Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராகவும் அவர்களது ஆடைக்கலாசாரத்துக்கெதிராகவும் விஷமத்தனமான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், மீண்டுமொரு இனவாதி யாழிலிருந்து அபாயாவுக்கெதிராக வெளிக்கிழம்பியுள்ளமை கவலையளிக்கின்றது. திருகோணமலை ஷண்முகா இந்துக்கால்லூரி ஹபாயா விவகாரம் தீர்வின்றித்தொடரும் நிலையில், தமது ஆடை கலாசாரத்தைப் பேணவும் நாட்டின் சட்டம் தமக்கு வழங்கியுள்ள உரிமையைப்பேணி நடக்கவும் முஸ்லிம் ஆசிரியைகள் போராடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு செயற்பாடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளமை கிழக்கில் முஸ்லிம்கள் தமது மத, கலாசார உரிமையைப்பேணி நடப்பதில் கேள்வி நிலை தோன்றியுள்ளமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு கிழக்கின் நிலை என்றால், வடக்கிலும் இதன் பின்னணியின் பிரச்சினையை உண்டு பண்ணி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துகளை விதைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளமை அபாயகரமான ஒரு சூழலாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் யாழ்.இந்துக்கல்லூரில் இடம்பெற்ற கால்கோள் விழா நிகழ்வுக்குச்சென்று வந்த முஸ்லிம் சகோதரி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துக்களைப் பதிவிட்டுள்ளமை வடக்கிலும் வளர்ந்து வரும் தமிழ்-முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதாகவே தோன்றுகிறது. குறித்த நபர் இட்டுள்ள அப்பதிவில், ஹாபாயாவை இலக்கு வைத்து சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிவிட்டுள்ளதுடன், இன உறவுக்கு வேட்டு வைத்து, வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொள்ள எத்தனிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு சுமூக நிலை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்துக்கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களும் கல்வி பயிலலாம். ஆசிரிய, ஆசிரியைகள் தங்களது ஆடைக்கலாசாரத்தைப் பேணி கற்பித்தலில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளதுடன், இன நல்லுறவு வலுப்பெற்று வரும் சூழலைத்தாங்கிக் கொள்ள முடியாத இவ்வாறான விசமிகள் இனக்குரோதங்களை உண்டு பண்ணி எப்போது இனங்களைப் பிரித்தாளும் தந்திரங்களையே மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம், முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கும் எந்த இந்து மாணவர்களுக்கோ, கற்பிக்கும் எந்தவொரு ஆசிரிய, ஆசிரியைகளுக்கு எதிராகவோ இவ்வாறான எந்தச்செயற்பாடும் இடம்பெறவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது கடந்த காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இனவாதம் வெற்றியளிக்காத நிலையில், இப்போது இஸ்லாமியர்களின் கலாசார, வணக்க வழிபாடுகளில் கை வைக்கும் கைங்கரியத்தை கன கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு துருப்புச்சீட்டாக இவரைப்போன்ற சிலர் பயன்படுத்தப்படுகிறார்கள். சில அற்ப சொற்ப இலாபங்களை இலக்காகக்கொண்டு செயற்படும் குழுவினர் இதன் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர் என்பதை அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.
இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் தத்தமது மத, ஆடை கலாசாரங்களைப் பேணி நடக்க நாட்டின் சட்டம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவ் வாறானவர்களின் செயற்பாடுகளினால் அந்த உரிமை கொச்சைப்படுத்தப்படுவதற்கு சட்டமும் நீதியும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறான விசக்கிருமிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். குறித்த நபர் இட்டுள்ள பதிவின் கீழ் நல்லுறவை விரும்பும் இந்து சகோதரர்கள் நியாயமான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
குறிப்பாக, பாடசாலை செல்லும் மாணவர்கள் சீருடை அணிய வேண்டியது அவசியம். அதே நேரம், மாணவனின் தாயும் பாடசாலை சீருடை அணிந்து தானா பாடசாலைக்கு வர வேண்டும்? எனத்தொடுத்துள்ள கேள்வி சிந்திக்க வேண்டியதே. இன நல்லுறவை விரும்பும் அவ்வாறானவர்களின் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறான இனவாத சதிகளுக்குள் ஏனைய இந்து சகோதரர்களும் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ந்து கொள்வதோடு, இன நல்லுறவை வளர்க்க முன்வர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டாலும் நிருவாக, மத, கலாசார ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.