Posted in
போதையை ஒழிப்போம் துண்டுபிரசுரம், போதை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு, போதை ஒழிப்பு நடைபவணி இப்படியெல்லாம் பல்வேறுபட்ட பொது அமைப்பினரும், சில அரசியல்வாதிகளும் போதை பொருள் பாவனையுள்ள பிரதேசங்களில் இவற்றை ஒழிப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை, வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்தவர்கள் திருந்தியமாகவும் இல்லை. அவர்களுக்கெதிராக அப்பிரதேசங்களிலுள்ளவர்கள் ஊரின் நன்மைகருதி எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் இவ்வாறான பிரதேசங்களில் நீடிக்கவிட்டால் இதனால் பாதிக்கப்படுவது அப்பிரதேசங்களிலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகும் போதை மாத்திரை குலிசை வியாபாரிகளோ அல்ல அப்பிரதேசங்களில் வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயமே என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். பொதுப்படையாக நம் பேச்சுவழக்கில் சொல்வதென்றால் எதுவிதமான செல்வாக்கும் அற்ற சாதாரண போதை மாத்திரை விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டால் வெளிவராத வகையில் அவருக்கெதிராக சட்டங்கள் இறுக்கப்பட்டு, பிணையில் வெளிவராத நிலையில் ஆழாக்கப்படுகின்றார். இதுவே பொலிஸ் மற்றும் அரசியல் செல்வாக்குள்ள ஒரு போதை மாத்திரை வியாபாரி கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக சட்டங்கள் இலகுவாக்கப்பட்டு, இரவோடு இரவாக பிணை அனுமதியும் வழங்கப்படுகின்றது. இவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பழியாகின்றது.
போதையை ஒழிக்க வேண்டும், போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற எந்த அரசியல்வாதியாவது இவற்றை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்தியதுண்டா? அல்லது சட்டங்களை ஏற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற பாராளுமன்றத்தில் முயற்சித்ததுண்டா? இது உள்ளுர் அரசியல் சபைகளை ஆளுபவர்களுக்கும் பொறுந்தும். சில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தினை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டிற்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு நம் சமூகத்தினை சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் துணைபோகின்றனர். இதற்கு தீர்க்கமான இவ்வாறான பிரதேசங்களை மையப்படுத்தி சிந்தித்து செயற்படக்கூடிய இளைஞர்கள் ஒன்றிணைந்து இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
-MTM. Haither-
© ODDAMAVADI NEWS