Follow me on Twitter RSS FEED

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயார்: சம்பந்தன்

Posted in

‘ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்’ என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…
‘மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண்டு அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க முடியாது. மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாகாண ஆட்சியை அமைக்க அழைத்தால் அதனை நாம் சட்டரீதியாக தடுப்போம்.
கிழக்கு மாகாண தேர்தலை நடத்திய முறை மூலம் எமக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை அரசாங்கம் சூறையாடியுள்ளது. இந்த தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்த கட்சிகள் மூன்றும் வெற்றிபெற்றுள்ளது. மூன்று கட்சிகளினதும் மொத்த ஆசன எண்ணிக்கை 22. ஆனால் அரசாங்கம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய இன்னுமொரு கட்சி ஆகிய இரண்டினதும் ஆசன எண்ணிக்கை 15. எனவே ஐ.ம.சு.மு. மாகாண ஆட்சியை அமைப்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை.
‘இன்று காலை கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எமது கட்சிப் பொதுச் செயலாளர் – மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன 22 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளன. எனவே கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மைப் பலம் எமக்கு உள்ளது. ஆகவே அத்தகைய ஆட்சியமைப்பதற்கும் அதற்கேதுவாக மாகாண முதலமைச்சரை நியமிக்கவும் எமக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவும் என்று நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.

0 comments: