Posted in
எம்.ரீ. ஹைதர் அலி
கூட்டமைப்பின் மௌனம் யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மௌனம் சாதித்ததை நினைவு கூறுகின்றது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.
இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் முன்னெடுக்கும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பது கடந்த யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மௌனம் சாதித்ததை நினைவு கூறுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு ஆளுனர் விவகாரத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியான கருத்துக்களை வெளியிடும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயா மௌனம் காப்பது அவருடைய அரசியல் முதிர்ச்சிக்கும் அவருடை எதார்தம் அறிந்த அனுபவத்திற்கும் உவப்பானதல்ல என்பது என்னுடைய அவதானமாகும்.
எது எப்படி ஆயினும் ஆளுனர் பதவி என்பது ஜனாதிபதி தனக்கு விஸ்வாசம் எனக்கருதும் ஒருவருக்கு தனக்குள்ள அரசியலமைப்பினூடான அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்கின்ற ஓர் நிர்வாக பதவி என்பதை சட்ட வல்லுனரான சம்பந்தன் அய்யாவுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
கடந்த காலங்களில் இராணுவ உயர் அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நாட்டின் பொதுச் சொத்துக்களை அமைச்சரவையில் இருந்துகொண்டு துஷ்பிரயோகம் செய்த பெரும்பாண்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களை ஆளுனர்களாக நியமித்தது மாத்திரமல்லாது நியாயமாக கிழக்கில் பெரும்பாண்மையாக வாழும் சிறுபாண்மையினருக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவைகள் தடுக்கப்பட்டது என்ற பட்டியலை நான் மீழ் பதிவு செய்ய வேண்டியதில்லை.
இருப்பினும் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை, மேய்ச்சல்தரை சம்பந்தமான பிரச்சினை, பெரும் பாண்மை சமூக்கத்தினர் அத்துமீறி மாகாண எல்லையைத்தாண்டி காடழிப்பு செய்து குடியேற முற்பட்டபோது அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்காமலும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக காணிகளுக்குள் குடியேற முற்பட்டபோது அதனை வனப்பாதுகாப்பு என்ற பெயரில் முற்றாக தடுத்த விடயங்களையும், திட்டமிட்ட அடிப்படையில் பெரும்பாண்மையினரை மாகாண இனவிகிதாசாரத்தில் அதிகரித்துக் கொள்வதற்காக ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி செய்த குடியேற்றங்களையும், திறமைக்கு இடமில்லை விகிதாசார சமப்படுத்தல் என்ற பெயரில் எமது இரண்டு சமூகத்து இளஞர், யுவதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை பிற மாகாண பெரும்பாண்மை இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்ததையும் என்று இங்கு குறிப்பிடப்படாத எத்தனையோ விடயங்களை சுட்டிக்காட்ட முடியும்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த கால அனுபவத்தினூடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான நம்பிக்கையினை இழந்த நிலையில்தான் புதிய அரசியல் அமைப்பைபற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் அமைப்புக்கு ராஜபக்சைக்களும் பேரினவாதிகளும் எதிர்த்து விசமப்பிரச்சாரம் செய்துவரும் இச்சூழலில் முஸ்லிம்களின் ஆதரவினை இராஜதந்திர முறையிலும் பல விட்டுக் கொடுப்புக்களையும் முஸ்லிம்களின் சார்பில் செய்வதனூடாக முஸ்லிம்களை இணைத்துக்கொண்டு ஓர் தீர்வினை இரண்டு சமூகங்களும் பயன்பெறக்கூடிய வகையில் காய் நகர்த்த வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கெதிராக இனவாதக் கருத்துக்களை தமது கட்சி சார்ந்தவர்களும் தமது ஆதரவாளர்களும் வெளிப்படுத்தும்போது மௌனம் காப்பது பெரும் வியப்பாக உள்ளது.
பிரபாகரனின் போராட்டம் அது நியாயமானது என்று கண்ட எத்தனையோ 1000 முஸ்லிம்களில் 800 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர் யுவதிகள் அவர் அனியில் நின்று போராடி உயிர் நீர்த்திருக்கிறார்கள். பிரபாகரனின் துப்பாக்கி என்று முஸ்லிம்களை நோக்கிய பக்கம் திரும்பியதோ அன்றுடன் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரியனார்கள் போராட்டத்தில் நேரடியாக கலந்தகொண்ட காலத்தில் இழக்காத பெறுமதியைவிட அதிகமான உயிர்களையும் உடைமைகளையும் முஸ்லிம்கள் இழந்து இறுதியில் ஈழப்போர் தோற்றுப்போனது.
இன்று சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்போதே பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகிறார்கள் என்ற ஓர் நிலைமை கடந்த அரசியல் நெருக்கடி காலத்தில் தோண்றியிருந்தது. சம்பந்தன் அவர்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைப் பதவிக்குள்ளும், இப்போதிருக்கின்ற அரசியல் சூழலுக்குள்ளும் ஓர் தீர்வு வரவில்லை என்றால் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் பேசும் சிறுபாண்மையினருக்கான ஓர் எட்டாக்கனியாகிவிடும்.
ஆக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று அரசியல் இலாபத்திற்காக இன நல்லுறவை சீர் குலைத்து இனவாதத்தினூடாக பாராளுமன்றம் செல்ல ஆசைப்பட்டவர் அல்ல என்பதை கடந்த கால செயற்பாடுகள் சான்று பகிர்கின்றது. ஆகவே மிதவாதப்போக்குடனும், விட்டுக் கொடுப்புடனும், தம்மை சார்ந்திருக்கின்றன சமூகத்திற்கு எதார்தத்தை தெளிவுபடுத்தி அடைய வேண்டிய இலக்கை அடைய முயற்சிக்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காலத்தின் தேவையாகும் என தனது அறிக்கையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சுட்டிக்காட்டியுள்ளார்.