0
மார்க்கத்தை கொச்சைப்படுத்தி வைத்தியத்துறையை கேவலப்படுத்தும் நுஸ்ரான் பின்னூரியின் வாழைச்சேனைக்கான வருகையைப் புறக்கணிப்போம்
Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
தூய்மையான இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சித்து பல கருத்துக்களை அண்மைக்காலமாகத் தெரிவித்து வருவதுடன், நவீன வைத்தியத்துறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் “சத்திர சிகிச்சை ஹராம், தடுப்பூசி யூத சதி” எனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப்பரப்பி வரும் நுஸ்ரான் பின்னூரி வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலில் நாளை 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதற்காக வருகை தரவுள்ளதாகவும், மீராவோடை போன்ற பிரதேசங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் வைத்தியத்துறையையும் கொச்சப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் இப்பிரதேச மக்களையும் பிழையான வழிகளுக்கு திசை திருப்ப வாய்ப்புள்ளது.
இவரின் பொய்யான வைத்தியத்தை நம்பி ஏமாந்த பலர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதுடன், இவரால் வெறும் ஆறே நாட்களில் உருவாக்கப்பட்ட போலி வைத்தியர்களும் நாட்டின் பல பகுதிகளிலும் அப்பாவி மக்களை எமாற்றி பிழைப்பு நடாத்தும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் எமது பிரதேச மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதைத் தடுக்கும் நோக்கில் இவரது வருகை தடை செய்வதுடன், இதன் ஏற்பாட்டாளர்கள் சமூக ரீதியாக இவர் மீதுள்ள விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கவனத்திற்கொண்டு குறித்த நிகழ்வுகளை இரத்துச் செய்து சமூக நன்மைக்கு வழிவகுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
இது விடயத்தில் கல்குடா உலமா சபை மற்றும் சமூக அமைப்புக்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவர் வைத்தியத்துறை தொடர்பில் பிழையான தகவல்களைப் பகிர்ந்து வருவதுடன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்களை நாட வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தையும் முன் வைத்து சமூகத்தை பிழையாக வழி நடாத்த முயலும் ஒருவர் என்பதுடன், தன் வாழ்வில் இவைகளை எடுத்து நடக்க முடியாமல் தனது மனைவியின் பிரவசத்திற்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தமையும் வெளிச்சத்திற்கு வந்து மூக்குடைந்து போனமையும் குறிப்பிடத்தக்கது. கல்வி ரீதியான இவரின் கருத்துக்களும் கண்டனத்துக்குள்ளானது. தன் கருத்துக்களை தன் வாழ்வில் எடுத்து நடக்க முடியாத ஒருவர் சமூகத்தை பிழையான வழியில் நடாத்த நாம் எவரும் அனுமதிக்க முடியாது. இந்த வகையில் இவ்வாறான போலி மார்க்கவாதிகளை நாம் புறக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே, கல்குடா உலமா சபையினரே, சமூக மட்ட அமைப்புக்களே, பள்ளிவாயல் நிருவாக சபையினரே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே சிந்தித்துச் செயற்படுங்கள்.