0
இனவாதி அரவிந்தனுக்கெதிராக வாழைச்சேனைப்பொலிஸில் முறைப்பாடு : சமூக நன்மைகருதி செம்மண்ணோடை இளைஞனின் முன்மாதிரி
Posted in
எம்.ஐ,லெப்பைத்தம்பி
தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் வகையிலும் முஸ்லிம்களையும் இஸ்லாம் மார்க்கத்தையும் கேவலமான முறையில் இனவாதக்குரோதத்துடன் பேசி வரும் இல.71/1 3ம் கட்டை, மன்னார் வீதி, நெளுக்குளம், வவுனியா என்ற முகவரியைச்சேர்ந்த பொன்னுத்துரை அரவிந்தனுக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி செம்மண்ணோடை தக்வா பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த முஹம்மது சலீம் என்பவரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று 15.01.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனவாதம் பேசும் குறித்த நபருக்கெதிராக சமூகத்தின் நன்மைகருதி தைரியமாக முறைப்பாட்டை மேற்கொண்ட முஹம்மது சலீமுக்கு வாழ்த்துக்கள். கடந்த வாரங்களில் ஒரு சிலரால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பொன்னுத்துரை அரவிந்தன் சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வீடியோக்காணொளி மூலம் விஷமத்தனமான கருத்துக்களைப்பதிவு செய்து வருவதுடன், முஸ்லிம்களில் யாராவது என் மீது சட்டநடவடிக்கையெடுக்க முடியுமா? என்ற தோரணையில் சவால் விட்டும் வருகிறார். இனவாதம் பேசி வரும் இவரை உடனடியாகக்கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக்கோரியே சட்டத்தரணி ஷாரூக் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முஹம்மது சலீம் கருத்துத்தெரிவிக்கையில், கடந்த காலங்களிலும் இனவாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட இன்பராசா போன்ற இனவாதிகளுக்கெதிராக என்னால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு பொலிஸார் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுடன், இதனையும் அவ்வாறு அலட்சியம் செய்யாது கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். மேற்படி என்னால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு உடனடியாக அறிவித்து, அவரைக் கைது செய்து இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக வாழைச்சேனைப் பொலிஸார் வாக்குறுதியளித்துள்ளனர். நாம் நாட்டின் சட்டத்தையும், பொலிசாரையும் மதிக்கிறோம். அவர்கள் இவ்வாறான இனவாதிகளுக்கெதிராக சரியான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அத்துடன், தனிப்பட்ட ஒரு அரவிந்தன் மேற்கொண்டு வரும் இனவாத நடவடிக்கைக்கெதிராக நாமும் முழு இந்து மத சகோதரர்களையும் அவர்களது மதத்தையும் அநாகரிகமான முறையில் விமர்சிப்பதை கைவிட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளைச்செய்ய சகல சமூக மட்ட அமைப்புக்களும் குறிப்பாக இளைஞர்களும் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதன் பிரதிகள் பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, மட்டு.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.