Posted in
இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.
கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.
Courtesy: தூதுஒன்லைன்