0
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியது-சந்திரகாந்தன்
Posted in
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் ,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் ஐ நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்.
இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் .
அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான் பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. அது மட்டுமல்ல அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்க்திலும் சில சங்கடங்கள் இருந்தன. இதன் காரணமாகவேதான் அமைச்சர் பதவி வகிக்க விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.
அமைச்சர்கள் வாரியத்தில் இம்முறை தான் இடம் பெறாத காரணத்தினால் தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.
மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம் தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.