Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி -
நாட்டில் ஒரு பக்கம் அரசியல் அரசியலைப்பு மாற்றம் தொடர்பான தீவிர முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன? என்ற ஒரு அங்கலாய்ப்பு ஒரு பக்கம். ஒன்றுபட்ட ஒரே தேசத்தில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க தமிழ் தரப்பினர் ஒன்றுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம்களைத்திசை திருப்பும் செயற்பாடுகள் இனவாதம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழாமலில்லை. இதன் தொடரில் கிழக்கில் இடம்பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள், அதன் பின்னணிகள் ஆபத்தான கட்டங்களை நோக்கி முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்வதாக அமைகிறது. கிழக்கில் நியமிக்கப்பட்ட தமிழ் பேசும் ஆளுநருக்கெதிராக இனவாதம் சாயம் பூசி தீவிரத அமைப்புகளும் கடந்த காலத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்வோரும் தமது தொடர் இனவாதக்கருத்துக்களை அள்ளி வீசி வரும் அதே வேளை, கடந்த காலங்களில் இனவாதம் பேசிய மக்கள் பிரதிநிதிகளின் முஸ்லிம்கள் மீதான அக்கறையும் ஆரோக்கியமானதல்லை.
முஸ்லிம்களுக்கெதிரான மறைமுக சதியொன்று பின்னப்படுகிறதா? அதன் பின்னணியில் இவ்வாறான இனவாத அமைப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனவா? என்ற அச்சமும் இல்லாமலுமில்லை. இவைகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் உறக்க நிலை சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னாலுள்ள மர்மங்கள் என்ன? இந்த இனவாதப் பின்னணியில் ஆளுனருக்கெதிராக கடந்த 11.01.2019ம் திகதி முடிக்கி விடப்பட்ட ஹர்த்தால் தமிழர் தரப்பினராலே புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் தமது தோல்விகளை மறைக்க மீண்டும் எதிர்வரும் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய முடக்கப் போராட்டத்திற்கு இனவாத அழைப்பு ஒன்றால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தலைமையில் இயங்கும் இவ்வினவாத அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதே முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலே என்பது மறுப்பதற்கில்லை. இதன் உரிமையாளர் நாடத்துகின்ற சினிமா திரையரங்கு மூலம் கிடக்கின்ற வருமானத்தில் இயங்கும் குறித்த அமைப்பு மிக மோசமாக முஸ்லிம் எதிர்ப்பை ஆரம்பம் முதல் இன்று முன்னெடுத்து வருகின்றது.
இத்திரையரங்கு இங்கே திரையிடப்படும் தமிழக சினிமா படங்களை காண வரும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் மேலதிக வருமானத்தில் இயங்கி வருவதும் மறுப்பதற்கில்லை. என்ன தான் நாம் இந்த இனவாதியான துறையரங்கு உரிமையாளரால் நசுக்கப்பட்டாலும், நமக்கெதிரான இனவாதப் பிரசாரத்திற்கு நாமே மறைமுகமாக உதவி வருகின்றோம் என்பது கசப்பான உண்மையாகும். எம்மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டே இதன் உரிமையாளர் முஸ்லிம் எதிர்ப்பை தனது அமைப்பு மூலம் மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் உணராமலில்லை. எமக்கெதிராக இனவாதத்தீ மூட்ட நாமே விறகு கொடுக்கிறோம். எம்மவர்கள் அங்கு செல்லாவிட்டால் வருமான இழைப்பை சந்திக்க நிறையவே வாய்ப்புள்ளது. ஆளுனரைத் தான் எதிர்க்கின்றோம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளால் அமைதியை விரும்பும் இரு இனங்களும் பாதிக்கப்படும் நிலையும் இனநல்லுறவு வளர்க்கப்பட்டு வரும் சூழலில் இன முறுகலைத் தோற்றுவித்து இலாபமடைந்து கொள்ள எத்தனிக்கும் செயற்பாடாக இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது, இவ்வாறான தொடர் ஹர்த்தாலுக்குப் பின்னால் பாரிய சதிகள் பின்னப்பட்டு வருகிறதா? என்ற அச்சமுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்பி வரலாற்றுத் துரோகமொன்று இடம்பெற்று விடுமோ என்ற சந்தேகம் எழாமளுமில்லை.
இவ்வாறான குழப்பங்களை உண்டு பண்ணி தீர்வு யோசனைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை திசை திருப்பும் முயற்சியாக இதனை எண்ணத்தோன்றுகிறது. இந்த அத்தனை இனவாத முன்னெடுப்புக்களின் பின்னாலும் யார் உள்ளார்கள் என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, எந்தவொரு இனமாக இருந்தாலும் ஒரு இனத்திற்கெதிரான இனவாதத்திற்கு மற்றொரு இனம் துணை போய் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் இழைத்து விடக்கூடாதென்பதே எமது வேண்டுகோள். அதே நேரம் மாவட்டம் தழுவிய முடக்கத்தினால் இரு சமூகங்களுமே பொருளாதார இழைப்பைச் சந்திக்கப் போகின்றது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் வர்த்தகர்கள் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் வர்த்தங்க நிலையங்களை மூடுவதால் முழுவதுமாக பாதிக்கப்பட போவது தமிழ் சகோதரர்களே என்பது நிதர்சனமான உண்மை. இந்த இழப்பை இந்த முடக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த எந்தவொரு நபராலும் ஈடு செய்து கொடுக்க முடியுமா என்றால், அது நடக்க வாய்ப்பே இல்லை. அன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதால் உங்கள் பொருளாதரத்தை இழக்கப்படுதைத்தவிர வேறு எதையும் இதன் ஏற்பாட்டாளர்கள் சாதித்து விடப்போவதில்லை என்பதை உணர்ந்து முடக்கப்போராட்டத்தை முறியடிக்க தமிழ் சகோதரர்கள் முன் வர வேண்டும்.