Posted in
பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களை உலகலாவிய முஸ்லீம் உம்மத் தனது உயிலும் மேலாக நேசிக்கிறது என்பதையும் அவர்கள் பெயரால் வம்பர்கள் செய்யும் எந்தவொரு ஈனச் செயலையும் அது பொறுத்துக் கொள்ளாது என்பதையும் நாம் உலகத்திற்கு உணர்த்தியாக வேண்டியிருக்கிறது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை அவமதிக்கின்ற வகையில் சித்தரித்து அமெரிக்காவில் வெளியான படத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையிலயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
மேற்குலகு தனது சுயநலத்துக்காக நடத்தும் கேவலமான செயற்பாடுகளை மறைப்பதற்கும் முஸ்லீம் உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் அவ்வப்போது இவ்வாறான அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஒட்டு மொத்த முஸ்லீம்களின் கவனத்தையும் ஒரு பக்கம் திருப்பி விட்டு எங்காவது ஒரு முஸ்லீம் தேசத்துக்குள் மூக்கை நுழைப்பதற்கும் அத்துமீறுவதற்கும் அடாவடி நிகழ்த்துவதற்கும் முயற்சித்து வருகின்றது.அல்லது அவ்வாறு செய்தவற்றை மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்ய இவ்வாறான செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் எதைச் செய்த போதும் அவற்றில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேற்குலகம் யூத ‘லொபி’யும் தமது செல்வாக்கை உலகில் இழந்து வருகின்றன ஏன் என்ற வினாக்களோடு சொந்த நாடுகளிலிருந்தே மக்கள் தெருவுக்கு வந்து கேள்வி கேட்கத் துணிந்து விட்டனர்.இந்தத் தோல்விகளைத் திசை திருப்பவும் உலகளவில் முஸ்லீம்களின் மீது அவதூறும் அவமானமும் ஏற்படுத்தி அதன் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்த முனைகின்றனர்.
அல்லாஹ்வின் உதவியால் அவ்வாறான அவர்களது செயற்பாடுகள் வெற்றி பெறாது என்பதை முஸ்லீம் உலகு தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதன் மூலம் உணர்த்தி வருகின்றது. நபிகளார் மீதோ இஸ்லாத்தின் மீதோ அவதூறு மேற்கொள்ளும் எல்லா வேளைகளிலும் நாமும் நமது எதிர்ப்பைஎல்லா வழிகளிலும் வெளிக்காட்டுவது நமது கடமையாகும்.
இந்தப் பிரமாண்ட எதிர்பலையில் பங்கு கொள்ளும் அனைவர் மீதும் அல்லாஹ் தனது அருளைச் சொரியட்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.