Posted in
அமைச்சர் கௌரவ மனோ கணேசன் ஐயா அவர்களே,
உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் என்றும் குரல் கொடுக்கும் நீங்கள் என்றும் சரித்திரம் படைப்பீர். உங்களைப் போன்ற சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வாழ்த்துச்சொல்வதில் பெருமையடைகின்றேன்.
தனி மனிதனாய் உங்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பெரும்பான்மைச் சமூகத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் சரிக்குச் சமமாக நின்று, குரல் கொடுக்கும் உங்கள் துணிவு ஏனைய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளிடமும் வர வேண்டும்.
அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு, அமைச்சுக்களை வகித்தாலும், என் சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தான் வகிக்கும் அமைச்சினைத் துச்சமென நினைக்கும் நீங்கள் என்றும் உங்கள் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
உங்கள் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தலைமை நீங்கள். ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லும் சத்தியமும், தேசியமும் எங்கே...? உங்கள் குரல் உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக அரசாங்கத்தினை எதிர்த்துப் பேசுகின்றது. ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளை அதே அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வாயடைத்துப்போகும் எங்கள் தலைமைகள்.
உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக தான் வகிக்கும் அமைச்சினைத் துட்சமென நினைத்து தூக்கியெறிய நினைப்பவர் நீங்கள். ஆனால், எங்கள் சமூகங்களைக் காண்பித்து அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்பவர்கள் எங்கள் தலைமகள்.
சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை பின் தள்ளி விட்டு முன் நிற்கின்றீர்கள் நீங்கள். ஆனால், எங்கள் தலைமைகளோ சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை முன் தள்ளி விட்டு பின் நிற்கின்றார்கள்.
வாழைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களிலுள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்களைப் போன்று தைரியமாக ஒரு பிரதேசத்திற்குமாவது பிரதேச சபையினைப் பெற்றுத்தர முடியாத தலைமைகளே எங்கள் சத்தியமும், தேசியமும்.
இன்று ஒரு உள்ளூராட்சி சபையையேனும் பெற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் தலைமைத்துவங்களுக்கு உங்களின் வீரமுள்ள செயற்பாடு நல்லதொரு பாடமும் படிப்பினையுமாகும்.
எம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்று எமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு, நாங்களே எமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதே.
ஆனால், ஆர்ப்பாட்டமில்லாமல் உங்கள் ஆளுமையினால் இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள் உங்கள் பயணத்தில் நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எம்.ரீ. ஹைதர் அலி
மீராவோடை.