்ந்த பாதிப்பினை தடுப்பதற்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கற்ற சமூகம் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தங்களது பங்களிப்பினையும் வழங்க வேண்டும். பாரியளவில் இது தொடர்பான விளக்க நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். குத்பாப் பிரசங்கங்கள் இது தொடர்பில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பனவே சமூகம் சார்ந்த ஊடகம் என்ற வகையில் எமது பாரிய எதிரப்பார்ப்பாகவுமுள்ளது. இதற்காக எந்நேரமும் எமது ஊடகமும் பாரிய பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


-ஆதம் றிஸ்வின் -     

© ODDAMAVADI NEWS

70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்-இஸ்லாஹ் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட திறந்த சைக்கிளோட்டப் போட்டி

Posted in

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 70ஆவது சுதந்திர தினத்ததை கொண்டாடும் முகமாக எமது அல் இஸ்லாஹ் இளைஞர் கழகமானது வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் திறந்த சைக்கிளோட்ட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தது. இதற்காக வேண்டி மட்டகளப்பின் பல பாகங்களிலும் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்தது வரவேற்க தக்கதாகவும் சமுக நல்லினக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்து.
மேலும் இந் நிகழ்வானது அல் இஸ்லாஹ் இளைஞர் கழக தலைவர் MM .சம்ஹான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது .இதில் பிரமத அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன அவர்களும் ஓய்வு பெற்ற அதிபர் MCH.முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன அவர்கள் உரையாற்றுகையில் 'சுதந்திர தினம் என்பது நாட்டின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டிய தினம் ஆகும் இவ்வாறான நிகழ்வுகள் அவற்றிக்கு வழிவகுக்கும்' எனவும் கூறினார். இந் நிகழ்வில் பங்குபற்றிய வெற்றி வீரர்களுக்கு பதக்கங்களும் காசோலைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது மேலும் இந்நிகழ்வுகளுக்கு நடுவராக கல்குடா நடுவர்கள் சம்மேளனம் கலந்து கொண்டதும் குறிப்பிட தக்கது.