Follow me on Twitter RSS FEED

KPL உதைபந்தாட்டத் தொடரில் ஓட்டமாவடி யங் லயன்ஸ் சம்பியனானது

Posted in
- MS -
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் கல்குடாத் தொகுதி உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் முதன்முறையாக நடாத்தப்பட்ட KPL உதைபந்தாட்டத் தொடரில் இன்று ஓட்டமாவடி யங் லயன்ஸ் சம்பியனானது.


KPL உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி இன்று 28.08.2018ம் திகதி மாலை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி இறுதிப் போட்டியில் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினருடன் இந்த உதைபந்தாட்டத் தொடரை நடாத்திய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதியது. ஆரம்ப முதல் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் இறுதியில் யங் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற கோல் கணக்கில் சம்பியனானது. 

இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத் தலைவர் ஜஃபர் அவர்கள் ”போதைவஸ்த்தை பிரதேசத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற இனப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். 
இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள மற்றும் கிராமியக் கைத்தொழில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரு் அலி அவர்களும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி. அஸ்மி அவர்களும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இன்பராசாவுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு - ஓட்டமாவடி இளைஞனின் முன்மாதிரி

Posted in
அண்மையில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஆயுதங்கள் இருப்பதாக இனவாதக் கருத்துக்களை மீடியாக்கள் மூலம் வெளியிட்ட புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக இலங்கையில் முதல் தடவையாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. 


கொழும்பிலுள்ள சட்டத்தரணி சறூக் அவர்களின் வழிகாட்டலில் ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.எப்.எம். றியாஸ் என்ற சகோதரரினால் இம்முறைப்பாடு இடப்பட்டுள்ளது. 

இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தல் என்ற காரணத்தின் படி CIB 3 - 201/243 என்ற இலக்கத்தின் கீழ் இம்முறைப்பாடானது வாழைச்சேனை பொலிசில் இன்று 27.08.2018ம் திகதி பதிவாகியுள்ளது. 

இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டொன்றை சுமத்தி அதன் மூலம் அரசியல் இலாபம் அடையவும், இனங்களுக்கிடையில் குழப்ப நிலையை உருவாக்கவும், வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முயற்சித்த இந்த இன்பராசா போன்றவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். 

அந்தவகையில் இலங்கையிலுள்ள முழு முஸ்லிம்களுக்காக சமூக நோக்கு அடிப்படையில் எதனையும் பொருட்படுத்தாது சட்ட நடவடிக்கைக்காக முன்வந்துள்ள ஓட்டமாவடி எம்.எப்.எம். றியாஸ் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். இது மற்றைய இளைஞர்களுக்கும் முன்மாதிரியான செயற்பாடாகும். வன்முறையான வழிகளிலன்றி சட்ட ரீதியாக பிரச்சினைகளை அணுகுவதற்கான ஒரு வழிகாட்டியாகவும் இவரின் செயற்பாடு காணப்படுகின்றது.

இவர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவராலும், வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம்களாலும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் என்பதோடு முழு முஸ்லிம் சமூகமும் இவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 

ஏனையவர்கள் முறைப்பாடு செய்ய வேண்டிய முறை சட்டத்தரணி சறூக் அவர்களினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


மீராவோடை வைத்தியசாலையில் ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் சந்திப்பு

Posted in
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை 2018.08.20ஆம் திகதி - திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். வைத்தியசாலையில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறிப்பாக ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையிலும் இச்சந்திப்பு இடம்பெற்றது


அத்துடன், இவ்வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக அபிவிருத்திக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. தற்போது மிக அவசியத் தேவைப்பாடாகவுள்ள சிற்றூழியர்கள் மற்றும் வைத்தியர்களின் குறைபாடுகள் குறித்தும் இதனால் இவ்வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும் அவற்றுக்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருமாறும் அபிவிருத்திக் குழுவினர் இச்சந்திப்பில் கேட்டுக்கொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினாலும் இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும், இவ்வைத்தியசாலையினால் இரு சமூகங்களைச் சார்ந்த மக்களும் பயன்பெறுவதுடன், இதில் நிலவும் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வேண்டியதன் தேவைப்பாட்டினையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டினார்

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் ஆளணி தொடர்பான ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. இவற்றினை கருத்திற்கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினரால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதாகவும், தன்னாலான அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை குறைந்தளவுக்கு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
-M.T. Haither Ali-