Posted in
இலங்கை இராணுவத்தில் கடமை புரியும் வாகன சாரதிகளில் தேர்ச்சிபெற்ற 50 பேர்கள் தெரிவு செய்யப்பட்டு ரயில் இயந்திரத்தினை இயக்கும் சாரதிப் பயிற்சி பெறுவதற்காக உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
தற்போது நாட்டில் ரயில் சாரதிகள் மற்றும் ஊழியர்களின் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாகவும் தொடர்வதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர், தூர இடங்களுக்குச் செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை ஓரளவேனும் சீர் செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரின் 44 பஸ் வண்டிகள் இலவச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 28 பஸ் வண்கள் நாளை முதல் இலவச சேவையை முன்னெடுத்து ரயில் சேவை வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளைத் திருப்திப்படுத்த இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றனர்.
இதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரும் ரயில் சேவை வேலை நிறுத்தம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அரச சேவையில் அதிக சம்பளம் பெரும் ஊழியர்களாக ரயில்வே பணியாளர்கள் காணப்பட்டாலும் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதானது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக ரயில் சாரதிகள் எதிர்காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை சுமூகமாக்கும் வகையில் இராணுவத்தினரை ரயில் சாரதிகளாகப் பயன்படுத்த இலங்கை இராணுவம் முன்வந்துள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக 50 தேர்ச்சி பெற்ற இராணுவ வாகன சாரதிகள் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு ரயில் ஓட்டுனர்களாக பயிற்சி பெற்று வரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.