Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பில் விமான நிலைய நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன…

Posted in

2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளுர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வ தற்காக முன்மொழியப்பட்ட பிரேரணை களின் பிரகாரம், மட்டக்களப்பில் விமான நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 700 மீட்டர் நீளமான ஓடுபாதை, வீதிகள், விமானம் தரையிறங்கும் பகுதி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதற்காக 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாண பணிகள் இடம்பெறவுள்ளன.
20 மில்லியன் ரூபா செலவில் பயணிகள் தங்கியிருக்கும் பகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிபுணர்குழு அறிக்கையின் பிரகாரம் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் ; சர்வதேச மன்னிப்புச்சபை!

Posted in
ஐ.நா. நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. கண்டிப்பாக இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் சாம் சரிபி விடுத்துள்ள அறிக்கையில் தெளிவிக்கப்பட்டுள்ளதாவது,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு மறுப்பதற்காக இலங்கை அரசு மூடிமறைக்கும் முயற்சிகளை யுத்தம் நிறைவுற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

போர்க்குற்றங்களை யார் செய்தது, யாருக்கு என்ன செய்தது என்று முடிவு செய்வதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போரின்போது இரண்டு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க ஐ.நா.வின் விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் உறுதிப்படுத்த வேண்டும் போரின் இறுதிக்கட்டத்தில் அதிலிருந்து தப்பிய சாட்சிகள் மிகப் பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். காயங்கள் அடைந்தும் வாழ்க்கையை இழந்தும் போயுள்ளனர். உணவு, மருத்துவ வசதிகள், குடிநீர் என்பன அவர்களுக்குக் கிடைக்காமல் பிடுங்கிக் கொள்ளப்பட்டன.

போர் வலயத்தில் இருந்து தப்பிய அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் பரிதாபகரமான நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.இரண்டு ஆண்டுகள் கழிந்தும் பலர் இன்னமும் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதியை நாம் எப்படி மறுக்க முடியும்.

விடுதலைப் புலிகளாலும் இலங்கை அரசினாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக அனைத்துலக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும்: இல்லை அதெல்லாம் பொய்

Posted in

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தரமான பெற்றோல் காணப்படுவதாகவும் அதனால் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது. 

அது மாத்திரமன்றி 35000 மெட்ரிக் தொன் பெற்றோல் எற்றிய கப்பலொன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த விதத்திலும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் ஏனைய எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கனியவள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்

Posted in

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இது சத்தியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக கிழக்கில் பொய்ப் பிரசாரம் செய்கின்றவர் அமைச்சரவையில் அது குறித்து எதுவும் பேசவில்லை. என்னுடனும் மிக அன்பாகவே பேசுகின்றார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அதன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் பெஸ்டர் ஏ.எம்.றியாஸை ஆதரித்து கல்முனைகுடி சுனாமி வீட்டுத்திட்ட வெளியரங்கில் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது தெரிவித்ததாவது;,
“நான் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள் அணைவருக்குமான ஜனாதிபதியாவேன். முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, பௌத்தர் என்ற வேறுபாடு காட்டி நான் ஆட்சி செய்ய முடியாது. எல்லா மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் நான் மதிப்பளிக்கின்றேன். விகாரைகளையும் பள்ளிவாசல்களையும் கோவில்களையும் பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தேர்தலில் உங்கள் வாக்குகளை பெறுவதற்காக பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக இங்கு இனவாத பிரசாரம் செய்யப்படுகிறது. பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்று இங்கு பிரசாரம் செய்பவர் என்னிடமோ அமைச்சரவையிலோ இதுவரை முறையிடவில்லை. அவர் என்னுடன் மிகவும் அன்பாகவே பேசுகின்றார். இது என்ன நியாயம்? எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்களும் ஏமாற வேண்டாம்.
இந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி உட்பட எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் அவ்வாறு நடந்ததாக கூறவில்லை. என்னை உங்களிடமிருந்து பிரிப்பதற்காகவே இனவாதம் பேசுகின்றனர். அதன் மூலம் சில வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான புண்ணியம் எனக்கே கிடைக்கும்.
மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். இனவாதம் பேசி என்ன பலம். அதுதான் அரசியல் இலாபம். அதற்காகவே இன்று இனவாத பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதி மக்கள் என்றும் ஏமாளிகளாக வாழ மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
ஏற்கனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு போதிய உரமானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தேவைகளை நாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலாக நாம் எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கின்றோம் என்பதில் நான் நிம்மதிப் பெருமிதத்துடன் இருக்கின்றேன். மக்களின் அர்ப்பணிப்பாலும் நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த சமாதானத்தையும் இன ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
ஆகையினால் நீங்கள் என்னை முழுமையாக நம்புங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அத்தனையும் செய்து தருவேன். என்னுடன் நம்பிக்கையாக இணைந்து சேவையாற்றக் கூடியவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள். அதுவே இந்த மண்ணுக்கும் உங்களுக்கும் நல்லது. அதன் மூலம் எனக்கும் உங்களுக்கு சேவை செய்ய இலகுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, வேட்பாளர்களான முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், ஏ.எம்.றியாஸ், ஜமாலியா சுபைர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதி தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அலுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்ப இன்று முதல் நேர்முகப் பரீட்சை

Posted in
மரண தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவி வெற்றிடத்தை நிரப்பவென இன்று (28) நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகிறது. 

இந்த பதவி வெற்றிடத்திற்கென விண்ணப்பித்த 178 பேரில் 169 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார். 

3 வருடங்கள் வெற்றிடமாகக் காணப்படும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 

1976 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, இதுவரை 357 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சூரியனை சுற்றி சிவப்பு நிறத்திலான கற்கள்

Posted in
மட்டக்களப்பில் சூரியனை சுற்றி சிவப்பு நிறத்திலான கற்கள் தோன்றும் அதிசயம் இன்று காலைமுதல் நிகழ்கிறது.

இதனை சாதாரண கண்களால் பார்க்கமுடியவில்லை. வீடியோ கமறாக்களின் மூலமும் நடமாடும் தொலை பேசிகளின்   கமறாக்களின் மூலமும் இந்த அதிசயத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். Sources : Tamil Mirror

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் - சம்பந்தன் சபதம்

Posted in
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடாந்தும் உரையாற்றிய இரா.சம்பந்தன், 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம். 

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சேன்றதே தவிர நாங்கள் இதிலிருந்து நழுவிச் செல்லவில்லை. 

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது. 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். 

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியம். 

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஏன் நடாத்தப்படுகின்றது எதற்காக நடாத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும் ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.