Posted in
நாளை வியாழக்கிழமை 02.11.2017ம் திகதி சித்தாண்டி வாராந்த சந்தை இடம்பெறவுள்ளது. வழமையாக முஸ்லிம் வியாபாரிகள் இங்கு தங்களது அங்காடிப் பொருட்களை விற்பதற்காகச் செல்வதுண்டு.
இருந்தாலும் கிரான் மற்றும் சந்திவெளி வாராந்த சந்தைகளின்போது முஸ்லிம் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மேற்கொள்ளவிடாமல் இனவாதக் குழுக்கள் தடுத்திருந்தன. இச்சம்பவங்கள் நடந்து ஓரிரு நாட்களே ஆகின்ற நிலையில் சித்தாண்டியிலும் நாளை அவ்வாறு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே நல்லதொரு சுமூகமான நிலை ஏற்படும்வரை சித்தாண்டிக்கு நாளை வியாபாரத்திற்காகச் செல்வதை முஸ்லிம் வியாபாரிகள் தவிர்ந்து கொண்டால் சில வீணான பிரச்சினைகளிலிருந்தும் சமூகங்களுக்கிடையிலான பதற்றநிலை ஏற்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியும்.
ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளுக்கு தமிழ் சகோதரர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தங்களது தொழில் நடவடிக்கைகளுக்கு எந்நேரமும் வரமுடியும் என்றும் அதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்கியுள்ள முஸ்லிம் சமய நிறுவனங்களைப் போன்று தமிழ்ப் பிரதேச சமய நிறுவனங்களும் முன் வந்து அறிவிப்பு செய்வதோடு இனவாதக் குழுக்களுக்கு இடமளியாது இரு சமூகங்களுக்குமிடையிலான உறவைப் பலப்படுத்த முன் வரவேண்டுமென்பது இனங்களுக்கிடையில் சமாதானத்தை விரும்பும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.