Follow me on Twitter RSS FEED

வாழைச்சேனை வைத்தியசாலை விவகாரம் : கவனத்திற்கொள்ளப்படுமா?

Posted in
- எம்.ஐ.லெப்பைத்தம்பி -

பிரதேசத்தின் பிரதான வைத்தியசாலையான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகள், தேவைகள், வைத்தியர் பற்றாக்குறை, மருந்துத்தட்டுப்பாடு, போதிய ஏனைய ஆளணி இல்லாமை, இடநெருக்கடி போன்ற பல்வேறு குறைபாடுகளுடன், பல தேவைகளை வேண்டி நிற்பதுடன், இது தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனமெடுத்து செயற்பட வேண்டு,மென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வைத்தியசாலை குறித்தும் அதன் தேவைப்பாடுகள் குறித்தும் இங்கு கடமை புரியும் வைத்தியர்களால் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் கவனத்திற்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுள்ளதுடன், முக்கிய பிரிவுகளை மூட வேண்டிய நிலையும் இங்கு கடமை புரியும் வைத்தியர்கள் நேரகாலமின்றி கடமை புரிய வேண்டிய அசெளகரிய நிலையும் காணப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் வைத்தியசாலை இழுத்து மூடப்படும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுமார் நாற்பது வைத்தியர்கள் கடமை புரிய வேண்டிய நிலையில், 17 வைத்தியர்களே கடமையில் உள்ளனர். இதன் காரணமாக, வெளிநோயாளர் பிரிவை குறிப்பிட்ட சில தினங்கள் மாத்திரம் திறக்கும் நிலையும், அதனால் வைத்தியசாலையை நாடி வரும் நோயாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. சுமார் பாரியதொரு பரப்பில் வாழும் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டிய நிலையில், தமது இயலாமை காரணமாக சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகளை மற்றும் நிலையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகின்றன. 

ஆகவே, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். அத்தோடு, இவ்வைத்தியசாலை தொடர்பில் இப்பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் சுகாதார இராஜாங்க அமைச்சருக்கும் பாரிய பொறுப்புள்ளதால், அதற்கான அழுத்தங்களை முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் அரசியல்வாதிகள் வழங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, வைத்தியசாலை அபிவிருத்திக குழுபினர்களின் பங்களிப்பும் அவசியமாகின்றது சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸீம் அவர்களை அழைத்து வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க சகல தரப்பினரும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, கல்குடாவை மையப்படுத்தியுள்ள தமிழ், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. 

மாறாக, அதையும் தாண்டி புறக்கணிப்பும் உதாசீனமும் தொடருமாக இருந்தால், மக்கள் போராட்டங்களையாவது முன்னெடுத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது இப்பிரதேச மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். இவ்வைத்தியசாலையின் குறைப்பாடுகள் நீக்கப்பட்டு, கிராமமாக இயங்காத விடத்து சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மட்டக்களப்பு அல்லது அதனையும் தாண்டி பொலன்னறுவை வைத்தியசாலையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகுமென்பதை கவனத்திற்கொள்வதுடன், அதானால் பெறுமதியான உயிர்களை இழக்கும் நிலையும், பொருளாதார, கால நேர விரயங்களும் இன்னோரன்ன அசாதாரண நிலைகளும் உருவாகுமென்பதை கவனத்திற் கொள்வோமாக.

0 comments: