Follow me on Twitter RSS FEED

ஆங் சான் சூகியின் விடுதலை சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு வழிகாட்டும்

Posted in
மியன்மாரில் நோபல் பரிசினை பெற்ற ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டது ஜனநாயகத்தை விரும்புகின்ற உலக மக்களுக்கு கிடைத்த வெற்றி என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும், 15 வருடங்களின் பின்னர் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டமை, இராணுவ அரசிற்கு எதிரான ஜனநாயகத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என கருதலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஆங் சான் சூகியின் விடுதலையானது, இலங்கைத் தலைவர்களுக்கு சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் தீர்மானம் எடுக்க உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முப்படையும் ஒன்றினைந்து பயிற்சி

Posted in
ImageShack, share photos, pictures, free image hosting, free video hosting, image hosting, video hosting, photo image hosting site, video hosting siteஇலங்கை இராணுவ வரலாற்றிலே முதல் தடவையாக எதிர்வரும் 21 ஆம் திகதி தரைப்படையினர், கடற் படையினர், விமானப்படையினர் ஒன்றினைத்து உடற்பயிற்சி நிகழ்ச்சி திட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்துள்ளார். 

மேலும் அநுராதபுரம், தந்திரிமலை மற்றம் மாவில்லு உட்பட மன்னார் மாவட்ட சிலாவத்துறையிலும் இந்த உடற்பயிற்சி நிகழ்வு 9 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த செய்ற்திட்டத்திலே 1600 இராணுவ உயர்தர வீரர்கள் மற்றும் விசேட அதிரடிப் படைப் பிரிவினர் சிலர், கடற்படை உயரதிகாரிகள் மற்றும் விமானப்படைத் தலைவர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அனைத்து பாதுகாப்பு பிரிவின் நுட்பங்களை தெரிந்து கொண்டு பலத்தினை அதிகரித்து பலவீனத்தை மறக்கடிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் தேயிலை வில்லை தயாரிப்பு

Posted in
இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தேயிலை வில்லையைத் தயாரிப்பதில் இரத்தினபுரி நிறுவனம் ஒன்று வெற்றி கண்டுள்ளது. 

இவ்வில்லைக்கு டீ பொட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வில்லையை தயாரிப்பதில் எவ்வித இரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு கோப்பைத் தேநீரைத் தயாரிக்க கோப்பையில் எடுக்கப்பட்ட சுடுநீரில் ஒரு வில்லையைப் போடுவது போதுமானது. நீரில் மண்டி விழாதபடியால் தேநீரை வடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. 

இப்புதிய வில்லையை அறிமுகப்படுத்துவதற்கான வைபவம் கொழும்பு 3 இல் உள்ள தேயிலைச் சபை கேட்போர் கூடத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

3 ஆம் தவணைப் பரீட்சை பிற்போடப்பட்டது

Posted in
15,16,18 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த மூன்றாம் தவணை பாடசாலைப் பரீட்சைகளை பிற்போடுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பினில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் 22,23,24 ஆம் திகதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார். 

மேலும் அநேகமான பாடசாலைகளுக்கு நவம்பர் 19ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் தாக்கவில்லை என்னையே அவர் தாக்க முற்பட்டார்

Posted in
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டி இருந்தார். இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார். 

இந்தச் சம்பவத்தில் தானும், மற்றுமொரு மாநகரசபை உறுப்பினரான கந்தையா அருமைலிங்கமும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரபாகரன் தெரிவித்து இருந்தார். 

மாநகரசபையால் கட்டப்பட்ட புதிய கடைகளின் ஒதுக்கீடு குறித்த ஒரு விவகாரம் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாகவும் பிரபாகரன் கூறினார். 

இதற்கிடையே தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஆர்.பிரபாகரன் தன்னை தாக்க முற்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்றைய தினம் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிட கடைத்தொகுதி தொடர்பான கூட்டமொன்று நேற்று முன்தினம் நடைபெறுவதாகவும் அதில் தன்னையும் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. 

ஆனால் காலையில் வேறு முக்கிய நிகழ்வு இருந்ததால் மாலையில் அக்கூட்டத்தை நடாத்துமாறு கூறினேன். 

அதன்படி நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு, எனக்கு விடுக்கப்பட்ட அழபைப்பின் பேரில் நான் சென்றேன். 

அக்கூட்டத்தில் எனது ஆதரவான மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இன்னும் சில மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் சிறியளவிலான கைகலப்பும் கலவரமும் ஏற்பட்டது. 

அப்போது மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத் தாக்க முற்பட்டார். அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டனர். அத்துடன் நான் வெளியேறி விட்டேன் என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார் என பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை கொடுமைபடுத்துபவர்களுக்கு இந்திய அரசு துணை

Posted in
தமிழர்களை கொடுமைபடுத்துபவர்களுக்கு இந்திய அரசு துணைஇலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசு அங்குள்ள தமிழர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட சந்தையில் மதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போதே வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதே தவிர தமிழர் நலன் காக்க பாடுபடவில்லை. தமிழர்களை கொடுமைபடுத்துபவர்களுக்கு இந்திய அரசு துணை போவது பற்றி உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தும் இந்திய அரசு மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழர்களை திட்டமிட்டு பழிவாங்கும் செயலாகும். இது கண்டனத்துக்குரியது என்றார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்

Posted in
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

மீள்குடியேற்றத்தின் போது, இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படுகின்ற அதே அளவிலான அக்கறை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதிலும் காட்டப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு மூன்றாவது நாளாக குடத்தனை, நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய விசாரணைகளின்போது ஆயுத முனையில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பாகவே அதிகமானவர்கள் சாட்சியமளித்ததாகத் பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் அடையாள அட்டை வீடு தேடி வரும்

Posted in
ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார். 

இதுவரை காலமும் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாகவே தேசிய அடையாள அட்டை உரியவருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய முறை மேற்கொள்ளப்படவுள்ளது. 

எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் விண்ணப்பத்துடன் முகவரியிட்டு முத்திரை ஒட்டிய தபாலுறையை இணைத்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாத முடிவுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமது கருத்துகள் தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்களே வெளியிடப்படுகின்றன

Posted in
வடகிழக்கு இணைப்பை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் எதிர்த்து நிற்கின்றது என்ற தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். படுவான்கரை பிரதேசத்தில் உப கல்வி வலயம் ஒன்றை ஆரம்பித்துவைத்து கன்னங்குடா மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தமிழர்கள் மத்தியிலே உணர்வு ரீதியாக பார்க்கின்ற ஒரு விடயம் வடகிழக்க இணைந்த தாயகம். இந்த வடகிழக்கு இணைந்த தாயகம் வரலாற்று ரீதியாக இருந்திருக்கின்றது, அதை நாங்கள் வந்துதான் ஜனாதிபதியுடன் சேர்ந்து பிரித்தெடுத்தோம் என்கிற பார்வை மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

இது உண்மையாக, அறிவுபூர்வமாக, ஆழமாக பார்க்கவேண்டிய விடயம்.நான் கடந்த சில கூட்டங்களில் தெரிவித்த கருத்துகள் பத்திரிகைகளில் மாறிமாறி எழுதப்பட்டுள்ளன. அது அவர்கள் தமது பத்திரிகையின் புகழுக்காக பத்திரிகை விற்பனைக்காக அல்லது அந்த பத்திரிகையாளர் தனது மூளையில் எடுத்துக்கொள்கின்ற பாணியில் அவர் எழுதிக்கொள்கின்றார். 

நீங்கள் ஆழமாக பார்க்கவேண்டும். இந்த இலங்கை திருநாட்டிலே காலம் காலமாக 9 மாகாணங்கள் இருந்துவந்துள்ளது. அது 1986ஆம் ஆண்டு மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டபோது வடகிழக்கு இணைந்த மாகாணமாக கொண்டுவரப்பட்டபோதிலும் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பிணை நடத்தி அவர்கள் இணங்கினால் மட்டுமே வடக்குடன் செல்லலாம் என தீர்மானிக்கப்பட்டது. 

அந்த அடிப்படையில் அந்த மாகாணங்கள் இணைவதும் கலைந்துசெல்வதும் உண்மை. இந்த நிலையில் இது தொடர்பில் சரியான அறிவற்றவர்கள்,அல்லது கிழக்கு மாகாணம் தொடர்பில் சரியான விளக்கம் இல்லாதவர்கள் நாங்கள் நினைத்தால் வடகிழக்கை இணைக்களாம் என கூறுகின்றனர். 

வடகிழக்கு என்பது எங்கள் தாயகம் என்று கூறுபவர்கள் எங்கள் தாயை நாங்கள் இரண்டாக வெட்டி இரத்தம் கொட்ட பிய்த்து எறிந்ததாக நினைக்கின்றார்களா ? அப்படியில்லை. இயல்பாக அது பிரிக்கப்பட்டுள்ளது. அதனை உச்ச நீதிமன்றமே பிரித்துள்ளது. அதில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. 

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம். அதன் மூலமே எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கலாம். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம். அது வடக்குடன் இணைக்கப்படுமானால் எமது மாவட்டத்தில் எதுவும் செய்யமுடியாத நிலையே ஏற்படும். 

இன்று எமது மாவட்டம் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் பெற்றுவருகின்றது. அதற்காக நாங்கள் பாடுபட்டுவருகின்றோம். இந்த நிலையில்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, எமது மக்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ஆகியோர் என்னை அழைத்து அமைச்சு பதவி ஒன்றை பெற்று தங்களது மக்களுக்கு சேவை செய்ய ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அணுகுமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்படி பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியிடம் இது குறித்து தெரிவித்தேன். நல்ல பாதுகாப்பு தருவார்கள், அமைச்சு பதவி தருவார்கள், நமது மக்களுக்கு நல்ல சேவை செய்யலாம் என கூறினேன். 

ஆனால் அவர் தமிழ் தேசியம், சம்பந்தன் ஐயா பேசுவார், பிரபாகரன் சுடுவார் என பல்வேறு காரணங்களை கூறி அன்று அந்த நல்லவாய்ப்பை தட்டிக்கழித்தார். அவர் அன்று அந்த அமைச்சு பதவியை பெற்றிருந்தால் பெருமளவான நிதி கிழக்கை நோக்கி திரும்பியிருக்கும்,தேர்தலில் வெற்றிபெற்றிருப்பார். 

ஆனால் அவர் இன்று அதே வெற்றிலையில் போட்டியிட்டு எதுவும் அற்ற நிலையில் அரசியலில் நிலைக்கமுடியாத நிலையில் உள்ளார் என்று அங்கு அவர் மேலும் தெரிவித்தார்.

மியான்மர் புரட்சித் தலைவி ஆங் சான் சூகி விடுதலை

Posted in
மியான்மர் புரட்சித் தலைவி ஆங் சான் சூகி, இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இராணுவ ஆட்சியின் பிடியில் மியான்மரின் முக்கிய எதிர் கட்சித் தலைவரான ஆங் சான் சூகி கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருந்தார். இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஆசியாவிலேயே முன்மாதிரியான நாடாக உருவாக்க வேண்டும்

Posted in
இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஆசியாவிலேயே முன்மாதிரியான நாடாக உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சியிக்கு வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து உள்நாட்டு சக்திகள் தடைகளை ஏற்படுத்திவருவதாக கிழக்கு ஆளுனர் றியார் அட்மிரல் மொஹான் ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். 

அந்த தடைகளை உடைத்து எமது பணிகளை முன்கொண்டு செல்லவேண்டிய தேவைகள் இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேற்கு உப கல்வி வலயத்தை திறந்து வைத்ததுடன் தொடர்ந்து கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தர். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

இலங்கை அனைத்து வளங்களையும் கொண்ட அழகான நாடு. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆசியாவிலேயே ஆச்சரியம் மிக்க நாடாக உருவாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் மொழி ஒன்றே எமக்கு பிரச்சினையாக உள்ளது அதனைக் கற்றுக் கொணடால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்நிய நாட்டுத் தலையீடும், எமது நாட்டு சக்திகளுமே எமது நாட்டின் பிரச்சினைக்குக் காரணம். அவை அனைத்தும் வெற்றி கொள்ளப்படும். 

30 வருட யுத்தம் நடந்து அனைத்தையும் இழந்த இப்பகுதி, அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது முதலமைச்சரின் இக் கல்வி வலய திறப்பு விழாவும் இப்பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வாக அமையும். உப என்பது தற்காலிகமே தவிர நிரந்தரமானது அல்ல விரைவில் கல்வி வலயமாக தர முயர்த்தப்படும். 

மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகளுக்கும் இப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பாடசாலை என்பது கட்டிடங்களை கட்டுவதும் நூல் நிலையங்களை கட்டுவதும் தான் முக்கியம் அல்ல மாறாக அனைத்தையும் வழங்கி கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். 

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களின் முகங்களில் சிரிப்பை பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எமது நாட்டினை முன்னேற்றகரமான நாடாக உயர்த்திக் கொண்டு செல்லும்போது அதற்கு பல தடைக் கற்கள் எட்டி நிற்கின்றன. வெளிநாட்டுச் சக்திகளுடன் உள்நாட்டு சக்திகளும் கைகோர்த்துள்ளன. இந்த நிலையில் எமது மக்கள் மிக மிக நூதனமாக சிந்தித்து அறிவுபூர்வமாக செயற்படவேண்டும். 

எமது இலங்கையினை சுபிட்சமான உயர்வான இலக்கினை நோக்கி கொண்டுசெல்ல எமக்கு மத்தியில் நல்ல கல்விமான்கள், புத்திசாலிகள் உருவாகவேண்டும். நான் ஆளுனராக பொறுப்பேற்று ஐந்தாவது கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். 

இலங்கையில் அதிக கல்வி வலயத்தினைக் கொண்ட மாகாணமாக எமது கிழக்கு மாகாணம் விளங்குகின்றது. இப்போது கிழக்கு மாகாணம் 16 கல்வி வலயத்தினைக் கொண்டுள்ளது. தெற்கில் ஆறு கல்வி வலயங்களே உள்ளன. 

இந்தப் பகுதியில் உண்மையில் ஒரு கல்வி வலயத்தின் தேவை உணரப்பட்டே வந்தது. இந்த உப கல்வி வலயத்தினை வெகுவிரைவில் மத்திய அரசுடன் கதைத்து கல்வி வலயமாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். என்றார்.

சிறைச்சாலையில் மோதல் தொடர்பில் விசாரணைகள் முடியவில்லை

Posted in
வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸார் மீது இடம்பெற்ற தாக்குதல் குறித்த விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைக்கென நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு எதுவித அறிக்கையையும் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்து அறிக்கை தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், அதனை உறிய அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகர சபை உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக மாத்திரமே முறைப்பாடு கிடைத்துள்ளது

Posted in
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஆனால் முதலமைச்சரால் தான் தாக்கப்பட்டதாக எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி

Posted in
கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பு நகரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சூதாட்ட நகரத்தைப் போன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள சூதாட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு நகரம் சூதாட்ட புரியாக மாற்றமடைந்து விடும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக உருவாக்கி அதன் மூலம் அரசாங்கம் தமது இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக கட்சி பேதம் பாராட்டாது வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காதலர் பூங்கா

Posted in
இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது.
இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா.
இளைஞர்களுக்கான பூங்கா ஒன்றை அதிலும் குறிப்பாக காதலர்களுக்கான பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும் என்பது தமது நீண்டகாலத் திட்டம் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், குருநாகலிலும், மாத்தறையிலும் கட்டியணைத்தவாறும்,
முத்தமிட்டவாறும் ஒன்றாகக் கூடியிருந்த ஜோடிகளை காவலர்கள் கைது செய்ததை அடுத்து இதன் அவசியம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அன்று கைது செய்யப்பட்டவர்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும், அவ்வளவு ஏன் கல்யாணம் ஆன ஜோடிகளும் கூட பொறாமை கொண்ட காவலர்களால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.
காதலர்கள் சௌகரியமாக சந்தித்து மகிழ்வதற்கு உரிய இடத்தை ஏற்பாடு செய்யத் தவறியதன் காரணமாக இந்த கைதுகளுக்கும், அதனால், காதலர் அனுபவித்த சிரமங்களுக்கும் தானும் ஒரு வகையில் பொறுப்பு என்று இளைஞர் விவகார அமைச்சர் கவலைப்பட்டதாக பெரேரா கூறினார்.
புதிதாக காதலர்களுக்காக உருவாக்கப்படவுள்ள பூங்கா நாடாளுமன்றத்துக்குப் பக்கத்தில் ஒரு ஆற்றின் கரையில் அடுத்த ஆண்டு அமைக்கப்படும்.
சிறார்கள் அங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள், ஆனால் இளைஞர்களை இலக்கு வைத்தே இந்த பூங்கா அமைக்கப்படுகின்ற போதிலும் வேறு வகையிலான வயதுக்கட்டுப்பாடு எதுவும் அங்கு இருக்காது.
இசைக் கலைஞர்களும், ஏனைய கலைஞர்களும் அங்கு தமது நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
சமூக மட்டத்தில் இது குறித்து சிறிது சர்ச்சை இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் அரசியலுடனோ அல்லது இனவிவகாரத்துடனோ தொடர்புடையதல்ல தலைமுறை இடைவெளியுடன் சம்பந்தப்பட்டது மட்டுந்தான்.
இலங்கை இளைஞர்கள் பொதுவாக புதுமை விரும்பிகள் என்று இளைஞர் விவகார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இப்படியான இடங்கள் காதலர்களை வேடிக்கை பார்ப்பவர்களால் இலக்கு வைக்கப்படலாம் என்ற சிலர் கவலைப்பட்டாலும், இப்படியான பூங்காக்களை மேலும் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தவும் திட்டம் இருக்கிறது

விடுதலை செய்...!

Posted in
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை நடத்தியுள்ளது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசே கோதுமை மாவின் விலையை உடனடியாக குறை அல்லது மானியம் வழங்கு, உழைப்புக் கேற்ற ஊதியம் வழங்கு, தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசே தீர், சரத்பொன்சேக்காவை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கிழக்கு ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

Posted in
கிழக்கு ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கிச் செல்லும் இரவு நேர ரயில் சேவைகள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் பிற்பகல் 2.30 அளவில் பலுகஸ்வெவ பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக இரவு 7.30 மட்டக்களப்பு ரயில் சேவை, 9 மணி திருகோணமலை தபால் ரயில் சேவை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலுறவு கற்கை நெறிப் புத்தகம்; சிறுவர் நீதிமன்றில் வழக்கு

Posted in
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பீ அறிக்கையின் படி, பிரபல்யமான சர்வதேச பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலுறவு தொடர்பிலான கற்கைநெறி புத்தகத்தை வழங்கியமை தொடர்பிலான வழக்கு பத்தரமுல்லை சிறுவர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகளின் உயர்கல்விக்கு இந்திய நடிகர் உதவி

Posted in
இலங்கைத் தமிழ் அகதிகளின் உயர்கல்விக்கு இந்திய நடிகர் உதவிஇலங்கை அகதி முகாம்களில் வசிக்கும் 30 மாணவ மாணவிகளின் உயர் கல்விச் செலவை நடிகர் கருணாஸ் ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறியதாவது, 

இலங்கையில் தமிழர் கல்வியில் புறக்கணிக்கப்பட்டதே பேரழிவுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் அரசு உதவியால் அன்றாட வாழ்வை மட்டுமே நகர்த்த முடியும். அங்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற திறமையான மாணவ மாணவிகள் பலர் உள்ளனர். 

அவர்களுக்கு உயர்கல்வியினை தொடர வாய்ப்பினைக் கொடுத்தால் நல்ல வருமானமுடைய வேலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பேற்படும். இதன் மூலம் அவர்களை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அந்த சிந்தனையில் தான் 30 பேரின் உயர்கல்விச் செலவை ஏற்றுள்ளேன். 

உயர் கல்வி பெற்று வேலைக்கு செல்பவர்கள் அறக்கட்டளையை நிறுவி தங்கள் ஊதியத்தில் 10 சதவீதத்தை அதற்கு அளிக்க வேண்டும். அந்த தொகை மூலம் அகதி முகாம்களில் உள்ள மேலும் பல மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும். இதன் மூலம் அகதி முகாம்களில் வசிக்கும் மக்கள், வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். 

என்னைப் போல் பலர் கல்வி உதவி அளிக்க முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அகதி முகாம்களில் உள்ள ஊனமுற்றோருக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை அளிக்க குறிப்பிட்ட அளவு இடம் வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளேன் என்றார்.

அதிகாரம் வழங்கப்பட்டால் புரட்சிகரமான சேவையினை வழங்குவேன்

Posted in
அதிகாரம் வழங்கப்பட்டால் புரட்சிகரமான சேவையினை வழங்குவேன்மக்கள் எனக்கு அதிகாரத்தினை வழங்குவார்களாக இருப்பின், புதியதொரு வரலாற்றினை உருவாக்கி, புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டினை பாதுகாக்க தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

மேலும், பிரதானமாக உள்ளொன்று வைத்து வெளியொன்று போன்றதொரு அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் எமது நாடு இழிவுபடுத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

போபிட்டிய ஶ்ரீ சுதர்ஷனராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாவறு தெரிவித்துள்ளார். 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஒருசில அரசியல்வாதிகள் கொழும்பு 7 இல் குளிரூட்டப்பட்ட அறைகளில் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதும், அறிக்கை வெளியிடுவதும், மேடையில் உரையாற்றுவதும்தான் அவர்களது அரசியல். எனது அரசியல் வாழக்கை அவ்வாறு வரையறுக்கப்பட்டது அல்ல, உயர் மாடியினில் இருந்து வேலை செய்யவும் எனக்கு விருப்பமில்லை, நான் வீதியில் சென்று மக்களுக்காக வேலை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதேவேளை எனது அபிவிருத்திக்கான தலையீட்டினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு கடுமையான சட்டதிட்டங்கள் அவசியம்

Posted in
நாட்டின் அபிவிருத்திக்கு கடுமையான சட்டதிட்டங்கள் அவசியம்நாட்டின் அபிவிருத்திக்கு கடுமையான சட்டதிட்டங்கள் அவசியமென நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும், சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது தான் அந்த அதிகாரியை மரத்தில் கட்டி மக்களுக்கு டெங்கு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை, அந்த சம்பவத்தின் பின் பாரிய அளவு டெங்கு நோய் தாக்கத்துக்கு உட்படுவோர் தொகை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, இது சட்டவிரோதமில்லையா எனக் கேள்வி எழுப்பிய போது, அவர் டெங்குவினை ஒழிப்பதற்காகவும், விழிப்புணர்வினை ஏற்படுவதற்காகவும் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், முன்னைய காலத்தில் அரசர்கள் கடைப்பிடித்த சட்டதிட்டங்கள் இன்னமும் கூட நடைமுறையில் உள்ளதெனவும், முன்னைய காலங்களில் கிராமத் தலைவர்கள் குற்றவாளிகளுக்கு மரத்தில் கட்டி வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கியுள்ளதாகவும் அதனை தண்டு கண்ட என அழைத்ததாகவும், அது போன்ற சட்டங்கள் இன்றைய காலங்களில் தகுதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

Posted in
ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களினை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் உயர்கல்வி அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து உடமைகளை சேதப்படுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். 

21 மாணவர்கள் தொடர்பான பிணை மனுவினை பரிசீலனை செய்த நீதியரசர் தீபாளி விஜேயசுந்தர, தலா 20,000 ரூபா தனிநபர் பிணையில் மாணவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். 

பிணையில் விடுதலை செய்யப்படும் மாணவர்கள், போராட்டங்களிலோ, கூட்டங்களிலோ கலந்து கொள்ளக்கூடாதென மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் அவற்றில் கலந்து கொள்ளவார்கள் எனில் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 01 ஆம் திகதி மாணவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இல்வையென கூறி மாணவர்களை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் சட்டத்தரணிகள் உடன் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிழக்கு மாகணத்தில் ஒரு லட்சம் மரங்கள் நடப்படவுள்ளன

Posted in
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பிறந்ததினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் 11,00,000 மரங்கள் நடப்படவுள்ளதனால், அன்றைய தினத்தில் அவற்றில் 1,00,000 மரங்களை கிழக்கு மாகாணத்தில் நட இருப்பதாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 

மேலும், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டு கல்வி திணைக்களம், மாவட்ட செயலகம் உட்பட பலர் ஒன்றிணைந்து குறிப்பிட்ட நேரத்தில் மர நடுகையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையினை ஆசியாவிலே சிறந்த நாடாக ஆக்கிக்காட்டுவதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சவாலிற்கு தான் வரவேற்பளிப்பதாகவும், 11,00,000 மரநடுகை போன்ற சாதனையில் தாம் பங்குகொள்வதில் பெறுமையடைவதாகவும் கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை

Posted in
சிறைக்கைதிகளின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை50 பொலிஸார் காயமடைந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

கைதிகளின் உணர்வுகளை தூண்டி அவர்கள் தாக்கும் விதத்தில், பொலிஸார் எவரும் நடந்துகொள்ளவில்லை என சிறைச்சாலைப் பிரதி அமைச்சர் விஜிதமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். 

மேலும் சிறைச்சாலைக் கைதிகளுக்கு பொலிஸார் மற்றும் நீதிபதிகள் மீது விரோத உணர்வுகளுன் காணப்படுவதாக அவர் பிபிசியிற்கு தெரிவித்துள்ளார். 

நேற்யை தினம் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதற்காக பொலிஸார் முற்பட்டபோது கைதிகள் அவர்களை நெஞ்சிலும் தலையிலும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினாலேயே இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டீ சில்வா பிபிசியிற்கு தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted in
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பதுளை- கொழும்பு வீதியில் இவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக் கழக மாணவர்கள் கைது குறித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

றிஸானாவை விடுவிக்கக் கோரி காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை

Posted in
காத்தான்குடியில் இயங்கும் பெண்களுக்கான இக்ரா இஸ்லாமிய அழைப்பு மையம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூதூரைச் சேர்ந்த றிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸுக்கு, அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்புவதற்காக காத்தான்குடி பிரதேசத்தில் 5000 கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையை மையம் இன்று ஆரம்பித்துள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் வைத்து கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமானது. இதில் ஆண்கள், பெண்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர். இன்று காலை பாடசாலைகளிலும் கையெழுத்திடும் நடவடிக்கை இடம்பெற்றது. 

இராணுவ அதிகாரிகளின் தொப்பிகளில் நிறமாற்றம் : தலைமையகம் தெரிவிப்பு

Posted in
இராணுவ உயரதிகாரிகளின் தொப்பிகளின் நிறத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 



தற்போதைய காக்கி நிறத்திலிருந்து இளம் பச்சை நிறத்திற்கு தொப்பி மாற்றப்படவுள்ளது. இவ்வாறான மாற்றம் 61 வருடங்களின் பின்னர் முதன் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை சீருடையில் மாற்றம் : அதிகாரிகள் எதிர்ப்பு

Posted in
சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் புதிய தீர்மானத்திற்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் தொடக்கம் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரதும் உடைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் உடை காக்கி நிறத்தில் அமையவில்லையெனினும் அங்குள்ள மக்களின் கல்வி நிலை உயர்ந்தளவில் உள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. தற்போதுள்ள இந்த உடைக்கே மக்கள் பயப்படுகின்றனர்.

அவ்வாறு உடைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமானால் அதற்கு பலமான எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு வெட்டுப்புள்ளிமுறை அறிமுகம்

Posted in
வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போது z வெட்டுப்புள்ளி முறை அறிமுகப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க தெரிவித்தார். 

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

"ஒவ்வொரு பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவு செய்யப்படுவோரின் தொகையிலிருந்து இரு மடங்கினர் மாத்திரமே வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு உள்வாங்கப்படுவர். 

புதிய சுற்றறிக்கையின்படி இப்பட்டப்படிப்புக்கு உள்வாங்கப்படுபவர்களுக்கு முதலில் ஆங்கிலம் மற்றும் கணினி பாடநெறிகள் நடத்தப்படும். வெளிவாரிக் கற்கைநெறிக்குப் பதிவதற்கு முன்னர் நடத்தப்படும் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோர் மாத்திரமே பட்டப்படிப்புக்குப் பதிவு செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.

பட்டதாரிகள் நாட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது : எஸ்.பி.

Posted in
இளம் தலைமுறையினரான பட்டதாரிகள் பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் சுமையாக இராமல் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது அவர்களது பொறுப்பாகும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

உயர் கல்வி அமைச்சில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் மேலும், 

"வெளிநாடுகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஹோட்டல்களில் சேவகர்களாகவும், சமையற்காரர்களாகவும், மற்றும் கூலித் தொழிலாளிகளாகவும் பணி புரிகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமல்ல. 

இது குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால் எமது நாட்டை நினைத்தால் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் பட்டதாரிகள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதில்லை.

ஆனால் இங்கிருந்து வெளிவாரிப் பட்டப் படிப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு பாதை துப்புரவு செய்பவராகவும் பத்திரிகை விநியோகிப்பவர்களாகவும் இரவு பகல் பாராது வேலை செய்து பணம் சம்பாதித்து கொள்வர். இதே தொழிலை அவர்கள் இங்கு செய்ய வெட்கப்படுகின்றனர். " எனத் தெரிவித்தார்.