Posted in
கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் சமகாலத்தில் மிக முக்கிய பிரச்சினைகளாக இரு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
1. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீகவளக் குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலையைத் தரமுயர்த்தல்.
2. முஸ்லிம்களுக்கு தனியான கோறளைமத்தி பிரதேச சபை.
இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களினால் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், கௌரவ சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பைஷல் காசீம் அவர்களுக்கும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் மேற்படி விடயங்கள் இரண்டினையும் உடனடியாகத் தீர்ப்பதற்கு சகல மட்டங்களுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென இரு இராஜாங்க அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் நாம் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களிடம் வினவியபோது ”வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் குறைபாடுகள் மற்றும் நெருக்கடி நிலைகள் பற்றி மிகவும் கவலையுடன் வைத்தியர்கள் தங்களது கோரிக்கையினை ஊடகங்கள் வாயிலாக முன்வைத்திருந்தும், அதுபோல முஸ்லிம்களுக்கான தனியான கோறளை மத்தி பிரதேச சபையின் அவசியத்தை பல புத்திஜீவிகள் வலியுறுத்தி இருந்தபோதும் அவை எது தொடர்பாகவும் எள்ளளவு கூட இந்தப் பிரதேசத்தின் அரசியல்வாதியோ அல்லது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அமைப்பாளர்களோ கவனம் எடுக்காமையானது அவர்களது வங்குரோத்து நிலையினை எடுத்துக் காட்டுவதோடு, அரசியல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு ஏனைய நாட்களில் மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்வதும் வழமையாகியுள்ளது.” என்றும் தெரிவித்தார்.