Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு கட்டளையொன்றைப் பிறப்பித்திருந்ததுடன், அம்பாறையில் வன இலாகாவினர் மக்கள் குடியிருப்பு காணிகளைக் கையகப்படுத்த எடுத்த முயற்சியை, ஆளுநர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தமையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், புதிய கிழக்கு மாகாண ஆளுநர் காணிப்பிரச்சினைக்கு சரியான தீர்வினை பெற்றத்தருவார் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
கிழக்கிலும் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் தற்போதைய ஆளுநர் முற்றுமுழுதாக அறிந்தவர் என்ற வகையில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் வழங்கப்படாமலிருந்த காணி உறுதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்து.
அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீள வழங்கத்தேவையான நடவடிக்கைளை முன்னெடுப்பதோடு, இப்பிரதேசத்தில் காணப்படும் பாதுகாப்புப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளையும் மீட்டுத்தர வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.
அத்தோடு, இப்பிரதேசத்திலுள்ள மீள்குடியேற்றக்கிராமங்கள் தொடர்பிலும் ஆளுநர் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பது மீள்குடியேறியுள்ள மக்களின் வேண்டுகோளாகவுமுள்ளது.
இது காலவரை பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மீள்குடியேறியுள்ள மக்கள், சரியான அடிப்படை வசதிகளின்றி தமது காணிக்கான ஆவணங்கள் கிடைக்காமல் ஏனைய திணைக்கள அதிகாரிகளின் அழுத்தங்கள் என்பவற்றால் தொந்து போயுள்ள அவர்களுக்கு தாங்கள் காணி மீட்பு தொடர்பில் மேற்கொண்டு வரும் துரித செயற்பாடு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், இப்பிரதேசத்தை அண்டிக்காணப்படும் பொத்தானை மீள்குடியேற்றக்கிராமத்தின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக 210 E கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பொத்தனை கிராமத்தில் 40 தமிழ் குடும்பங்களும் 45 முஸ்லிம் குடும்பங்களும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழும் மாதுறு ஓயா யானைகள் சரணாலயம் திட்டத்தின் கீழும் பொத்தனை பிரதேசத்திலுள்ள பல ஏக்கர் முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகளும் வயல் நிலங்களும் பறி போகும் நிலையேற்பட்டுள்ளமை பிரதேச செயலகத்தின் ஊர்ஜிதமான தகவல்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.
கடந்த சில தினங்களாக மேற்குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து அளவீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் மிக விரைவில் அக்காணிகள் அனைத்தும் குறித்த திணைக்களங்களின் கொண்டு வரப்படும் நிலையும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இப்பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் பல ஏக்கர் நிலங்களை இழக்கும் அபாய நிலையேற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.
யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் பல்வேறு இழப்புகளை அனுபவித்த இப்பிரதேச மக்களும் விவசாயிகளும் தற்போது இவ்வாறான நிருவாக ரீதியான நெருக்குதல்களை எதிர்கொண்டு வருவது தொடர்பிலும் மேற்குறித்த திணைக்களங்களின் நடவடிக்கை தொடர்பிலும் கிழக்கு மாகாண ஆளுநரும் பிரதேச அரசியல்வாதிகளும் சமூக மட்ட அமைப்புகளும் உடனடியாக கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களது கோரிக்கையாகும்.
பொத்தானை மக்களின் காநிப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா? அல்லது அங்கிருந்து வெளியேறும் நிலை உருவாகுமா?
பொத்தானை மீள்குடியேற்றக் கிராமத்தின் பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்கள கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் சிவில் சமூகச்செயற்பாட்டாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைத் நளீமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையை காலத்தேவை கருத்தி மீள்பிரசுரம் செய்கின்றோம்.
கட்டுரை
பொத்தானை மக்களது மீள்குடியேற்ற பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்- ஜுனைட் நளீமி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர்.
நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாகக் கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ், முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த போதும் பயங்கரவாதச்சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயர வேண்டி வந்தது.
உயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறுவதில் பல சிரமங்களைத் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.
உத்தியோகபூர்வ அவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றதுடன், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களை பலப்படுத்துவதில் முனைப்புக்கொண்டுள்ள போதும் பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, புலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றன. இவற்றினை துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்ற போது அதிகாரிகளாலும், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர்.
அத்தோடு, வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லைக்கற்களை நட்டுள்ளதால், முறுகல் நிலையேற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர்.
மக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களைக் களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன், நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின், அதனை உரிய முறைப்படி விடிவித்து, எல்லைக்கற்களை இடுவதாக வாக்களித்தனர்.
இதனடிப்படையில் சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாதெனவும் குறிப்பிட்டனர். இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா? என மக்கள் வினவிய போது இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலயத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதால், இது குறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டுமென பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
என்ற போதும், குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை பொது மக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.
இக்கிராம மக்களது அடிப்படைத்தேவைகளான பாடசாலை, விளையாட்டு மைதானம், வைத்தியசாலை, பொது மயானம் போன்ற பொதுத்தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என்பதுடன் பொது மையவாடிக்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓயாத்திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதி வாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேசவாசிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.