Follow me on Twitter RSS FEED

கிழக்கின் சிறுபான்மை ஆட்சி ! நனவாகிய கனவு நீடிக்குமா ? முதலமைச்சரும் ஆள்பவரும் யார் என்பதில் இழுபறி !

Posted in

ன்னதான் கூறினாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளுர ஒரு பெருமைதான். தாங்கள்தான் ஆட்சியமைப்பதில் ஜாம்பவான்கள் என்பதில்தான் இத்தனை பெருமை. ஆனால் பாவப்பட்டவர்களாக வாக்களித்த மக்கள் வாயைப்பிளந்து கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று ஆளையாள் மாறி மாறிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் தான் ஜாம்பவான்கள் என்று கூறியவர்கள் இன்னமும் அந்த மாகாணசபையின் ஆட்சி பற்றி உறுதியான தீர்மானமான முடிவு எதனையும் எடுக்க முடியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு நிலைமைக்கு அவர்கள் சமூகத்தைப்பற்றி ஆளமாகச் சிந்திப்பதுதான் காரணம் என்று எமது வாசகர்கள் அவசரப்பட்டு முடிவெடுத்து விடக்கூடாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது அரசோடு கொண்டுள்ள உறவுகள், பட்டம் பதவி, அந்தஸ்து மற்றும் இன்னபிற சலுகைகள் என்பன போன்ற விடயங்களில் மிகக் கவனமாகக் காய் நகர்த்தி இருப்பதையும் இழந்து விடாமல் இன்னும் கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
இதேவேளை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது முஷ்டியை உயர்த்திக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தவம் கிடக்கிறது. தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அரசு அழைத்தால் அதுபற்றிப் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சனியன்று கூறினார். ஆனால், மறுநாளோ முஸ்லிம் காங்கிரசுக்காக பரிந்து பேசுகிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் நாகரிகமில்லாமல் நடந்து கொண்டு தங்களுடனான சந்திப்பைத் தட்டிக்கழித்து விட்டது என்று பாராளுமன்ற உறுப்;பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னதாகக் கூறியிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தங்களை வந்து சந்திக்காதது ஒரு புறமிருக்க காத்திருக்க வைத்து விட்டு தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்று அவர் ஊடகங்களுக்கு சொல்லியிருந்தார்.
இச் சந்திப்புப் பற்றி கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ‘கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க முடியாத நிலைமை தொடர்வது உண்மை. தேர்தல் சுதந்திரமாக நேர்மையாக நடந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிகளவான ஆசனங்களைப் பெற்றிருக்கலாம். தெரிவு செய்யப்பட்ட மற்றத் தமிழ் உறுப்பினரான முன்னைநாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர் தெரிவு செய்யப்பட்ட விதம் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதுதான் பொதுவான கருத்து. தமிழ் மக்கள் மிகவும் கூடுதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். முஸ்லிம் மக்கள் கூடுதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தார்கள்.
எங்களுடைய தேர்தல் பிரசாரத்தின் அடிப்படையில் இந்த இரண்டு கட்சிகளும் ஆளுங்கட்சியை எதிர்த்தன. மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமது வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள். அதுதான் மக்களுடைய தெளிவான முடிவு தேர்தல் நடந்த பொழுது அவ்விதமான பிரச்சாரம்தான் இடம்பெற்றது. தேர்தல் முடிந்த பிறகு மக்கள் மிகவும் கூடுதலாக அவ்வாறுதான் எதிர்பார்த்தார்கள். அவ்விதமான ஆட்சிதான் ஏற்பட வேண்டுமென்ற கருத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்திருந்தார்கள்.
ஆனால், அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு முயற்சியெடுத்து வந்திருக்கின்றது. எங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. அதன் தலைவர் றவூப் ஹக்கீம், மற்றும் அதன் முக்கியஸ்தர்களும் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்கள். முழுமையாக நாங்கள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களைப்பற்றித் தெளிவாக விளக்கினோம்.
தாங்கள் அரசுடன் பேசிய போதிலும் கூட இற்றை வரையில் அத பற்றி இன்னமும் ஒரு முடிவெடுக்கவில்லை என்று எமக்குக் கூறினார்கள். அந்த அடிப்படையிலேயே எமது கருத்துக்களை மிகவும் கவனமான பரிசீலனைக்குத் தாங்கள் எடுப்பதாகவும் அதுபற்றிச் சிந்தித்து மீண்டும் எம்முடன் பேசுவதாக அவர்கள் எமக்குத் தெரிவித்தார்கள். எமது பரஸ்பரக் கலந்துரையாடல் மிகவும் திருப்திகரமானதாக அமைந்தது’ என்றார் சம்பந்தன்.
இன்னும் யாராயினும் ஆட்சி அமைக்கவில்லை என்பது மக்களுடைய கவலைதானே என்று சம்பந்தனிடம் கேட்கப்பட்டபோது ‘இது மக்களுடைய கவலைக்கு அப்பாற்பட்;ட விடயம்’ என்று சம்பந்தன் பதிலளித்தார். ‘எங்களுடைய அத்தனை முயற்சியையும் நாங்கள் மேற்கொள்கின்றோம். இந்த விடயத்தில் எல்லோரும் பொறுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் நாம் இதுபற்றி இதற்கு முன்பும், தேர்தல் நடந்த பொழுதும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுதும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் இன்றும் பகிரங்கமாகவும் கூறிவருகின்றோம். உங்களால் சிபார்சு செய்யப்படுகின்ற ஒருவரை நாங்கள் முதலமைச்சராக நியமிக்கத் தயாராக இருக்கின்றோம். இது விடயமாக முஸ்லிம் சமூகம் எதுவிதமான சந்தேகங்களும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய விருப்பத்திற்கேற்ப நல்ல முடிவுகளை எடுக்குமாறும் நாம் முஸ்லிம் காங்கிரசிற்குச் சொல்லியிருக்கின்றோம்.’ என்றார் சம்பந்தன்.
‘நிச்சயமாக உங்களுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் நீங்கள் எங்களுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்க வேண்டுமென்று விரும்பி வாக்களித்தார்கள். அவ்விதமான பிரச்சாரம்தான் இடம்பெற்றது. எமது தமிழ் மக்களும் முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராய் இருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு சில பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றைப் பேசித் தீர்ப்பதற்கு நாங்கள் மிகவும் பொறுமையுடன் இருப்பது அவசியம். மக்கள் குழம்புவார்கள் என்பதற்காக நாங்கள் குழம்பிக் கொள்ள முடியாது. நாங்கள் பொறுப்புடன் பொறுமையாகச் செயற்பட வேண்டும்.
எங்களோடு சேர்ந்து ஆட்சியமைக்க முடியாது என்பதையோ அல்லது நாங்கள் அரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப்போகின்றோம் என்ற கருத்தையோ முஸ்லிம் காங்கிரஸ் கூறவில்லை. நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து விட்டோம் எஎன்ற கருத்தையும் அவர்கள் கூறவில்லை. இந்த விடயத்தில் தங்களது கருத்தை மிக அவதானமாக உற்றுக்கவனித்து ஆலோசித்து வருகின்றோம் என்றுதான் அவர்கள் கூறியிருக்கி;னறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் தீர்க்கமான முடிவெடுப்பதற்கு போதியளவு கால அவகாசம் கொடுப்பதுதான் பொருத்தமான நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருதுகின்றது’ என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கும் பலர் அவாக் கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தில் கிழக்கில் செல்வாக்கை இழந்து 37 மாகாண உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் வெறும் நான்கு உறுப்பினர்களை மாத்திரம் வென்றெடுத்துள்ள அரசின் பரம வைரியான ஐக்கிய தேசியக் கட்சி, கிழக்கு மாகாண சபையை தேசிய அரசாக அமைத்து அதில் தனக்கும் ஒரு ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நப்பாசை கொண்டுள்ளது. கிழக்கு மாகாணசபையின் தற்போதைய இழுபறி நிலைதான் தேடுவாரற்றுக் கிடக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தளவுக்கு குரல் கொடுப்பதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது.
தேசிய அரசு அமைப்பதற்காக பெரிய நிபந்தனைகளையும் அந்தக் கட்சி விதித்துள்ளது. இது கிழக்கில் ஸ்திரமான ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற நன்நோக்கத்தில் அல்ல, மாறாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சரிந்து போயுள்ள அந்தக் கட்சி உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது.
‘கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி இரண்டு வருடங்களுக்கு தமிழருக்கும், முஸ்லிமுக்கும் ஒரு வருட காலத்திற்கு சிங்களவருக்கும் தரப்பட வேண்டும் அத்துடன் காலத்தைக் கடத்தாமல் வட மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவதென்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவற்கான பொறிமுறைகளையும் அதற்கான கால எல்லைகளையும் அரசு தெரியப்படுத்த வேண்டும், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு பற்றியும் அதன் கால எல்லை பற்றியும் அறிவிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைப்பதற்கான முன்நிபந்தனைகளாக ஐக்கிய தேசியக் கட்சி விதித்துள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த வரதராஜப் பெருமாள் தலைமையிலான முதலாவது மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்டு ஆறு மாதம் கழிந்த நிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த அங்கத்தவரும் முதலாவது மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார். பல பின்னணிகளைக் கொண்டு தற்போது கிழக்கு மாகாண சபையின் சத்தியப் பிரமாண நிகழ்வும் ஆட்சியும் இழுத்தடிக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார். ஒரே வார்த்தையில் சொன்னால் வாக்களித்த மக்கள் பாவப்பட்டவர்கள். courtesy: kky info

0 comments: