Follow me on Twitter RSS FEED

வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினரின் முயற்சியினால் மகப்பேற்று விடுதி மற்றும் பல் சிகிச்சை நிலையம் தொடராக இயங்க நடவடிக்கை

Posted in
எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தற்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதியானது இனிவரும் நாட்களில் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களின் நன்மைகருதி செயற்படும், என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், வைத்தியசாலையில் காணப்படும் பல் சிகிச்சை நிலையமும் திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான நாட்களில் பொதுமக்களுக்கும் சனிக்கிழமை நாளில் பாடசாலை மாணவர்களுக்கும் செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொதுமக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஆகியோரின் தொடர் முயற்சிகளினால் இவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மேற்குறிப்பிட்ட சேவைகளை இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 comments: