Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி UTOCS அமைப்பினால் சேகரிக்கப்பட்ட நிதி ACJU கல்குடாக் கிளையினரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

Posted in
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வேண்டுகோளுக்கமைவாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்காகவும் அதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்குமான நிதி ACJU பிராந்தியக் கிளைகளின் மேற்பார்வையில் பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்துப் பாகங்களிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் மேற்பார்வையின் கீழ் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் (United Tractor Owners' Co-operative Society) காவத்தமுனை, காகிதநகர் ஆகிய பிரதேசங்களில் கடந்த 26.05.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தினை வசூல் செய்திருந்தனர். 

மேற்படி சேகரிக்கப்பட்ட நிதியானது இன்று 27.05.2019ம் திகதி இரவு 09.00 மணியளவில் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் சென்ற குழுவினரால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் மற்றும் வாழைச்சேனை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர். இல்ஹாம் இஸ்மாயில் (MBBS) ஆகியோரின் முன்னிலையில் வைத்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா – கல்குடாக் கிளைப் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டிருந்தது.

ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் தங்களது அமைப்பு சார்ந்த விடயம் மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த விடயங்களில் மிகவும் அக்கறையுடனும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதை கௌரவ தவிசாளர் மற்றும் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சிறுவனுக்கு ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் சிகிச்சைக்கான நிதியுதவி

Posted in

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கொடூர தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலத்த காயங்களுக்குள்ளான 10 வயதான அசாயல் றொசைறோ அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு மேலதிகமாகத் தேவைப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் உடைந்து போயிருந்ததோடு விருப்பமுடைய கொடையாளர்களிடமிருந்து உதவிகளையும் கோரியிருந்தனர்.

மேற்படி சிறுவனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம்மாளான ஒரு உதவித் தொகையினை அவசரமாக சேமித்திருந்தனர்.
அந்தவகையில் நேற்று 2019.05.24ம் திகதி மாலை குறித்த அமைப்பின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள குறித்த சிறுவனின் இல்லத்திற்குச் சென்ற ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் உதவித் தொகையாக சுமார் இருபத்தி ஐயாயிரம் ரூபா காசோலை மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று சமூக அமைப்புக்கள், தனவந்தர்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி படுகாயமடைந்துள்ள குறித்த சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு உதவிட முன் வர வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.





ஸ்ரீ.மு. காங்கிரஸின் இணைப்பாளராக எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கான இணைப்பாளராக CASTRO அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்கள் இன்று கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் கீழும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் சிபார்சின் பேரிலும் இந்நியமனம் தேசிய அமைப்பாளர் கௌரவ. சபீக் ரஜாப்டீன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் இன்று 10.05.2019ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முன்னெற்றமடைவதற்கு எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்களின் இவ்விணைப்பாளர் நியமனம் பெரிதும் வலுச் சேர்க்கும் என்பதோடு இளம் தலைமைத்துவங்களான இவ்விருவரும் கட்சியின் வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயலாற்றி இளைஞர்கள், மூத்த போராளிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியினால் மாற்றுத் திறனாளிக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது

Posted in
காவத்தமுனையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு கல்குடா செலஞச்ர்ஸ் அணியினரால் இன்று ஒரு தொகை உதவிப் பணம் நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த மாற்றுத் திறனாளி சிறுவனுக்குரிய சிகிச்சைகளுக்கான உதவித் தொகை அண்மையில் இணையச் செய்திகளினூடாகக் கோரப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வுதவி கல்குடா செலஞ்சர்ஸ் அணியினரால் வழங்கப்பட்டுள்ளமையானது ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடாகும். 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் கட்டார் கிளையினரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணத்துடன் சேர்த்து இங்குள்ளவர்களின் ஒத்துழைப்புடனும் இந்த உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இந்த அன்பளிப்புப் பணத்தை கழகத்தின் தலைவர் முஸம்மில் அவர்களின் தலைமையில் சென்ற கழக முக்கியஸ்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

கிழக்கின் ஆளுனர் தன் அதிகாரத்தை படிப்படியாக இழந்து வருகின்றாரா?

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
இன்று 23.03.2019ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதமரின் பங்கு பற்றுதலோடு இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கும் வைபவத்தில் சுமார் 7206 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த காணி உறுதிகள் வழங்கலில் மட்டு.மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு தலைப்பட்சமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநரின் முயற்சியில் சுமார் 7206 காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும், மற்றொரு செய்தியில் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் தானா என்ற கேள்வியும் எழுகின்றது.

இதே நிலையில், மாகாண சபையின் ஆட்சி மாறி, கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மூவினத்திற்கும் பொதுவான அடிப்படையில் தனது சேவைகளை முன்னெடுத்து வரும் ஆளுநர் ஒட்டுமொத்த மாகாணத்தின் அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துள்ள அவர், காணி உறுதி வழங்கலில் தனது அதிகாரத்தை இழந்துள்ளாரா?

அல்லது முழு மாகாணத்தின் அதிகார மையமாக ஆளுநர் இருக்கத்தக்கதாக அதிகாரிகளின் கை மேலோங்கி ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளனரா?

ஏனென்றால், வழங்கப்படும் சுமார் 7206 உறுதிகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்து இல்லாவிட்டாலும் மாவட்ட விகிதாசார அடிப்படையிலாவது சுமார் இரண்டாயிரம் உறுதிகளேனும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமை மாகாண ஆளுநர் மாவட்ட அதிகார மையத்திடம் தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

தசாப்த கால முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு நியாயமான அடிப்படையில் தமிழ் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தீர்வு கிடைக்குமென நம்பியிருந்த மாவட்ட முஸ்லிம்களுக்கு இவ்வாறாக அநீதியிழைக்கப்பட்டுள்ளமை வரலாற்று ரீதியில் நடந்து வரும் நிருவாக அடக்குமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

முஸ்லிம் ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக சேவையாற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எப்போதும் முஸ்லிம் சமூகத்திடம் இல்லை. கிடைக்க வேண்டிய பங்கீடு கிடைக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

அதே நேரம், கடந்த 02.03.2019, 03.03.2019ம் திகதிகளில் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை இட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு தலைப்பட்சமாக தமிழினத்திற்கும் மாத்திரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள செய்திகள் வெளியில் கசிந்தமையால் குறித்த மாகாண அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போட்டனரா? என இப்போது சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

யுத்த காலத்தில் பயங்கரவாத அடக்குமுறைக்குள் தமது நிலபுலங்களை இழந்த முஸ்லிம்கள் பயங்கவாதம் முற்றுப்பெற்றும் நிருவாகப் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படுவதையும் அநீதியிழைக்கப்படுவதையும் அரசியல் தலைமைத்துவங்கள் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதனூடாக எதிர்காலத்தில் தமது இருக்கைக்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு செயற்படுகிறார்களா?

தமது எதிர்கால அரசியல் இருப்புக்காக சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த மாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காக அதே சமூகத்திடம் மண்டியிட்டுக் கிடக்கும் சூழலை நநாமே உருவாக்குகின்றோம் என்பதே மறைமுக உண்மை என்பதை மனதிற்கொண்டு ஒட்டுமொத்த மாகாண அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ள ஆளுநர் காணி வழங்கலில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு தீர்வினைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு காணி வழங்கலில் முஸ்லிம்கள் முற்றாகப்புறக்கணிப்பு : திட்டமிட்ட அநீதி

Posted in
எம்.ஐ.லெப்பைத்தம்பி 
தகவல் உதவி-ஏ.எச்.நுபைல் 

நாளை 23.03.2019ம் திகதி சனிக்கிழமை பிரதமர் தலைமையில் மட்டு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ள காணி உறுதி வழங்கலில் மட்டு மாவட்ட முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். பல தாசப்த காலமாக பல்வேறு கோணங்களில் காணி வழங்கலிலும் காணிக்கான உறுதி வழங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் நாளைய நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அதிகாரிகளின் ஒரு தலைப்பட்சமான செற்பாடாகும்.


மட்டு மாவட்டத்திலும் குறிப்பாக கல்குடா பிரதேசத்திலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான், வாகரை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பல ஆண்டு காலமாக காணி ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதும் அநீதி இழைக்கப்பட்டே வருவதும் எவராலும் மறுதலிக்க முடியாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள முஸ்லிம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சமூக மட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்களிடம் மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில், நாளை 23.03.2019ம் திகதி நாட்டின் பிரதமர் தலைமையில் இடம்பெறும் நிகழ்விலாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த முஸ்லிம்களுக்கு கடைசியாக இருந்த நம்பிக்கையும் இழந்து போயுள்ளது. இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு காணிப்பிரச்சினை உண்டென்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக முஸ்லிம்களுக்கு நெடுங்காலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றமையை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கான காணிப்பங்கீடு மாவட்டத்தில் சரியாக பின்பற்றப்படாத நிலையில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளுக்குக்கூட செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் அரச மட்ட அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காலாகாலமாக இருந்து வரும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தேர்தல் கால பேசு பொருளாக மட்டும் இருந்து வருகிறதேயொழிய, அதற்கான தீர்வுகள் தொடர்பில் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெட்டத்தெளிவானது. இதற்கான பழியை மாவட்ட முஸ்லிம் தலைமைகளும் உள்ளூர் அரசியல் தலைமைகள், சமூக அமைப்புக்களும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். வெறுமனே தேர்தல் கால கோசங்களாகவும் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த மக்களுக்கு கானல் நீராகவுமே போய் விட்டதை தற்போது உணர்கிறோம். நாட்டின் பிரதமர் கையாலேயே இந்த அநியாயம் நடக்கப் போகிறதே என்பதுடன், நாளைய நிகழ்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு என்ன பதிலை வழங்கப்போகிறார்கள்? நாளை நிகழ்வில் இழைக்கப்பட்டுள்ள முஸ்லிகளுக்கான அநீதியைக் கண்டித்து, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் நிகழ்வை புறக்கணிக்க போகிறார்கள்? சுமார் 7206 உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதில் எத்தனை உறுதிகளை பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க போகிறார்கள்.

அதே நேரம் சுமார் 800 உறுதிகள் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வழங்கப்படவுள்ள நிலையில் ஒரு முஸ்லிமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிய வருகிறது. இப்பிரதேசத்திலுள்ள சுமார் ஐந்து கிராம சேவகர்கள் தற்காலிக இணைப்பாக தாரைவார்க்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் அரச இயந்திரத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட அநீதியாகும். எனவே, நிச்சயமாக நாம் போராடி எமது காணிப்பிரச்சிக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளாதவரை எவரும் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பதானது இருப்பதையும் பறி கொடுக்கும் நிலையையே தோற்றுவிக்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு ஹரீஸ் எம்.பியே பொருத்தமானவர்

Posted in
-முஹம்மட் அர்ஹம் (சாய்ந்தமருது)-

ஆல விருட்சமாய் வியாபித்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் தலைமைத்துவப் போட்டிகளினாலும் காட்டிக் கொடுப்புகளினாலும் துண்டாடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் கட்சியில் இருந்த சகல பிரதிநிதிகளும் தம்மாலான விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவப் பொறுப்பைப் பாதுகாப்பதற்காக இன்றுவரை செய்து வந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்த ரவூப் ஹக்கீம் அவர்களை தலைமைத்துவமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட எமது கட்சிப் போராளிகளின் உன்னதத் தன்மைக்கு பிரதியுபகாரமாக அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தலைமை நிறைவேற்ற தவறியுள்ளமையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கையில் தலைமைத்துவ செயற்பாடுகளும் வலுவிழந்து கொண்டு வருகின்றமையையும் நாம் கண் முன்னே கண்டு வருகின்றோம். 

சாணக்கியம் எனும் பெயரில் பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி இழுத்தடிப்புச் செய்வதினால் ஒவ்வொரு பிரதேச போராளிகளும் மனதளவிலும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 

தீகவாபி பிரச்சினையாக இருக்கட்டும், ஒலுவில் துறைமுகப் பிரச்சினையாக இருக்கட்டும், மண்ணறிப்புப் பிரச்சினையாக இருக்கட்டும், சாய்ந்தமருது பிரதேச சபை விடயமாக இருக்கட்டும் கோறளை மத்தி பிரதேச சபை உருவாக்கமாக இருக்கட்டும். இவை போன்ற பல பிரச்சினைகள் எழுந்தபோது நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை நம்பி நின்ற கட்சி போராளிகளுக்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. அனைத்தும் சாணக்கியம் என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு தேர்தல் காலங்களில் தூசு தட்டி எடுக்கப்படும் விடயங்களாகவே காணப்படுகின்றன. 

இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஹரீஸ் எம்.பி. அவர்கள் தீர்வுகளை காலத்திற்குக் காலம் முன்வைத்திருந்தாலும் அதனை தலைமைத்துவம் ஏற்காமல் விட்டது மட்டுமன்றி அவரையும் சுயாதீனமாக இயங்க விடாமல் முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது. 

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவு தொடக்கம் இன்றுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவ விடயத்தில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளதானது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு சமகால சூழ்நிலையில் மிகப் பொருத்தமானவர் யார் என்று பார்த்தால் அது கௌரவ ஹரீஸ் எம்.பி. அவர்கள் மட்டுமேயாகும். செயல் வீரராகவும் இளம் தலைவராகவும், அனைவரையும் சாந்தமாக அரவணைத்து போவதற்கும் பிரச்சினைகளின் போது களத்தில் முன் நிற்பதற்கும் பொருத்தமானவர் ஹரீஸ் எம்.பி. அவர்கள் மாத்திரமே. ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடாத்தக் கூடிய தகைமையுள்ள ஹரீஸ் எம்.பி. அவர்களிடம் தலைமைத்துவப் பொறுபப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எம் இளம் சந்ததியினரின் எதிர்பார்ப்பாகும். 


ஐ ரோட் தொடர்பாக தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்

Posted in
-M.T.M. Haithar Ali-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சிக் காலத்தின்போது மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத் திட்டமாகும்.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட வீதிகளை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளைத் தெரிவு செய்வது தொடர்பான கூட்டம் கடந்த 10.05.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.

இதன் போது, காத்தான்குடி பிரதேசம் உட்பட அதன் அயல் கிராமங்களின் வீதிகளை உள்வாங்கும் விடயத்தில் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் வீதிகளை ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.

இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது.

இதன் பிரகாரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதம உதவிச்செயலாளர் V. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட EP/08/PL/I Road/2017 இலக்க கடித்திற்கமைவாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் தங்களுக்கு எத்தகைய சம்பந்தமுமில்லாத, முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஐ ரோட் வேலைத் திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதும், பொய்யான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுவதுமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகவே, போலியான விடயங்களைக்கூறி மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய அரசியல் கலாசாரம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இத்திட்டத்திற்கு எவ்வகையிலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் இது கிழக்கு மாகாணம் ரீதியாக செயற்படுத்தப்படும் திட்டம் என்பதைகூட அறிந்திராதவர்கள் காத்தான்குடிக்கு என்னுடைய அழுத்தத்தால் “ஐ ரோட் (I Road)” திட்டம் அமுலாக்கப்படப்போகின்றது என்று சிறுபிள்ளைதனமாக முகப்புத்ததகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றார்கள் இதற்கான மறுப்பினை ஆதாரபூர்வமாக கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாகவும், ஆவணங்களினூடாகவும் காணொளியினூடாகவும் காணமுடியும்.









ஓட்டமாவடியில் பெண்களுக்கான இலவச இலகு ஆங்கிலப் பேச்சுக் கருத்தரங்கு

Posted in

பிரதேச சமூக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகும் - ஏ.எம் ஹனீபா

Posted in
தங்களது பிரதேசம், தான் சார்ந்த கிராமம், தனது சமூகம் விருத்தியடைய வேண்டும், அந்த வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்க முன் வருவது இளைஞர் சமூகமாகிய உங்களின் கட்டாய கடமையாகும் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட தகவல் பிரிவு உத்தியோகத்தர் ஜனாப் ஏ.எம் ஹனீபா தெரிவித்தார். 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர்கழகங்களின் பிரதேச சம்மேளனக் கூட்டம் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 2019.02.19 ஆம் திகதி, சம்மேளனத் தலைவர் திரு . வினோத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்றைய இளைஞர் சமுதாயம் தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்ய முன் வரவேண்டும் அவ்வாறு சேவை செய்ய முன் வருதற்கு முதல் சமூகம், சமுதாயம் என்ற எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ள வேண்டும். சமூகம் அல்லது Society எனும் போது ஒட்டு மொத்த சமுதாய குழுக்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம் . இங்கு சிறு சிறு குழுக்களாகவே சமூதாய அமைப்புக்கள் கானப்படுகின்றன. 

சமூகம் என்ற வகையில் தங்களுக்குள் உள்ளடங்கப்பட்டு இருக்கும் சமுதாய அமைப்புக்களை பாதுகாப்பது, அவர்களுக்காக பணி செய்வது சமூகத்தின் தார் மீக பொருப்பாக இருக்க வேண்டும். ஒரு சமுதாயக் குழு பிழை விடுகின்றது என்பதற்காக ஒட்டு மொத்த சமூகமும் தவறு செய்கின்றது என்று கூறிவிட முடியாது. அவ்வாறு தவறுகள், பிழைகள் நடைபெருகின்றது என்பதை அவதானித்தாலோ அல்லது அறிந்தாலோ அந்த சமூகத்தில் இருக்கும் ஏனைய சமூதாயக் குழுக்கள் அதனை ஒழுங்குபடுத்த வேண்டும், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வெறும் பார்வையாளராகவும், செயற்பாடற்றவராகவும் இருந்து விட்டு நாங்கள்தான் களத்தில் நின்றோம் எங்களுக்கு தெரியும் இப்படித்தான் இதன் முடிவு வரும் என்று பெயர் போட நனைப்பது ஒரு கோழைத்தனமான செயற்பாடாகவே இருக்கும். 

எனவே இன்றைய இளைஞர் சமுதாயம் வாய்ப்பு வரும் வரை பார்த்திராது வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும் பிரச்சனைகள் தவறுகள் முறன்பாடுகள் உருவாகும் போது சமய நெறிமுறைகளுடனும் ஒழுக்கத்துடனும் கையாள பழக வேண்டும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நாட்டின் பல்கிப் பெருகியுள்ள இளைஞர் தேவைகளுக்கு சேவை செய்யும் ஒரு அரச நிறுவனம். அதனைப்பயன்படுத்தி இன்று மாவட்டத்தின் அனைத்து அரச,தனியார் துறைகளில் இருக்கும் உத்தியோகத்தர்களும் அதன் ஆரம்ப கால அங்கத்தவர்களாக இருந்தவர்கள்தான். உங்களது பிரதேச கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன் ஐயா ஒரு இளைஞர் சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிவர்தான். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பனிப்பாளர் திரு. சிவநேசராச அவர்களும்,பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு . சபியதாஸ் முன்னால் சம்மேளனத் தலைவர் திரு சசி, இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்கள் என பலர் பங்கேற்றனர்.


வாராந்த சந்தையை முடக்க ஹர்த்தாலா???

Posted in
 புத்திஜீவிகளே....! பள்ளி நிர்வாகிகளே.,,! அரசியல் தலைமைகளே.....!
பல்லாண்டுகளாக மூடப்பட்டிருந்த எமது மீராவோடை சந்தை எமது பிரதேசத்தில் அன்றாடம் தினக்கூலி செய்து ஜீவனோபாயம் நடாத்தி வரும் அடி மட்ட மக்கள் பயனடையும் வகையில் 2018 ஆண்டு மீராவோடை பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் மீராவோடை மக்களால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வாராந்தம் இடம்பெற்று வரும் குறித்த சந்தையை மீண்டும் மூட முயற்சிப்பதும், சந்தையை மூடி மீராவோடைப் பிரதேசத்தை முப்பது வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வைக்க எத்தனிப்பதும் கடும் கவலைக்குரிய விடையமாகும். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சந்தை 2018 ஆண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை சகலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியதுடன், மீராவோடை புத்தெழுச்சி பெறத்தொடங்கிய விட்டதாக மக்கள் மனதில் எண்ணம் தோன்றியது. குறித்த சந்தையில் ஒரு சில கடைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு மீராவோடை சந்தையை நடாத்திச் செல்வதென்பது மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்கப்போவதில்லை. இங்கு வாராந்த சந்தையே சாத்தியமென்பது நிரூபணமாகியுள்ளது. இப்போது அழகான முறையில் பொது மக்கள் குறித்த சந்தைக்குச்சென்று முதியோர்கள், பெண்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். இங்கே எந்த அனாச்சாரங்களும் இதுவரை இடம்பெற்றதாக தெரியவில்லை. அப்படியிருக்கையில் இப்பிரதேசத்தின் பிரதான பள்ளிவாயலின் தலைவர் ஒரு விபசாரம் நடக்கும் இடமாகவும் சித்தரிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது. பொறுப்புவாய்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை இல்லாமலாக்குகின்ற முயற்சியில் ஒரு சிலர் இறங்கிச்செயற்பட முனைகின்ற அதே வேளை, மீராவோடை சந்தையி இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் அயலிலுள்ள தமிழ் கிராமத்தில் இவ்வாறான வாராந்த சந்தையொன்றை திறக்கும் முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இவ்வாறு மீராவோடை வாராந்த சந்தையை மூடி எமது சகோதரர்களுக்கும் எமது பிரதேசத்திற்கும் வரலாற்று துரோகமொன்றை செய்து விடாதீர்கள். இது போன்றதொரு சந்தையை அவர்கள் உருவாக்கினால் எமது வியாபாரிகளின் நிலைமை என்னவென்பதை சற்று சிந்தியுங்கள். கடந்த காலங்களில் நாம் எதிர்நோக்கிய சிக்கல்களை சற்று யோசியுங்கள். இதன் பாரதூரங்களை நாமனைவரும் புரிந்து கொள்வது அவசியம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களை நாமே மற்றவர்களுக்கு வழங்கி விடுகின்றோம். கடந்த காலங்களில் நாம் பட்ட, சந்தித்த கசப்பான அனுபவங்களை நினைத்துப் பாருங்கள். வாழைச்சேனைப்பொலிஸ் சந்தி ஆட்டோ தரிப்பிடப்பிரச்சினை யாரும் மறக்கவில்லை. அதைப்போன்று மீராவோடை வாராந்த சந்தை மூடப்பட்டு எங்களை விட்டும் கை நழுவிச்சென்றால், நஷ்டவாளிகள் நாம் எல்லோருமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை மீட்டுத்தர எந்த அரசியல்வாதிகளும் வரமாட்டார்கள் என்பது நாம் கண்ட அனுபவம். குறித்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் சந்தர்ப்பம் இன்னும் கைநழுவிப் போகவில்லை. பள்ளிவாயல் நிர்வாகிகளே ........ புத்திஜீவிகளே .............. எமது ஊர் அரசியல்வாதிகளே இது விடயத்தில் தலையிட்டு எவரும் பாதிக்கப்படாத தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள். நாம் எல்லோரும் சகோதரர்கள், உறவுகள், நானா, தம்பிகள், குடும்ப உறவுகள். என்றும் எமது உறவுகள் தொடர வேண்டும் எனும் வேண்டுதலோடு....

அஸ்கர் அலி ,,.......................
கோறளைப்பற்று மத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 
வாழைச்சேனை

மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவளிக்க வேண்டாம்

Posted in
மீராவோடை வாராந்த சந்தையை எதிர்த்து இன்று 18.02.2019ம் திகதி காலை அடையாளந் தெரியாத ஓட்டமாவடி பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எனும் பெயரில் ஹர்த்தாலுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்கு யாரும் ஆதரவளிக்க வேண்டாம் என்று ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் முஹம்மட் ஹில்மி அவர்கள் வெளிநாட்டிலிருந்து எமது ஓட்டமாவடி செய்திச் சேவைக்கு அனுப்பியுள்ள பிரத்தியேகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தனது அறிக்கையில் “இது ஒட்டமாவடியிலுள்ள ஒரு சில வர்த்தகர்களின் இயலாமையை எடுத்துக் காட்டுவதோடு ஒரு வாராந்த சந்தையினால் ஓட்டமாவடி பஸாரின் வியாபாரம் நஷ்டமடைகின்றதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு பொதுமக்கள் இலாபத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதை இன்னும் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர அதனை தடைசெய்வதற்கும் நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வதற்கும் முன்வருவதானது மற்றவர்களுக்கு ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்து விடும். மீராவோடை வாராந்த சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருவதால் பெருந்தொகைப் பணம் வெளியில் செல்கின்றது என்ற கருத்தானது நகைப்புக்குரியதாகும். அவ்வாறெனின் இதே மாதிரி வெளியூர் வியாபாரிகள் வாராந்த சந்தைக்கு வரக்கூடாது எங்களின் பணம் முஸ்லிம் ஊர்களுக்குச் செல்கிறது என்று தமிழ்ப் பிரதேசத்திலுள்ளவர்கள் முடிவெடுத்தால் என்ன செய்வது. அது மாத்திரமன்றி ஓட்டமாவடி பஸாரிலுள்ள வியாபாரிகள் உள்ளூரில் மாத்திரமா தங்களது கொள்வனவை மேற்கொள்கிறார்கள். அவர்களும் காத்தான்குடி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றே கொள்வனவை மேற்கொள்கிறார்கள். இதனால் மட்டும் வெளியூருக்குப் பணம் செல்லவில்லையா?.  உள்ளூர் மக்களில் 99 வீதமானோர் நன்மையடையும் வாராந்த சந்தையை நிறுத்த முயற்சிப்பதானது மக்களின் நலனை விட வியாபாரிகளின் நலனை முன்னிலைப்படுத்துவதனையே காண முடிகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தனது குறிப்பில் “இந்த வாராந்த சந்தையை நிறுத்தினால் மீராவோடை எல்லையிலுள்ள தமிழ்ப் பிரதேசத்தில் இதே வாராந்த சந்தையை ஆரம்பித்தால் யாரும் யாரையும் நிறுத்த முடியாது போய்விடும். வாராந்த சந்தையை நாளாந்த சந்தையாக மாற்றினாலும் அந்த சந்தை வலுவிழந்துவிடும்” என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த ஊரில் அரசியல் பிரதிநிதியாக ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்தும் இவ்வாறான உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வராமலிருப்பதானது அவரது வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திலிருக்கிறார் என்பதனையே வெளிக்காட்டுகின்றது. உண்மையில் பாதிப்படைந்துள்ள ஒரு சில வியாபாரிகளைக் கூப்பிட்டு அதற்கான தீர்வை வழங்க வேண்டுமே தவிர நமக்கு நாமே ஹர்த்தால் போட்டுக் கொள்வது அடிமுட்டாள்தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு சிலரின் சுயநல விளையாட்டு அன்றி ஒட்டுமொத்த ஓட்டமாவடி மக்களின் நிலைப்பாடு அல்ல. இதனால் இரு தரப்பினரும் ஊர்வாதம் பேசி முரண்பட்டுக் கொள்ளாமல் தெளிவாக இருக்க வேண்டும். பொது வெளியில் தெரிவிக்கும் கருத்துக்களை நன்கு பரிசீலனை செய்து வெளியிட வேண்டும். ஓட்டமாவடி வர்த்தக சங்கம் மௌனமாக இருப்பதானது அவர்களும் ஹர்த்தாலுக்கு மறைமுகமான உடந்தையாக இருப்பதையே காட்டுகின்றது. வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் ஓட்டமாவடி வியாபாரிகளே நன்கொடைகள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அவரவர் விருப்பம். தர்மம் செய்வதனை வற்புறுத்தலில் செய்ய வைக்க முடியாது. தர்மம் செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாவிட்டால் அவர்களுக்கு நன்மை கிடைக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்குடா பிரதேச அமைப்பாளர்கள் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம் இன்று 16.02.2019ம் திகதி மாலை 05.00 மணியளவில் மீராவோடை எல்லை வீதியிலுள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.எம். சிம்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் விவகாரங்களுக்கான தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் அவர்களும், விசேட அதிதியாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர் றிழா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜனாப். சுகைப் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் றஹீம் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நிகழ்வின்போது கல்குடாத் தொகுதிக்குட்பட்ட கோறைப்பற்று மேற்கு மற்றும் கோறளை மத்தி பிரதேசங்களிலுள்ள பிரிவுகளுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் விவகாரங்களுக்கான தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் அவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






















வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினரின் முயற்சியினால் மகப்பேற்று விடுதி மற்றும் பல் சிகிச்சை நிலையம் தொடராக இயங்க நடவடிக்கை

Posted in
எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தற்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதியானது இனிவரும் நாட்களில் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களின் நன்மைகருதி செயற்படும், என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், வைத்தியசாலையில் காணப்படும் பல் சிகிச்சை நிலையமும் திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான நாட்களில் பொதுமக்களுக்கும் சனிக்கிழமை நாளில் பாடசாலை மாணவர்களுக்கும் செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொதுமக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் மீராவோடை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஆகியோரின் தொடர் முயற்சிகளினால் இவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மேற்குறிப்பிட்ட சேவைகளை இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கின்றோம்.