Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி.03 ஹிஜ்ரா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா? நடந்தது என்ன? (அதிபரின் பதில்).

Posted in
ஓட்டமாவடி.03 ஹிஜ்ரா வித்தியாலய அதிபரும் ஆசிரியர்களும் யானைச் சின்னத்திற்கான தேர்தல் பிரச்சாரங்களில் குழுவாக ஈடுபட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தேர்தல்கள் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. அதேவேளை சமூகவலைத்தளங்களில் அண்மைய நாட்களில் இவ்விடயம் பிரதான பேசுபொருளாகவும் மாறி விமர்சனத்திற்குட்பட்டிருந்தது. ஒருதரப்பு விமர்சனம் மாத்திரம் தற்போதுவரை வந்துகொண்டிருக்கும் நிலையில் விமர்சனத்திற்குட்பட்டுள்ள தரப்பினரின் பதில் வெளியாகியிருக்கவில்லை. அந்தவகையில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் பாடசாலை நிருவாகத்திற்கும் உள்ளது

ஆகவே இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினரை அணுகி உண்மையாக நடந்த விடயங்களை பொதுத்தளத்தில் வெளியிடும் நோக்கில் © ODDAMAVADI NEWS ஆகிய நாம் பாடசாலை அதிபரைச் சந்தித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டிருந்தோம். அவர்கள் வழங்கிய பதில்கள் இங்கே எவ்வித மாற்றமுமின்றி அவர்களின் நேரடிக் கருத்தாக பதிவிடப்படுகின்றது.

கடந்த 2018.01.26ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாடசாலை முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் பாடசாலை நேரத்தில் பென்சிலால் குத்தப்பட்டு காயமடைந்த மாணவனை அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரிப்பதென்றும் செல்லும் வழியில் மௌலவி ஹாரூன் சஹ்வி அவர்களைச் சந்தித்து பாடசாலைக் காணிக் கொள்வனவு சம்மந்தமாகக் கலந்தாலோசிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக அதிபரும் 05 ஆசிரியைகளும் 02 ஆசிரியர்களும் உள்ளடங்கிய 08 பேர் கொண்ட குழுவொன்று மு.. 11.10 அளவில் வெளியேறிச் சென்று ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு சென்றடைந்த சிறிது நேரத்தில் பாடசாலையிலிருந்து பணியாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பாடசாலைக்கு அதிகாரிகள் வந்திருப்பதாகவும் அதிபர்ஆசிரியர்கள் எங்கே என்று கேட்டதற்கு விடயத்தைக் கூறியதாகவும் வெளியே சென்ற குழுவினரிடம் தெரிவித்திருந்தார். அப்போது வெளியே சென்ற பாடசாலை முகாமைத்துவக் குழு உடனடியாகப் பாடசாலைக்குத் திரும்பியிருந்தது. ஆனால் அப்போது வருகை தந்திருந்த அதிகாரிகள் பாடசாலையில் அதுவரை தரித்திருந்திருக்கவில்லை. அதன்பின்னர் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வந்து தங்களுக்கு தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதன்படி விசாரிக்க வந்துள்ளதாகவும் கூறி அதிபரினது வாக்குமூலத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக அது உண்மையா? அல்லது பொய்யா? என்று நிரூபிக்கப்படாத நிலையில் பாடசாலைக்கும் அதன் முகாமைத்துவத்திற்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலும் பெற்றோர்களை திசைதிருப்பும் வகையிலும் பேஸ்புக் தளத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளமை இப்பாடசாலையை நேசிக்கும் அனைவர் மனதிலும் அதிக வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பதிவில் அதிபரும் ஆசிரியர்களும் மயில்க் கட்சியின் வெற்றிக்காக வீடு வீடாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு மானிய அட்டைகளை வழங்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியே சென்றிருந்த அதிபரும் உள்ளடங்கலான 08 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரின் சகோதரியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சரின் செயலாளரின் மனைவியும், ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரின் மனைவியின் சகோதரியும், பொலிஸ் அதிகாரியொருவரின் மனைவியும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறிருக்க எப்படி வெவ்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு மாத்திரம் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்?

அல்லது அதிபரும் ஆசிரியர்களும் ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய துண்டுப் பிரசுரங்களை அல்லது அட்டைகளை வழங்கிய போது எடுத்த வீடியோ ஆதாரமோ இக்குழு யாருக்காவது வாக்களிக்கச் சொல்லும் போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வைத்தோ நிரூபிக்க முடியுமா?

அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களிக்கச் சொல்லி ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டிற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட முடியுமா?

மானியம் வழங்குவதானது பிரதேச செயலகத்தின் வேலை. அதை எப்படி ஒரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் மேற்கொள்ள முடியும்? அதிபர் அடங்கலான 08 பேர் கொண்ட குழு ஹாரூன் ஸஹ்வி அவர்களின் வீட்டுக்கு மாத்திரமே அன்றைய தினம் சென்றிருந்தவேளையே சம்பவம் நடைபெற்று காயமடைந்த மாணவனைப் பார்க்க அவகாசம் இல்லாததால் இந்தக் குழு திரும்பியிருந்தது. அவ்வாறிருக்க நாங்கள் விசாரணையில் அளித்த வாக்குமூலங்கள் வெவ்வேறானவை என்று எவ்வாறு கூறமுடியும்?

மேலும், இப்பாடசாலையின் அதிபர் தனது பதவித் தரத்தை கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறித்த அதிபர் 2006ம் ஆண்டு இடம்பெற்ற அகில இலங்கை அதிபர் தரத்திற்கான பரீட்சை எழுதி சித்தியடைந்தவர் என்பதோடு 2012ம் ஆண்டு அதிபர் தரம் இரண்டிற்கு சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு கல்குடாத் தொகுதியில் அதிபர் நியமனம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



பாரியதொரு நிதித் தேவையும் பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பும்

இந்தப் பாடசாலையின் இடநெருக்கடியைக் கருத்திற்கொண்டு அருகிலுள்ள காணியொன்றினைக் கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டு சுமார் 35 இலட்ச ரூபாய் தேவையாக இருந்தது. அதனைக் குறுகிய காலத்தில் சேகரித்துக் காணியினைக் கொள்வனவு செய்ய காணிக் கொள்வனவுக் குழு அமைக்கப்பட்டு இதுவரை சுமார் 25 இலட்ச ரூபாய் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29.01.2018ம் திகதி திங்கட்கிழமை முதற்கட்ட பணத் தொகை காணி உரிமையாளருக்கு வழங்கி உறுதிப் பத்திரம் எழுதுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மிகுதியாகத் தேவையாகவுள்ள பணத்தையும் விரைவில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாரியதொரு சவாலான இலக்கை ஒரு பெண் அதிபராக தனது நேரகாலத்தை அர்ப்பணிப்புச் செய்து அடைவதென்பது ஒரு இலேசான காரியமல்ல. அத்தோடு இதற்காக இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பாடசாலை முகாமைத்துவக் குழு, காணிக் கொள்வனவுக் குழு மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது நிறைவேறும் தருணம் ஓட்டமாவடி 03ஆம் வட்டார வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்


இவ்வாறானதொரு அர்ப்பணிப்புடன் செயற்படும் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களை இந்த மூன்றாம் வட்டாரத்தில் பிறந்த ஒருவர், இந்தப் பாடசாலையின் வளர்ச்சியில் எவ்வித பங்கும் கொண்டிருக்காத ஒருவர், காணிக் கொள்வனவிற்காக ஒரு சதமேனும் வழங்காத ஒருவர் உரிய தரப்பினரிடமிருந்து விசாரிக்காமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதானது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். அந்தவகையில் இந்த ஓட்டமாவடி 03ம் வட்டார மக்களுக்கு எங்கள் மீது வீணான பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள விபரங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக மேற்படி விடயங்கள் செய்தியாகப் பதிவிடப்படுகின்றது.

மேற்படி கருத்துக்கள் அனைத்தும் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் அவர்களினால் © ODDAMAVADI NEWS செய்திச் சேவைக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டவையாகும்.

© ODDAMAVADI NEWS

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்காக பல லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள கட்டார் வாழ் பழைய மாணவர்கள்

Posted in

மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நினைவாக பாடசாலைக்கு பஸ் வண்டியொன்றை அன்பளிப்புச் செய்வதென்று கட்டார் வாழ் பழைய மாணவர் அமைப்பினர் (QATAR OBA) ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். அதன்படி நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். மேற்படி பஸ் கொள்வனவுக்கான நிதி சேகரிப்பு நிலைமைகளை ஆராயும் QATAR OBAயின் கலந்துரையாடல் கட்டார் லக்பிமையில் 26.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான கட்டார் வாழ் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் இதுவரை பஸ் கொள்வனவிற்காக பதினேழு இலட்சத்து எழுபத்தி மூவாயிரத்தி என்பத்தியிரண்டு ரூபாய் தொன்னூற்றி ஒன்பது சதம் (1773382.99) சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதியாகத் தேவையாகவுள்ள பணத்தை விரைவாகத் திரட்டி பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்து பாடசாலைக்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தகவல்-முஹம்மட் அனஸ்

© ODDAMAVADI NEWS

அகில இலங்கை ரீதியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

Posted in


முஸ்லிம் கலாச்சார விவகாரங்களுக்கான திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட அறபு பேச்சு போட்டியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் BA.றிப்கான் முதலாம் இடம்  பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து உள்ளார். 

இந்த மாணவர் ஏற்கனவே பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் வெற்றிகளைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கும் இவ்வூருக்கும் பெருமை தேடித் தந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் ஓட்டமாவடி மற்றும் கல்குடா பிரதேசங்களில் அறிவிப்புத் துறையில் வளர்ந்து வரும் ஒரு அறிவிப்பாளர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் போது நடாத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளராக தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றியிருந்தார்.

இந்த மாணவருக்கு ஊக்கமளித்து தேசிய ரீதியில் முதலிடம் பெறுவதற்கு உதவியாய் இருந்த பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ODDAMAVADI NEWS செய்திச்சேவை சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


ODDAMAVADI NEWS

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு OBA'98இனால் குளிர்சாதனப் பெட்டி அன்பளிப்பு

Posted in
மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்புக்களுள் ஒன்றான OBA'98இனால் இன்று 24.01.2018ம்கு திகதி குளிர்சாதனப் பெட்டியொன்று பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் OBA'98 சார்பாக அதன் தலைவர் ஏ.பி.எம். றிஸ்வின், ஆலோசகர் டொக்டர். எம்.எச்.எம். ஜெஸீர், முன்னாள் தலைவர் கே.எல்.எம். இர்சாத், செயலாளர் எம்.ஐ. நுபைல், பொருளாளர் ஏ.எம். பைஷர்  மற்றும் நிருவாக உறுப்பினர்களான எம். மன்சூர், ஏ. அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு குளிர்சாதனப் பெட்டியை அன்பளிப்பாக கைளித்திருந்தனர். 

பாடசாலை சார்பாக மதிப்பிற்குரிய அதிபர் எம்.ஏ. ஹலீம் இஷ்ஹாக் அவர்களும் பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தனர். 




கற்ற காலத்தைத் தாண்டி பழைய மாணவர்களாக தமது பாடசாலைக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் அர்ப்பணிப்புக்களையும் வழங்கி பாடசாலை சமூகத்தை ஊக்குவித்து அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக OBA'98 பழைய மாணவர் அமைப்பு விளங்குவதாக அதிபர் அவர்கள் இதன்போது பாராட்டியிருந்தார்கள். 

அத்தோடு பிரதான பழைய மாணவர் அமைப்பை ஒன்றுசேர்ப்பதிலும் அதனூடாக இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் ஏனைய பழைய மாணவர் அமைப்புக்களோடு சேர்ந்து பாரிய பங்காற்றியவர்கள் OBA'98 அமைப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

© ODDAMAVADI NEWS