Posted in
மருத்துவ ரீதியான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கி வரும் வறியவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிடும் முகமாக "உயிர்காக்க உதவிடுவோம்” என்ற தொனிப் பொருளில் கலந்துரையாடலொன்று இன்று 19.01.2018ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணியளவில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
ஏற்கனவே பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டதற்கமைவாக மீராவோடை மற்றும் மாஞ்சோலை பிரதேசங்களைச் சேர்ந்த பொது நலனில் அக்கறையுள்ள பலரும் கலந்து கொண்டு தத்தமது பெருமதியான கருத்துக்களை மிகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்திருந்தனர். குறுகியதொரு கால இடைவெளியில் மீராவோடைப் பிரதேசத்திற்குட்பட்ட சுமார் நான்கு பேர் கிட்னிப் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சமகாலத்தின் முக்கிய பேசுபொருளாகவும் இது காணப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தன. அந்தவகையில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகி வைத்திய செலவுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு சமூகத்தின அனைத்து தரப்பினரும் இணைந்து ஒரு அமைப்பினை உருவாக்கி அதனூடாக உதவிகளை வழங்கி எமது சகோதரர்களின் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்து மீராவோடை முஹம்மட் யாசீன் அவர்களால் பேஸ்புக் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தது. அத்தோடு பலரும் அதற்காக முன்வந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் தங்களது விருப்பத்தினைத் தெரிவித்திருந்தனர்.
இதன் முதற்கட்டமாக இன்றைய கலந்துரையாடல் காணப்பட்டதோடு அமைப்பின் அங்குரார்ப்பணமும் இடம்பெற்றது. இதன்போது செயற்குழு ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டு செயலாளராக எஸ்.எம். றிப்னாஸ் அவர்களும் தலைவராக ஏ.எல். முஹம்மட் யாசீன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
எதிர்காலத்தில் கல்குடா முஸ்லிம் பிரதேச பள்ளிவாயல் நிருவாகிகள், வைத்தியர்கள், கல்விமான்கள், செல்வந்தர்கள், உலமா சபை, வர்த்தக சம்மேளனம் பொதுமக்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு நிருவாக சபையை உடனடியாக அமைத்து செயற்படுவதென்றும் ஏகமனதான முடிவு எட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
© ODDAMAVADI NEWS