Posted in
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதோடு அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உறுதிப்படுத்தினார்.
கிழக்கின் முதலமைச்சராக தமது கட்சிகள் சார்பில் அமீர் அலி நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருந்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பலத்த எதிர்ப்பு காரணமாக நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை அமீர் அலிக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி கூட ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் றிசாத் ஜனாதிபதி மஹிந்தவுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தையில் அமீர் அலியை தேசிய பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமித்து பிரதி அமைச்சர் பதவி ஒன்றை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இதன் நிமித்தம் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை அமீர் அலி ராஜினாமா செய்வார் என்றும் வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிட்டார்.