0
மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் சந்திப்பு
Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-
மீராவோடை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினருக்கும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு 2019.01.30ஆம் திகதி (நேற்று) மட்டக்களப்பில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் மீராவோடை வைத்தியசாலையில் நிலவும் ஆளணிகள் பற்றாக்குறை தொடர்பாகவும், இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் படும் சிரமங்கள் தொடர்பாகவும் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கடந்த கால சந்திப்புக்களின்போது ஏற்கனவே அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட ஆளணி கோரிக்கைகளில் ஒருசில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுத்தந்தமைக்காக அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நன்றி பாராட்டப்பட்டார்.
அதில், தாதி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் அன்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு உருதுணையாக இருந்தார்.
மேலும், இங்கு நாளாந்தம் சுமார் 300 பேர் வெளிநோயாளர் பிரிவிலும், கிட்டத்தட்ட 1400 பேர் கிளினிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் இவ்வாறான நிலையில் தற்போது இவ்வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வைத்தியசாலையினை நாடிவரும் மக்களுக்கு இன்னும் தனது சிறப்பான சுகாதார சேவையினை வழங்குவதற்காக இங்கு காணப்படும் வைத்தியர்களின் வெற்றிட ஆளணிக்கேற்ப இரு வைத்தியர்கள் தேவைப்பாடாக உள்ளதாகவும், அத்துடன் சிற்றூழியர்கள் தேவைப்பாடுகள் பற்றியும் இன்றைய சந்திப்பில் மிக பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இம்முறை வழங்கப்படவுள்ள வைத்தியர்களுக்கான நியமன வெற்றிடத்தில் மீராவோடை வைத்தியசாலைக்கு இன்னுமொரு வைத்தியரை நியமிப்பதற்கான வெற்றிடம் காட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எவரேனும் தங்களின் பிரதேசங்களிலிருந்தோ அல்லது வேறு பிரதேசங்களிலிருந்தோ வைத்தியர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இன்னுமொரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைக்கேற்ப சிற்றூழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவ்வைத்தியசாலையின்மீது இன்னுமொரு கரிசனையாளராக செயற்பட்டுவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நேரத்தினையும் பெற்றுத்தந்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ததுடன், இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துகொண்டு இவ்வைத்தியசாலை இரு சமூகங்களும் நன்மையடையும் ஒரு வைத்தியசாலையாக அப்பிரதேசத்தில் காணப்படுவதுடன், அதற்கான ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளின் அவசியத் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எடுத்துரைத்தார்.
அது மாத்திரமல்லாமல், இவ்வைத்தியசாலையில் இன்னுமொரு வைத்தியரை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியருக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பான ஆளணி வெற்றிடம் காண்பிக்கப்படுவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளையும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்னெடுத்திருந்தார்.