Follow me on Twitter RSS FEED

வாழைச்சேனை பிரதேச சபையின் பொண்டுகள்சேனை புனித கங்கைப் பிரகடனமும் எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும்

Posted in

நன்றி - thehotline.lk

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பொண்டுகள்சேனை பிரதேசத்தில்  அமைந்துள்ள  மகாவலி  கங்கையின் கிளை ஆற்றினை புனித கங்கையாகப்  பிரகடனப்படுத்தி வாழைச்சேனை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது.  வயல் சார்ந்த பிரதேசத்தில் காணப்படும் இந்த ஆற்றுப்பகுதி மூலம் இப்பிரதேசத்தில் காணப்படும் வயல்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கி வருவதுடன், இப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம்கள் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலுமில்லாமல் அரச மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் இலட்சினை பொறிக்கப்பட்டு வாழைச்சேனை பிரதேச சபையால் குறித்த பகுதி புனித கங்கையாகப் பிரகனப்படுத்தப்பட்டுள்ளமை பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது

குறிப்பாக, இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்களை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை எனத்தெரிவித்தனர். அதே நேரம், ஒரு இடத்தை புனித பிரதேசமாக அறிவிப்புச் செய்வது அரசாங்கமாகும். ஆனால், புனித கங்கை என எதுவித வர்த்தமானி அறிவித்தலிலோ பிரசுரிக்கப்படாத ஓரிடத்தை எவ்வாறு புனித கங்கையாக பிரகடனப்படுத்த முடியுமென பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறித்த ஆறும் அதனோடு இணைந்த பகுதிகளும் அதன் புனரமைப்பும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கே உரித்தானது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இச்செயற்பாடு இரு இனங்களுக்கிடையிலும் ஒரு சந்தேகப்பார்வையை உண்டு பண்ணியுள்ளதோடு, ஆட்சியில் பங்காளர்களாகவுள்ள முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது இன விரிசலை உண்டு பண்ணும் செயலாகவும் அமையுமென கவலை தெரிவிக்கின்றனர்.
ஆட்சியில் பங்காளிகளாக முஸ்லீம் காங்கிரஸ் சேர்ந்ததே இன ஒற்றுமை ஏற்படும் என்பதற்காக என்று தான் சொல்லப்பட்டது. அப்படியென்றால், இதனை என்னவென்று சொல்வது? கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் இருந்த கிராம சேவகர் பிரிவுகளை தாரைவார்த்துக் கொடுத்து நிருவாக ரீதியாக பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வரும் இப்பிரதேச முஸ்லிம்களை மென்மேலும் ஒரு குறுகிய நிலப்பரப்புகள் சுருக்கி விடுவதற்கான செயற்பாடாகவே இது அமைந்துள்ளது

இது விடயத்திலும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை இழந்துள்ள கிராம சேவகர் பிரிவுகளை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பிரதேச உள்ளூர் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் கனிந்துள்ளதாக மேற்குறித்த புனித கங்கையாகப் பிரகனப்படுத்தப்பட்ட செய்தி குறித்து நிற்கிறது.

கிராம சேவகர் பிரிவுகளை மீட்பது வெறுமனே தேர்தல் கால கோசங்களாக மாத்திரம் இருந்து விடாது, எம் சமூகம் இழந்து நிற்கும் எமது நிலப்பரப்பையாவது பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கட்சி பேதங்களை மறந்து சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்விடயம் தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலியும் சரி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசும் சரி தேர்தல் வாக்குறுதியோடு நிறுத்தி விடாமல் கட்சி பேதங்களுக்கப்பால் இதைப்பெற்றுத்தர வேண்டும். மேடைப்பேச்சாக மாத்திரம் இவ்விடயம் இருந்து விடக்கூடாது. இது விடயத்தில் கரிசணையற்றிருப்போமானால் எஞ்சி இருக்கும் குறுகிய நிலப்பரப்புகளையும் இழந்து இருப்பிடமிழந்த சமூகமாக இப்பிரதேச மக்கள் மாறும் அபாயகரமான சூழல் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. இது விடயத்தில் தனிப்பட்ட அரசியல் விமர்சனங்களை தள்ளி வைத்து, ஆக்கபூர்வமான செயற்பாடுகளே அவசியமாகின்றது.

0 comments: