Follow me on Twitter RSS FEED

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Posted in
-M.T. Haither Ali-
மீராவோடை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் 2019.02.10ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலையின், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள், கிடைக்கப்பெற்ற விடயங்கள் மற்றும் கிடைக்க இருக்கின்ற விடயங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 

இச்சந்திப்பில், கலந்தாலோசிக்கப்பட்ட மிக பிரதானமான விடயங்களாக, ஆளணிக்கேற்ப வைத்தியர்களை பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், கிழக்கு மாகாண ஆளுநரை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக கையளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் என பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், இன்றைய அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று விடுதி/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் 2019.02.15ஆம் திகதி - வெள்ளிக்கிழமை பிரதேசத்திலுள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல்களில் ஜூம்ஆவின் பின்னர் இது தொடர்பான அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தப்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

ஒரு விடயத்தினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் பல்வேறுபட்ட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புக்களையும், காத்திருப்புக்களையும் மேற்கொள்வதனூடாகவே அதன் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள மீராவோடை வைத்தியசாலையானது முஸ்லிம் மற்றும் தமிழ் இரு இன மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு வைத்தியசாலையாகும் காணப்படுகின்றது.

பொத்தானையில் பறி போகும் முஸ்லிம்களின் பூர்வீகம்: ஆளுநர் கவனத்திற்கொள்வாரா?

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி- 
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு கட்டளையொன்றைப் பிறப்பித்திருந்ததுடன், அம்பாறையில் வன இலாகாவினர் மக்கள் குடியிருப்பு காணிகளைக் கையகப்படுத்த எடுத்த முயற்சியை, ஆளுநர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தமையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், புதிய கிழக்கு மாகாண ஆளுநர் காணிப்பிரச்சினைக்கு சரியான தீர்வினை பெற்றத்தருவார் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

கிழக்கிலும் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் தற்போதைய ஆளுநர் முற்றுமுழுதாக அறிந்தவர் என்ற வகையில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் வழங்கப்படாமலிருந்த காணி உறுதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்து.

அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீள வழங்கத்தேவையான நடவடிக்கைளை முன்னெடுப்பதோடு, இப்பிரதேசத்தில் காணப்படும் பாதுகாப்புப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளையும் மீட்டுத்தர வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.

அத்தோடு, இப்பிரதேசத்திலுள்ள மீள்குடியேற்றக்கிராமங்கள் தொடர்பிலும் ஆளுநர் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பது மீள்குடியேறியுள்ள மக்களின் வேண்டுகோளாகவுமுள்ளது.

இது காலவரை பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மீள்குடியேறியுள்ள மக்கள், சரியான அடிப்படை வசதிகளின்றி தமது காணிக்கான ஆவணங்கள் கிடைக்காமல் ஏனைய திணைக்கள அதிகாரிகளின் அழுத்தங்கள் என்பவற்றால் தொந்து போயுள்ள அவர்களுக்கு தாங்கள் காணி மீட்பு தொடர்பில் மேற்கொண்டு வரும் துரித செயற்பாடு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், இப்பிரதேசத்தை அண்டிக்காணப்படும் பொத்தானை மீள்குடியேற்றக்கிராமத்தின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக 210 E கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பொத்தனை கிராமத்தில் 40 தமிழ் குடும்பங்களும் 45 முஸ்லிம் குடும்பங்களும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழும் மாதுறு ஓயா யானைகள் சரணாலயம் திட்டத்தின் கீழும் பொத்தனை பிரதேசத்திலுள்ள பல ஏக்கர் முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகளும் வயல் நிலங்களும் பறி போகும் நிலையேற்பட்டுள்ளமை பிரதேச செயலகத்தின் ஊர்ஜிதமான தகவல்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

கடந்த சில தினங்களாக மேற்குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து அளவீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் மிக விரைவில் அக்காணிகள் அனைத்தும் குறித்த திணைக்களங்களின் கொண்டு வரப்படும் நிலையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் பல ஏக்கர் நிலங்களை இழக்கும் அபாய நிலையேற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் பல்வேறு இழப்புகளை அனுபவித்த இப்பிரதேச மக்களும் விவசாயிகளும் தற்போது இவ்வாறான நிருவாக ரீதியான நெருக்குதல்களை எதிர்கொண்டு வருவது தொடர்பிலும் மேற்குறித்த திணைக்களங்களின் நடவடிக்கை தொடர்பிலும் கிழக்கு மாகாண ஆளுநரும் பிரதேச அரசியல்வாதிகளும் சமூக மட்ட அமைப்புகளும் உடனடியாக கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களது கோரிக்கையாகும்.

பொத்தானை மக்களின் காநிப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா? அல்லது அங்கிருந்து வெளியேறும் நிலை உருவாகுமா?

பொத்தானை மீள்குடியேற்றக் கிராமத்தின் பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்கள கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் சிவில் சமூகச்செயற்பாட்டாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைத் நளீமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையை காலத்தேவை கருத்தி மீள்பிரசுரம் செய்கின்றோம்.

கட்டுரை
பொத்தானை மக்களது மீள்குடியேற்ற பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்- ஜுனைட் நளீமி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாகக் கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ், முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த போதும் பயங்கரவாதச்சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயர வேண்டி வந்தது.

உயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறுவதில் பல சிரமங்களைத் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.

உத்தியோகபூர்வ அவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றதுடன், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களை பலப்படுத்துவதில் முனைப்புக்கொண்டுள்ள போதும் பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, புலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றன. இவற்றினை துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்ற போது அதிகாரிகளாலும், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர்.

அத்தோடு, வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லைக்கற்களை நட்டுள்ளதால், முறுகல் நிலையேற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர்.

மக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களைக் களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன், நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின், அதனை உரிய முறைப்படி விடிவித்து, எல்லைக்கற்களை இடுவதாக வாக்களித்தனர்.

இதனடிப்படையில் சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாதெனவும் குறிப்பிட்டனர். இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா? என மக்கள் வினவிய போது இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலயத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதால், இது குறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டுமென பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

என்ற போதும், குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை பொது மக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.

இக்கிராம மக்களது அடிப்படைத்தேவைகளான பாடசாலை, விளையாட்டு மைதானம், வைத்தியசாலை, பொது மயானம் போன்ற பொதுத்தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என்பதுடன் பொது மையவாடிக்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓயாத்திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதி வாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேசவாசிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.

காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் முயற்சியால் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டு கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரங்கள் - பொறி. ஷிப்லி பாறூக்

Posted in
-எம்.ரி.எம்.ஹைதர் அலி-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் (கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரம்) இரண்டு காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவுள்ளன. 


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள வாகனங்களில் காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரு வாகனங்களும் நகர சபை சாரதிகளால் துறைமுக வாகனம் நிறுத்தும் இடமான மிரிச்சிவலயில் இருந்து இன்று எடுத்துச் செல்லப்பட்டு காலியில் பையளிப்பு இடம்பெறவுள்ள ஹொலிடே ஹாள் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் காலியில் வைத்து நாளைமறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நகர சபையிடம் கையளிக்கவுள்ளார். 

காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை சார்பாக நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இவ்விரு இயந்திரங்களையும் ஒதுக்கீடு செய்தமைக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசுக்கு காத்தான்குடி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் நகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். 

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான முதற்கட்ட இயந்திர தொகுதிகள் இலங்கை வந்தடைந்துள்ளன, அவற்றில் 16 இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும் கொரிய மற்றும் இந்திய நாடுகளின் உதவியுடன் இரண்டாம் கட்ட இயந்திர தொகுதிகள் கூடிய விரைவில் இலங்கை வந்தடையவுள்ளன. அவற்றிலும் பல இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் கலாசாலைக்கு புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

Posted in

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் பள்ளிவாயலில் இயங்கிவரும் குர்ஆன் கலாசாலைக்கு இன்று 07.02.2019ம் திகதி அஸர் தொழுகையின் நேரம் ஒரு தொகை புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். சிம்ஷான் மற்றும் அந்நிறுவனத்தின் செயலாளர் ஏ.பி.எம். றிஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டு புனித குர்ஆன் பிரதிகளை குறித்த கலாசாலையின் பொறுப்புதாரியான முஹாஜிரின் மௌலவி அவர்களிடம் கையளித்திருந்தனர். அத்தோடு எதிர்காலத்திலும் புனித குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் பெற்றுத் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.





அதிகரித்துள்ள போதைவஸ்து விற்பனையை ஒழிக்க இராணுவத்தினர் களமிறக்கப்பட வேண்டும்.

Posted in
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல். அஹமட் அவர்கள் எமது செயதிச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் “அண்மைக்காலமாக எமது கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து விற்பனை அதிகரித்து வருவதினால் அதனை பாவிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அதிகம் இளம் மாணவ சமூகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதோடு எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்தோடு போதைவஸ்து பாவனையாளர்களை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சாதகமான நிலை காணப்பட்டாலும் அதனை விற்பனை செய்பவர்கள் மற்றும் இடைவிநியோகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்தினால் மாத்திரமே போதைவஸ்துக்களை எமது பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் “அந்தவகையில் போதைவஸ்து விற்பனை மற்றும் விநியோக மார்க்கங்களை தடைசெய்து அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசாரும் விஷேட அதிரடிப் படையினரும் அவர்களுக்கு இயலுமானளவு செய்து வருகின்றார்கள். இருந்தாலும் பாரிய நடவடிக்கைகளில் இறங்கக் கூடியளவு ஆளணி வளம் அவர்களிடம் இல்லாமை எமக்குப் புலனாகின்றது. அத்தோடு குறிப்பிட்ட சில நடவடிக்கைகளின் போது ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு போதைவஸ்து வியாபாரிகளினால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளமையும் மறுக்க முடியாததொன்றாகும். 

போதைவஸ்து விற்பனையாளர்களின் வலைப்பின்னல் பரந்து காணப்படுகின்ற இந்நிலையில் அவர்களின் மீது முழுமையானதும் பாரியளவிலும் ஒரே தடவையிலும் நடவடிக்கையில் இறங்க இராணுவத்தினரே பொருத்தமானவர்கள். இந்த நாட்டின் மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து எம் அனைவரையும் சாந்தியும் சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு பாரிய தியாகங்களை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு இந்த போதைவஸ்து வியாபாரிகளை ஒழிப்பது என்பது பெரிய விடயமாகாது. ஆகவே பொலிசார், விஷேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை இந்நடவடிக்கையில் முற்றாக இறக்கி எமது இளஞ் சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பையும் நாம் அனைவரையும் ஒன்றிணைந்து இராணுவத்தினருக்கு வழங்க வேண்டும். 

இந்நடவடிக்கையில் இராணுவத்தினரைக் கொண்டுவந்து களமிறக்குவது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகத்தினர், பொதுமக்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் இணைந்து கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கூடாக இராணுவத் தளபதிக்கும் மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கோரிக்கை முன் வைக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஹனீபா அவர்களின் சுதந்திர தினச் செய்தி

Posted in
எமது நாட்டில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையும், தன்னம்பிக்கை இழந்து தங்களது உயிர்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் தற்கொலை கலாசாரத்தில் இருந்தும் விடுபட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஜனாப் அபூபக்கர் முகம்மது ஹனீபா தெரிவித்தார். 

எமது தேசத்தின் 71வது சுதந்திர தினத்தின் வாழ்த்து செய்தியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வளர்ந்து வரும் வளர்முக நாடுகளில் மதங்களின் தோற்றமும், வளர்ச்சியும் காணப்படுகின்ற போதும் அது எந்தளவிற்கு மனித உள்ளங்களில் இடம்பிடித்துள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இன்றைய இளைஞர் சமூகம் ஆன்மீக செழிப்புடன் தங்களது விவகாரங்களை கையாள கற்றுக் கொள்வதன் மூலம் எமது தேசம் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயனிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் சிறந்த திட்டமிடலுடனான ஆரம்பம்

Posted in
கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் அலுவலக திறப்புவிழா ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் திறந்து வைக்கும் நிகழ்வு 2019.02.01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஜமாஅத்தார்கள், உலமாக்கள், மற்றும் புத்திஜீவிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான ஜனாப் அபூபக்கர் தாஹிர் அவர்கள் அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். 

இந்நிகழ்வு ஜனாஸா நலன் சேவை அமைப்பின் தலைவரும், ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் ஜனாப் முஸ்தபா (ஸிராஜி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான ஜனாப் அபூபக்கர் தாஹிர் அவர்கள் உரையாற்றும்போது ”ஒரு சாதாரண ஜனாஸாவாக அதாவது இயற்கையான மரணமாக இருக்கும் போது அவ்வளவு சிக்கல்கள், பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. அதுவே விபத்தாகவோ அல்லது ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ ஒருவர் மரணித்து விட்டால் அந்த ஜனாஸாவை தேடி எடுக்க ஏனையவர்களின் உதவியை நாம் நாடவேண்டிய தேவை ஏற்பட்டு விடுகின்றது. அந்தவகையில் இந்த அமைப்பானது அதற்கான உபகரணங்களை தன்னகத்தே கொண்டு அதற்கான சிறப்பான சேவையை முன்னெடுக்க ஆலோசித்து இருப்பது ஒருபடி மேல் சென்று தனது சேவையை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பது வரவேற்க தக்க விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமைப்பின் நோக்கம் மற்றும் சேவைகள் தொடர்பாக நலன் சேவை அமைப்பின் செயலாளரும் ஆசிரியருமான ஜனாப் எம்.எம் உவைஸ் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன். ஜம்மியத்துல் உலமா சார்பாக ஓட்டமாவடி பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் அசனார் இல்யாஸ் (கபூரி) அவர்களினால் கருத்துரை முன் வைக்கப்பட்டது. நலன் சேவை அமைப்பின் அலுவலகத்தினை ஓய்வு பெற்ற கல்விப்பனிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.காதர் அவர்களினால் பிரமுகர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.


மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் சந்திப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

மீராவோடை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினருக்கும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு 2019.01.30ஆம் திகதி (நேற்று) மட்டக்களப்பில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் மீராவோடை வைத்தியசாலையில் நிலவும் ஆளணிகள் பற்றாக்குறை தொடர்பாகவும், இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் படும் சிரமங்கள் தொடர்பாகவும் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கடந்த கால சந்திப்புக்களின்போது ஏற்கனவே அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட ஆளணி கோரிக்கைகளில் ஒருசில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுத்தந்தமைக்காக அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நன்றி பாராட்டப்பட்டார்.

அதில், தாதி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் அன்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு உருதுணையாக இருந்தார்.

மேலும், இங்கு நாளாந்தம் சுமார் 300 பேர் வெளிநோயாளர் பிரிவிலும், கிட்டத்தட்ட 1400 பேர் கிளினிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் இவ்வாறான நிலையில் தற்போது இவ்வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.


இவ்வைத்தியசாலையினை நாடிவரும் மக்களுக்கு இன்னும் தனது சிறப்பான சுகாதார சேவையினை வழங்குவதற்காக இங்கு காணப்படும் வைத்தியர்களின் வெற்றிட ஆளணிக்கேற்ப இரு வைத்தியர்கள் தேவைப்பாடாக உள்ளதாகவும், அத்துடன் சிற்றூழியர்கள் தேவைப்பாடுகள் பற்றியும் இன்றைய சந்திப்பில் மிக பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இம்முறை வழங்கப்படவுள்ள வைத்தியர்களுக்கான நியமன வெற்றிடத்தில் மீராவோடை வைத்தியசாலைக்கு இன்னுமொரு வைத்தியரை நியமிப்பதற்கான வெற்றிடம் காட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எவரேனும் தங்களின் பிரதேசங்களிலிருந்தோ அல்லது வேறு பிரதேசங்களிலிருந்தோ வைத்தியர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இன்னுமொரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைக்கேற்ப சிற்றூழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வைத்தியசாலையின்மீது இன்னுமொரு கரிசனையாளராக செயற்பட்டுவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நேரத்தினையும் பெற்றுத்தந்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ததுடன், இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துகொண்டு இவ்வைத்தியசாலை இரு சமூகங்களும் நன்மையடையும் ஒரு வைத்தியசாலையாக அப்பிரதேசத்தில் காணப்படுவதுடன், அதற்கான ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளின் அவசியத் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எடுத்துரைத்தார்.

அது மாத்திரமல்லாமல், இவ்வைத்தியசாலையில் இன்னுமொரு வைத்தியரை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியருக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பான ஆளணி வெற்றிடம் காண்பிக்கப்படுவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளையும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்னெடுத்திருந்தார்.

“பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும்” சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி. றிஸ்வி (மஜீதி)

Posted in
பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது. 

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்கள் உரையாற்றுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதோடு அவர்களுக்காக இறைவனிடத்தில் துஆச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அத்தோடு “இங்கு இருக்கின்ற பெற்றோர்கள் நல்ல சந்ததியினரை உருவாக்க வேண்டும். வெறுமனே நாம் நன்றாக வாழ்ந்துவிட்டு இந்த சமூகம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் பரவாயில்லை என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கியது மட்டுமல்லாது நல்ல தலைவர்களையும் எமக்கு வெளிக்காட்டினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அப10பக்கர் ரழி அதற்குப் பிறகு உமர் ரழி, உதுமான் ரழி, அலி ரழி என தலைமைத்துவங்களை அடையாளப்படுத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய சமூகத்தில் எல்லாம் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமூகத் தலைமைகள் உருவாகும் போது அதனைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவதுடன் சமூகத்தில் பாரிய இடைவெளி ஏற்படுகின்ற நிலைமைகளும் ஏற்பட்டு விடுகின்றன. எனவே பிறைந்துறைச்சேனை சமூகம் நல்ல ஆளுமைகளை உருவாக்கி இருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் அதன் பிரதிபலன்களை இச்சமூகம் எதிர்காலத்தில் அடைந்து கொள்ளும்” என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார். 


மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்களும், ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



“பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” – மட்டு. மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர்.

Posted in

பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது. 


மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்கள்  “பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” என்று தனது உரையில் தெரிவித்தார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் “இங்கு நான்கு வகையான தரப்பினர் வருகை தந்திருக்கின்றோம். 1. தந்தைமார்கள் 2. தாய்மார்கள் 3. இந்த நிகழ்வின் கதாநாயகர்களும் இப்பிரதேசத்தின் முத்துக்களுமான பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்மைக்காக கௌரவிக்கப்படவிருப்பவர்கள் 4. மேடையில் வீற்றிருக்கும் அதிதிகள். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தரப்பினரும் தத்தமது கடமைகளை அல்லாஹ்வுக்குப் பயந்து சரியான சமூகக் கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்போமாக இருந்தால் இன்றைய சமூகப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்” என்றும் தெரிவித்தார். 

மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்களும்,  ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 






மார்க்கத்தை கொச்சைப்படுத்தி வைத்தியத்துறையை கேவலப்படுத்தும் நுஸ்ரான் பின்னூரியின் வாழைச்சேனைக்கான வருகையைப் புறக்கணிப்போம்

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-

தூய்மையான இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சித்து பல கருத்துக்களை அண்மைக்காலமாகத் தெரிவித்து வருவதுடன், நவீன வைத்தியத்துறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் “சத்திர சிகிச்சை ஹராம், தடுப்பூசி யூத சதி” எனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப்பரப்பி வரும் நுஸ்ரான் பின்னூரி வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலில் நாளை 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதற்காக வருகை தரவுள்ளதாகவும், மீராவோடை போன்ற பிரதேசங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் வைத்தியத்துறையையும் கொச்சப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் இப்பிரதேச மக்களையும் பிழையான வழிகளுக்கு திசை திருப்ப வாய்ப்புள்ளது.

இவரின் பொய்யான வைத்தியத்தை நம்பி ஏமாந்த பலர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதுடன், இவரால் வெறும் ஆறே நாட்களில் உருவாக்கப்பட்ட போலி வைத்தியர்களும் நாட்டின் பல பகுதிகளிலும் அப்பாவி மக்களை எமாற்றி பிழைப்பு நடாத்தும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் எமது பிரதேச மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதைத் தடுக்கும் நோக்கில் இவரது வருகை தடை செய்வதுடன், இதன் ஏற்பாட்டாளர்கள் சமூக ரீதியாக இவர் மீதுள்ள விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கவனத்திற்கொண்டு குறித்த நிகழ்வுகளை இரத்துச் செய்து சமூக நன்மைக்கு வழிவகுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம். 

இது விடயத்தில் கல்குடா உலமா சபை மற்றும் சமூக அமைப்புக்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவர் வைத்தியத்துறை தொடர்பில் பிழையான தகவல்களைப் பகிர்ந்து வருவதுடன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்களை நாட வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தையும் முன் வைத்து சமூகத்தை பிழையாக வழி நடாத்த முயலும் ஒருவர் என்பதுடன், தன் வாழ்வில் இவைகளை எடுத்து நடக்க முடியாமல் தனது மனைவியின் பிரவசத்திற்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தமையும் வெளிச்சத்திற்கு வந்து மூக்குடைந்து போனமையும் குறிப்பிடத்தக்கது. கல்வி ரீதியான இவரின் கருத்துக்களும் கண்டனத்துக்குள்ளானது. தன் கருத்துக்களை தன் வாழ்வில் எடுத்து நடக்க முடியாத ஒருவர் சமூகத்தை பிழையான வழியில் நடாத்த நாம் எவரும் அனுமதிக்க முடியாது. இந்த வகையில் இவ்வாறான போலி மார்க்கவாதிகளை நாம் புறக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே, கல்குடா உலமா சபையினரே, சமூக மட்ட அமைப்புக்களே, பள்ளிவாயல் நிருவாக சபையினரே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே சிந்தித்துச் செயற்படுங்கள்.

மீண்டும் முருங்கை ஏறும் இனவாத வேதாளம் : முஸ்லிம்களின் வருமானத்தில் மூட்டப்படும் இனவாதத் தீ

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி -

நாட்டில் ஒரு பக்கம் அரசியல் அரசியலைப்பு மாற்றம் தொடர்பான தீவிர முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன? என்ற ஒரு அங்கலாய்ப்பு ஒரு பக்கம். ஒன்றுபட்ட ஒரே தேசத்தில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க தமிழ் தரப்பினர் ஒன்றுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம்களைத்திசை திருப்பும் செயற்பாடுகள் இனவாதம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழாமலில்லை. இதன் தொடரில் கிழக்கில் இடம்பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள், அதன் பின்னணிகள் ஆபத்தான கட்டங்களை நோக்கி முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்வதாக அமைகிறது. கிழக்கில் நியமிக்கப்பட்ட தமிழ் பேசும் ஆளுநருக்கெதிராக இனவாதம் சாயம் பூசி தீவிரத அமைப்புகளும் கடந்த காலத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்வோரும் தமது தொடர் இனவாதக்கருத்துக்களை அள்ளி வீசி வரும் அதே வேளை, கடந்த காலங்களில் இனவாதம் பேசிய மக்கள் பிரதிநிதிகளின் முஸ்லிம்கள் மீதான அக்கறையும் ஆரோக்கியமானதல்லை. 

முஸ்லிம்களுக்கெதிரான மறைமுக சதியொன்று பின்னப்படுகிறதா? அதன் பின்னணியில் இவ்வாறான இனவாத அமைப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனவா? என்ற அச்சமும் இல்லாமலுமில்லை. இவைகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் உறக்க நிலை சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 

இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னாலுள்ள மர்மங்கள் என்ன? இந்த இனவாதப் பின்னணியில் ஆளுனருக்கெதிராக கடந்த 11.01.2019ம் திகதி முடிக்கி விடப்பட்ட ஹர்த்தால் தமிழர் தரப்பினராலே புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் தமது தோல்விகளை மறைக்க மீண்டும் எதிர்வரும் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய முடக்கப் போராட்டத்திற்கு இனவாத அழைப்பு ஒன்றால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தலைமையில் இயங்கும் இவ்வினவாத அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதே முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலே என்பது மறுப்பதற்கில்லை. இதன் உரிமையாளர் நாடத்துகின்ற சினிமா திரையரங்கு மூலம் கிடக்கின்ற வருமானத்தில் இயங்கும் குறித்த அமைப்பு மிக மோசமாக முஸ்லிம் எதிர்ப்பை ஆரம்பம் முதல் இன்று முன்னெடுத்து வருகின்றது. 

இத்திரையரங்கு இங்கே திரையிடப்படும் தமிழக சினிமா படங்களை காண வரும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் மேலதிக வருமானத்தில் இயங்கி வருவதும் மறுப்பதற்கில்லை. என்ன தான் நாம் இந்த இனவாதியான துறையரங்கு உரிமையாளரால் நசுக்கப்பட்டாலும், நமக்கெதிரான இனவாதப் பிரசாரத்திற்கு நாமே மறைமுகமாக உதவி வருகின்றோம் என்பது கசப்பான உண்மையாகும். எம்மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டே இதன் உரிமையாளர் முஸ்லிம் எதிர்ப்பை தனது அமைப்பு மூலம் மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் உணராமலில்லை. எமக்கெதிராக இனவாதத்தீ மூட்ட நாமே விறகு கொடுக்கிறோம். எம்மவர்கள் அங்கு செல்லாவிட்டால் வருமான இழைப்பை சந்திக்க நிறையவே வாய்ப்புள்ளது. ஆளுனரைத் தான் எதிர்க்கின்றோம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளால் அமைதியை விரும்பும் இரு இனங்களும் பாதிக்கப்படும் நிலையும் இனநல்லுறவு வளர்க்கப்பட்டு வரும் சூழலில் இன முறுகலைத் தோற்றுவித்து இலாபமடைந்து கொள்ள எத்தனிக்கும் செயற்பாடாக இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது, இவ்வாறான தொடர் ஹர்த்தாலுக்குப் பின்னால் பாரிய சதிகள் பின்னப்பட்டு வருகிறதா? என்ற அச்சமுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்பி வரலாற்றுத் துரோகமொன்று இடம்பெற்று விடுமோ என்ற சந்தேகம் எழாமளுமில்லை. 

இவ்வாறான குழப்பங்களை உண்டு பண்ணி தீர்வு யோசனைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை திசை திருப்பும் முயற்சியாக இதனை எண்ணத்தோன்றுகிறது. இந்த அத்தனை இனவாத முன்னெடுப்புக்களின் பின்னாலும் யார் உள்ளார்கள் என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, எந்தவொரு இனமாக இருந்தாலும் ஒரு இனத்திற்கெதிரான இனவாதத்திற்கு மற்றொரு இனம் துணை போய் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் இழைத்து விடக்கூடாதென்பதே எமது வேண்டுகோள். அதே நேரம் மாவட்டம் தழுவிய முடக்கத்தினால் இரு சமூகங்களுமே பொருளாதார இழைப்பைச் சந்திக்கப் போகின்றது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் வர்த்தகர்கள் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் வர்த்தங்க நிலையங்களை மூடுவதால் முழுவதுமாக பாதிக்கப்பட போவது தமிழ் சகோதரர்களே என்பது நிதர்சனமான உண்மை. இந்த இழப்பை இந்த முடக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த எந்தவொரு நபராலும் ஈடு செய்து கொடுக்க முடியுமா என்றால், அது நடக்க வாய்ப்பே இல்லை. அன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதால் உங்கள் பொருளாதரத்தை இழக்கப்படுதைத்தவிர வேறு எதையும் இதன் ஏற்பாட்டாளர்கள் சாதித்து விடப்போவதில்லை என்பதை உணர்ந்து முடக்கப்போராட்டத்தை முறியடிக்க தமிழ் சகோதரர்கள் முன் வர வேண்டும்.

யாழிலிருந்து கிளம்பும் ஹபாயாவுக்கெதிரான இனவாதம்

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராகவும் அவர்களது ஆடைக்கலாசாரத்துக்கெதிராகவும் விஷமத்தனமான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், மீண்டுமொரு இனவாதி யாழிலிருந்து அபாயாவுக்கெதிராக வெளிக்கிழம்பியுள்ளமை கவலையளிக்கின்றது. திருகோணமலை ஷண்முகா இந்துக்கால்லூரி ஹபாயா விவகாரம் தீர்வின்றித்தொடரும் நிலையில், தமது ஆடை கலாசாரத்தைப் பேணவும் நாட்டின் சட்டம் தமக்கு வழங்கியுள்ள உரிமையைப்பேணி நடக்கவும் முஸ்லிம் ஆசிரியைகள் போராடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு செயற்பாடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளமை கிழக்கில் முஸ்லிம்கள் தமது மத, கலாசார உரிமையைப்பேணி நடப்பதில் கேள்வி நிலை தோன்றியுள்ளமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

இவ்வாறு கிழக்கின் நிலை என்றால், வடக்கிலும் இதன் பின்னணியின் பிரச்சினையை உண்டு பண்ணி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துகளை விதைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளமை அபாயகரமான ஒரு சூழலாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் யாழ்.இந்துக்கல்லூரில் இடம்பெற்ற கால்கோள் விழா நிகழ்வுக்குச்சென்று வந்த முஸ்லிம் சகோதரி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துக்களைப் பதிவிட்டுள்ளமை வடக்கிலும் வளர்ந்து வரும் தமிழ்-முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதாகவே தோன்றுகிறது. குறித்த நபர் இட்டுள்ள அப்பதிவில், ஹாபாயாவை இலக்கு வைத்து சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிவிட்டுள்ளதுடன், இன உறவுக்கு வேட்டு வைத்து, வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொள்ள எத்தனிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. 

யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு சுமூக நிலை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்துக்கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களும் கல்வி பயிலலாம். ஆசிரிய, ஆசிரியைகள் தங்களது ஆடைக்கலாசாரத்தைப் பேணி கற்பித்தலில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளதுடன், இன நல்லுறவு வலுப்பெற்று வரும் சூழலைத்தாங்கிக் கொள்ள முடியாத இவ்வாறான விசமிகள் இனக்குரோதங்களை உண்டு பண்ணி எப்போது இனங்களைப் பிரித்தாளும் தந்திரங்களையே மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம், முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கும் எந்த இந்து மாணவர்களுக்கோ, கற்பிக்கும் எந்தவொரு ஆசிரிய, ஆசிரியைகளுக்கு எதிராகவோ இவ்வாறான எந்தச்செயற்பாடும் இடம்பெறவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது கடந்த காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இனவாதம் வெற்றியளிக்காத நிலையில், இப்போது இஸ்லாமியர்களின் கலாசார, வணக்க வழிபாடுகளில் கை வைக்கும் கைங்கரியத்தை கன கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு துருப்புச்சீட்டாக இவரைப்போன்ற சிலர் பயன்படுத்தப்படுகிறார்கள். சில அற்ப சொற்ப இலாபங்களை இலக்காகக்கொண்டு செயற்படும் குழுவினர் இதன் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர் என்பதை அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். 

இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் தத்தமது மத, ஆடை கலாசாரங்களைப் பேணி நடக்க நாட்டின் சட்டம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவ் வாறானவர்களின் செயற்பாடுகளினால் அந்த உரிமை கொச்சைப்படுத்தப்படுவதற்கு சட்டமும் நீதியும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறான விசக்கிருமிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். குறித்த நபர் இட்டுள்ள பதிவின் கீழ் நல்லுறவை விரும்பும் இந்து சகோதரர்கள் நியாயமான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். 

குறிப்பாக, பாடசாலை செல்லும் மாணவர்கள் சீருடை அணிய வேண்டியது அவசியம். அதே நேரம், மாணவனின் தாயும் பாடசாலை சீருடை அணிந்து தானா பாடசாலைக்கு வர வேண்டும்? எனத்தொடுத்துள்ள கேள்வி சிந்திக்க வேண்டியதே. இன நல்லுறவை விரும்பும் அவ்வாறானவர்களின் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறான இனவாத சதிகளுக்குள் ஏனைய இந்து சகோதரர்களும் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ந்து கொள்வதோடு, இன நல்லுறவை வளர்க்க முன்வர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டாலும் நிருவாக, மத, கலாசார ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியின் பயனாக சுகாதார இராஜாங்க அமைச்சரினால் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி கையளிப்பு

Posted in
-M.T. Haither Ali-

சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) வழங்கும் செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலையையும் உள்வாங்கி புதிய அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினை பெற்றுத்தருமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களிடம் மீராவோடை வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியினால் சுகாதார அமைச்சின் குறித்த செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலை உள்வாங்கப்பட்டு இன்று (19) பிற்பகல் 4 மணிக்கு நிந்தவூரில் வைத்து சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் அபிவிருத்திக் குழு மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாக புதிய அம்பியுலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்துகொண்டார்.


வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களை 2017.07.23ஆம் திகதி நிந்தவூர் காரியாலயத்தில் சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது இவற்றினை கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அன்றைய தினமே இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டார்.

அச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு வழங்கிய சில வாக்குறுதிகளுக்கமைவாக இன்று இவ்வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளது. 

இச்சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளில் ஒன்றினை நிவர்த்தி செய்து தந்தமைக்காக அபிவிருத்திக் குழுவினரால் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நேற்றைய நிகழ்வில் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


இச்சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தி, புதிய அம்பியுலன்ஸ் வண்டி கிடைக்கப் பெறுவதற்கு உதவியாக இருந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சரின் ஊடகச் செயலாளர் எச்.எம். கபீர் மற்றும் இணைப்புச் செயலாளர் உமர் அலி மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் என்பன நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்தி குழு இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பெரிதும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் இயங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.






திருகோணமலை காணி பிரச்சினைகள், தனியான கல்வி வலயம் தொடர்பான ஆவணங்கள் அன்வரினால் கிழக்கு ஆளுனரிடம் கையளிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை இன்று (17) ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தை கூறியதுடன், புல்மோட்டை காணி மற்றும் திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளடங்கிய ஆவணங்கள் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான கடிதமொன்றினையும் ஆளுனரிடம் அன்வர் கையளித்தார்.

மேலும் ஆளுனர் எதிர்வரும் ஒருசில தினங்களில் முப்படைகளின் தளபதி கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் மூன்று மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரும் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை தான் அனுப்பி வைப்பதாகவும் கிழக்கிலுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாக தான் கூடிய கவனம் செலுத்தி தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளுனர் வாக்குறுதி அளித்தார்.

தான் இன, மத, மொழி பேதத்திற்கு அப்பால் அணைத்து இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க தாம் உறுதி பூண்டுள்ளதாக ஆளுனர் கூறியதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்கள் DTSCஇனால் கௌரவிக்கப்பட்டார்

Posted in
கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களுக்கான விஷேட கௌரவிப்பு நிகழ்வும் இராசப் போசன விருந்துபசாரமும் நேற்று முன்தினம் 15.01.2019ம் இரவு டோன்ட் டச் விளையாட்டுக் கழகத்தினால் சகோதரர் தாஹிர் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் கழகத்தின் அழைப்பை ஏற்று ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் அவர்களும், சட்டத்தரணி எம்.எம்.எம். ராசீக் அவர்களும், வைத்தியர் ஏ.ஏ. அல்தாப் அவர்களும், ஹக்கீம் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது அமைச்சர் அமீர் அலி அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு இடம்பெற்றதோடு அவரது எதிர்கால சேவைக்கும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு முற்றுப் பெற்றது. 

Info & Pics: DTSC-Kalkudah