வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது உயிரினும் மேலாக மதிக்கப்படுகின்ற நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டிருக்கின்ற அல்லது புனைந்துரைக்கப்பட்ட அந்தத் திரைப்படம் தொடர்பாக இந்த நாட்டில் வசிக்கின்ற 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சார்பாக இந்த சபையில் முதலில் நான் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதனால் முஸ்லிம்கள் இன்று கவலையடைந்திருக்கின்றார்கள். அதனோடு தொடர்புபட்டவர்களுக்கெதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தச் சபையினூடாக கேட்டுக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சகோதரர் நஜீப் ஏ. மஜீத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவருக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென நான் நினைக்கின்றேன். அந்த வகையில் இலங்கையில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக உறுதிப் பிரமாணம் செய்த நஜீப் ஏ. மஜீத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, எமது கட்சி சார்பாகவும் நான் அவருக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது. உண்மையில் எமது அரசாங்கத்தைப்பொறுத்தமட்டில் நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்களல்லர், தேர்தலுக்கு முகங்கொடுப்பதில் நாங்கள் பின்வாங்கக்கூடியவர்களுமல்லர். இன்று எனக்கு முன்பு உரையாற்றிய உறுப்பினர் அவர்கள், அவசரஅவசரமாக மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறினார். அவ்வாறு தேர்தலை நடத்திய எமது அரசாங்கத்துக்கு வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதமல்ல, அதற்கு முன்னர் நடத்துவதற்கும் முடியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால், அங்குள்ள சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மருதையன்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் கூறவில்லை. தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை அங்கு இல்லாததன் காரணமாக குறிப்பிட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்தக்கோரி அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வடக்கில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையில் எவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது?
வடக்கின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முற்று முழுதாக மீள்குடியேற்றம் நடந்து முடியவில்லை. அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் இதே நிலைதான் காணப்படுகின்றது. சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றமும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
Sir, “Sunday Observer” of 5th August, 2012 states, I quote:
“About 82 percent of them are living as refugees in Puttalam…”
புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் வடமாகாணத்தில் மீள்குடியேறுவதற்காகப் பதிவுசெய்திருந்தாலுங்கூட இன்னமும் உடல் ரீதியாக மீள்குடியேற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அங்கு குடியேறவிருக்கும் மக்களுக்கு காணிப்பிரச்சினை உள்ளது. உதாரணமாக எனது குடும்பத்தை எடுத்துக்கொண்டால், 1990ஆம் ஆண்டில் நாங்கள் எமது தந்தையுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வெளியேற்றப்பட்டோம். ஆனால் இன்று எமது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் விவாகம் செய்து 7 குடும்பங்களாக இருக்கின்றோம். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தையும் எடுத்துக்கொண்டால், அவ்வக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வளர்ந்து இன்று 4, 5, 7, 8 குடும்பங்களாகப் பெருகியிருக்கின்றார்கள். ஆகவே, அத்தனை குடும்பங்களும் வாழ்வதற்குரிய காணி, வீடு போன்ற வசதிகள் இன்று வரையில் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு எந்தத் தரப்பினராலோ செய்து கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இச்சபையிலே ஐக்கிய தேசியக் கட்சியினர் இந்த விடயங்களைப்பற்றிப் பேசாமல் வடமாகாணத்திலே தேர்தலை நடத்துவதைப்பற்றி மட்டும் பேசுகின்றார்கள். இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஓர் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்ததைப்போன்று, அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைக் கெளரவமாக மீள்குடியமர்த்துவதற்கு அல்லது அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்று ஒரு பிரேரணையைக் கொண்டு வந்திருந்தால் அது உண்மையிலே நாம் சந்தோஷப்படக்கூடிய, வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும்.
ஆனால், வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் அனேகமானோர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையிலுள்ளார்கள். “Sunday Observer” பத்திரிகையிலே 82 percent of them has still not been resettled physically எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இடம் பெயர்ந்த தமிழ் சகோதரர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
ஆகவே, இத்தகைய நிலையில் அங்கு தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு ஒப்பாக நீதிமன்றமே “வடமாகாணத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் மருதையன்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது” எனத் தீர்ப்பளித்திருக்கின்றது. ஆகவே,எந்தவகையிலும் 2013 February மாதம் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதுசாத்தியமற்றதாகும் என்பதே எனது கருத்தாகும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான உதவிகளைச் செய்யும்படி சர்வதேசத்துக்கும் உதவி வழங்கும் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுக்கவேண்டுமென நான் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் விடயத்திலே எமது நாட்டுக்கு வருகின்ற சர்வதேச நிறுவனங்கள் மிகுந்த பாரபட்சம் காட்டுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதனால், சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் விடயத்தில் ஆளுங்கட்சியை விட ஐக்கிய தேசியக் கட்சிக்கே பாரிய பங்கு இருக்கின்றது. எனவே, அக்கட்சியினர் முஸ்லிம் மக்களின் கெளரவமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் எனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் வேண்டுகின்றேன்.
அதேவேளை, வடமாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு காணிப்பிரச்சினை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. அங்குள்ள வன இலாகாத் திணைக்களத்தினர் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு மிகுந்த குறுக்கீடாக இருக்கின்றார்கள். எனவே, ஒரு விசேட வேலைத்திட்டத்தின்கீழ் அம் மக்களுக்குக் காணிகளை வழங்குவதிலும் மீள்குடியேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கி, அதனைச் சரிவரச் செய்துவிட்டு வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டு, நான் விடைபெற்றுக்கொள்கின்றேன். நன்றி.