Follow me on Twitter RSS FEED

மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) நியமனம் - கிழக்கு ஆளுநருக்கு வைத்திய அத்தியட்சகர் மற்றும் அபிவிருத்திக் குழுவினர் நன்றி தெரிவிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) ஒருவர் 2019.02.11ஆம்திகதி - திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.


வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளையேற்று இந்நியமனத்தினை வழங்கியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மீராவோடை வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளர் பிரிவிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் நாளாந்தம் பற்சிகிச்சை கிளினிக் இடம்பெறுவதுடன், மாதத்தில் 8 தினங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு ஆஸ்த்மா, தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான கிளினிக் நடைபெறுகின்றன. இதற்காக சுமார் 1400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்குமுரிய மருந்து, மாத்திரை வகைகளை வழங்குவதற்கு மருந்தாளர் ஒருவர் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய தேவைப்பாடும், குறிப்பாக வயோதிப நோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

சில சந்தர்ப்பங்களில் இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர்களே மருந்தாளருக்கான கடமையினையும் மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றும் வந்துள்ளன.

இவ்வாறு பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளை ஏற்று இந்நியமனத்தினை பெற்றுத்தந்தமைக்காக ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தி வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்திற்கும் இன்றுவரை உதவி புரிந்து வரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.


0 comments: