0
மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டாம்
Posted in
மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து இன்று 18.02.2019ம் திகதி காலை அடையாளந் தெரியாத ஓட்டமாவடி பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எனும் பெயரில் ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்கு யாரும் ஆதரவளிக்க வேண்டாம் என்று ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் முஹம்மட் ஹில்மி அவர்கள் வெளிநாட்டிலிருந்து எமது ஓட்டமாவடி செய்திச் சேவைக்கு அனுப்பியுள்ள பிரத்தியேகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் “இது ஒட்டமாவடியிலுள்ள ஒரு சில வர்த்தகர்களின் இயலாமையை எடுத்துக் காட்டுவதோடு ஒரு வாராந்த சந்தையினால் ஓட்டமாவடி பஸாரின் வியாபாரம் நஷ்டமடைகின்றதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு பொதுமக்கள் இலாபத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதை இன்னும் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர அதனை தடைசெய்வதற்கும் நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வதற்கும் முன்வருவதானது மற்றவர்களுக்கு ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்து விடும். மீராவோடை வாராந்த சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருவதால் பெருந்தொகைப் பணம் வெளியில் செல்கின்றது என்ற கருத்தானது நகைப்புக்குரியதாகும். அவ்வாறெனின் இதே மாதிரி வெளியூர் வியாபாரிகள் வாராந்த சந்தைக்கு வரக்கூடாது எங்களின் பணம் முஸ்லிம் ஊர்களுக்குச் செல்கிறது என்று தமிழ்ப் பிரதேசத்திலுள்ளவர்கள் முடிவெடுத்தால் என்ன செய்வது. அது மாத்திரமன்றி ஓட்டமாவடி பஸாரிலுள்ள வியாபாரிகள் உள்ளூரில் மாத்திரமா தங்களது கொள்வனவை மேற்கொள்கிறார்கள். அவர்களும் காத்தான்குடி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றே கொள்வனவை மேற்கொள்கிறார்கள். இதனால் மட்டும் வெளியூருக்குப் பணம் செல்லவில்லையா?. உள்ளூர் மக்களில் 99 வீதமானோர் நன்மையடையும் வாராந்த சந்தையை நிறுத்த முயற்சிப்பதானது மக்களின் நலனை விட வியாபாரிகளின் நலனை முன்னிலைப்படுத்துவதனையே காண முடிகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது குறிப்பில் “இந்த வாராந்த சந்தையை நிறுத்தினால் மீராவோடை எல்லையிலுள்ள தமிழ்ப் பிரதேசத்தில் இதே வாராந்த சந்தையை ஆரம்பித்தால் யாரும் யாரையும் நிறுத்த முடியாது போய்விடும். வாராந்த சந்தையை நாளாந்த சந்தையாக மாற்றினாலும் அந்த சந்தை வலுவிழந்துவிடும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஊரில் அரசியல் பிரதிநிதியாக ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்தும் இவ்வாறான உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வராமலிருப்பதானது அவரது வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திலிருக்கிறார் என்பதனையே வெளிக்காட்டுகின்றது. உண்மையில் பாதிப்படைந்துள்ள ஒரு சில வியாபாரிகளைக் கூப்பிட்டு அதற்கான தீர்வை வழங்க வேண்டுமே தவிர நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வது அடிமுட்டாள்தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு சிலரின் சுயநல விளையாட்டு அன்றி ஒட்டுமொத்த ஓட்டமாவடி மக்களின் நிலைப்பாடு அல்ல. இதனால் இரு தரப்பினரும் ஊர்வாதம் பேசி முரண்பட்டுக் கொள்ளாமல் தெளிவாக இருக்க வேண்டும். பொது வெளியில் தெரிவிக்கும் கருத்துக்களை நன்கு பரிசீலனை செய்து வெளியிட வேண்டும். ஓட்டமாவடி வர்த்தக சங்கம் மௌனமாக இருப்பதானது அவர்களும் ஹர்த்தாலுக்கு மறைமுகமான உடந்தையாக இருப்பதையே காட்டுகின்றது. வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் ஓட்டமாவடி வியாபாரிகளே நன்கொடைகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அவரவர் விருப்பம். தர்மம் செய்வதனை வற்புறுத்தலில் செய்ய வைக்க முடியாது. தர்மம் செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாவிட்டால் அவர்களுக்கு நன்மை கிடைக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.