Follow me on Twitter RSS FEED

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்டப் போட்டியில் ஓட்டமாவடி எச்.எம்.எம். தஸீம் சாதனை.

Posted in

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 17.11.2017ம் திகதி கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது மட்-மம-ஓட்டமாவடி விஷேட தேவையுடையோர் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 04 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அதில் எச்.எம்.எம். தஸீம் என்ற மாணவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அத்தோடு பணப் பரிசாக பத்தாயிரம் ரூபாவையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.



அங்கவீனம் திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு தடையல்ல என்பதனை தனது தன்னம்பிக்கை மூலம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள எச்.எம்.எம். தஸீம் அவர்கள் நிரூபித்துள்ளார். 

அந்தவகையில் எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்த மாணவனான எச்.எம்.எம். தஸீம் அவர்களை எமது ODDAMAVADI NEWS சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மாணவன் சாதனை புரிய பல வழிகளிலும் ஊக்கங்களை அளித்த பாடசாலை சமூகம் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 































© ODDAMAVADI NEWS

சுனாமி வதந்தி - மக்கள் அச்சமடையத் தேவையில்லை

Posted in

இன்று காலை கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது பகுதிகளில் கடல் கொந்தளிப்பு மற்றும் ஒரு சில இடங்களில் கிணற்று நீர் மட்டம் குறைந்ததினால் மக்கள் பீதியடைந்து சுனாமி வரப்போகின்றதென்று பதற்றமடைந்திருந்தனர். இவ்வாறு நாட்டின் பல பகுதிகளுக்கும் வதந்தி பரவியிருந்தது. இருந்தாலும் அந்தச் செய்தி உண்மையில்லை என்பதனை இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், ஆசிய பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் என்பன ஊர்ஜிதம் செய்துள்ளன. அத்தோடு இலங்கைக்கு அண்மையில் எவ்வித நிலநடுக்கங்களும் பதிவாகவில்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என்பதோடு வதந்திகளைப் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





©ODDAMAVADI NEWS

தேசிய ரீதியில் முதலிடம் பெற்று ஓட்டமாவடி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவி - ஹனான் அமீன்

Posted in
ஓட்டமாவடியைச் சேர்ந்த பௌசுல் அமீன் (பாராளுமன்ற உத்தியோகத்தரின்) மகள் ஹனான் அமீன் எனும் பெயருடைய மாணவி முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா கட்டுரைப் போட்டியில் (தமிழ்மொழி) ஆரம்பப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று எமது ஓட்டமாவடி மண்ணுக்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஓட்டமாவடி மக்கள் சார்பாக ODDAMAVADI NEWS ஆகிய நாம் இம்மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இன்னும் பல சாதனைகளைப் புரியப் போதுமான ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.
 இந்த மாணவி கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் தற்போது தரம்-5இல் கல்விகற்று வருகின்றார். கிழக்கு மாகாணத்தைப் போன்று சிறந்த மேலதிக கற்கை வசதிகள் கிடைக்காத போதிலும் இவ்வாறானதொரு சாதனையை மாணவி ஹனான் அமீன் படைத்துள்ளமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு இந்த மாணவியின் தந்தை பௌசுல் அமீன் அவர்கள் எமது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதோடு அவரும் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாராளுமன்ற சேவை உத்தியொகத்தராகக் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

பிறந்த மண்ணிலிருந்து தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து தலைநகருக்குச் சென்றிருந்தாலும் ஓட்டமாவடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது மகள் சாதனை படைக்குமளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த பௌசுல் அமீன் மற்றும் அவரது துணைவியாரையும் பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கான மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் இறுதிக்குள் நடத்தப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. 

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றமைக்கான மாணவி ஹனான் அமீன் பெற்ற பரிசில்கள் -


©ODDAMAVADI NEWS

வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்க எம்முடன் கைகோருங்கள்

Posted in

வறுமைக்கோட்டின்கீழ் தனது கல்வியைத் தொடரும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை எமது கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஆரம்பித்துள்ளோம்.


வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை எமது நிறுவனத்தினால் வழங்கி வருவதனை நீங்கள் அறிந்ததே அதேபோன்று இவ்வருடமும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.


இக்கல்வி பணியில் நீங்களும் இணைந்துகொள்ள விரும்பினால் இம்மாணவச் செல்வங்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ உங்கள் உதவிகளை வழங்கி வைக்கலாம்.

நன்றி


தொடர்புகளுக்கு

Haither Ali - 077 3681209
Rasee Mohammed - 075 6963842
Mohammed Thifas - 075 0574005


https://www.facebook.com/Kalkudah-Cultural-Development-Association-1400066613540275/?ref=bookmarks

"மனிதமரம்" M.U.M. சனூஸ் அவர்களுடனான நேர்காணல் (வீடியோ)

Posted in
"மனிதமரம்" குறுந்திரைப்படம் நேற்று 05.11.2017ம் திகதி மாலை 05.15 மணியளவில் ஒட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டது. 

ஒரு சர்வதேச குறுந்திரைப்படத்தை ஒத்ததாக எம்மவர்களால் எடுக்கப்பட்ட இக்குறுந்திரைப்படத்தின் காட்சிகள் அனைவரையும் பிரம்மிப்புக்குட்படுத்தியதோடு பாராட்டுதல்களையும் பெற்று வருகின்றது. 

இதன் இயக்குனர் M.U.M. சனூஸ் அவர்கள் எமது ODDAMAVADI NEWS வலைத்தளத்திற்கு பிரத்தியேக செவ்வியினை வழங்கியிருந்தார். அதன் காணோளி இங்கே உங்களுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளது.







திரை விமர்சனம் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

நன்றி  - ADAM RIZWIN & SAMEEM

©ODDAMAVADI NEWS

SLM. ஹனீபா அவர்கள் IBC தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

Posted in
உலகறிந்த தமிழ் இலக்கியவாதியும்
இலங்கை கிழக்கு மாகாணத்தின் இலக்கிய அடையாளமுமாகிய ஓட்டமாவடி SLM. ஹனீபா அவர்கள் இலங்கை தமிழ், முஸ்லிம்களின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான தனது பிரத்தியேகப் பேட்டியை  IBC தொலைக்காட்சி சேவைக்கு அண்மையில் வழங்கியிருந்தார்கள்.

அதன்போது பல நிதர்சனமான உண்மைகளை வெளிப்படையாக  SLM. ஹனீபா அவர்கள் முன்வைத்திருந்தார்கள். அதன் யூடியூப் லிங் கீழே தரப்பட்டுள்ளது. அதனைச் சொடுக்கி குறித்த பேட்டியைக் கண்டுகளிக்கலாம்.



©ODDAMAVADI NEWS

"மனிதமரம்" குறுந்திரைப்படம் - நம்மவர்களின் படைப்பை ஊக்குவிப்போம்.

Posted in
MS Studio தயாரிப்பில் உருவாகியுள்ள மனிதமரம் குறுந் திரைப்படத்தின் மக்கள் காட்சி நாளை 05.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அன்பளிப்பாக ரூபா. 100 எதிர்பார்க்கப்படுகின்றது. 

முற்றிலும் எமது இளைஞர்களின் படைப்பாற்றலில் உருவாகியுள்ள இந்தக் குறுந் திரைப்படத்தின் மக்கள் காட்சியை நாம் அனைவரும் சென்று பார்வையிட்டு அவர்களின் திறமையை ஊக்கப்படுத்தி இந்தத் துறையில் அவர்கள் சாதித்திட நாமும் பங்காளிகளாவோம். 

மனிதமரம் குறுந்திரைப்பட விமர்சனம் எமது தளத்தில் விரைவில் பதிவிடப்படும். 

©ODDAMAVADI NEWS


மனோ கணேசன் ஐயா, உங்களை வாழ்த்துகின்றேன்... எம்.ரீ.ஹைதர் அலி

Posted in
அமைச்சர் கௌரவ மனோ கணேசன் ஐயா அவர்களே

உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் என்றும் குரல் கொடுக்கும் நீங்கள் என்றும் சரித்திரம் படைப்பீர். உங்களைப் போன்ற சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வாழ்த்துச்சொல்வதில் பெருமையடைகின்றேன்.

தனி மனிதனாய் உங்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பெரும்பான்மைச் சமூகத்தைக் கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் சரிக்குச் சமமாக நின்று, குரல் கொடுக்கும் உங்கள் துணிவு ஏனைய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளிடமும் வர வேண்டும். அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு, அமைச்சுக்களை வகித்தாலும், என் சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தான் வகிக்கும் அமைச்சினைத் துச்சமென நினைக்கும் நீங்கள் என்றும் உங்கள் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

உங்கள் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தலைமை நீங்கள். ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லும் சத்தியமும், தேசியமும் எங்கே...? உங்கள் குரல் உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக அரசாங்கத்தினை எதிர்த்துப் பேசுகின்றது. ஆனால், எங்கள் சமூகத்தின் உரிமைகளை அதே அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வாயடைத்துப்போகும் எங்கள் தலைமைகள். உங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காக தான் வகிக்கும் அமைச்சினைத் துட்சமென நினைத்து தூக்கியெறிய நினைப்பவர் நீங்கள். ஆனால், எங்கள் சமூகங்களைக் காண்பித்து அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்பவர்கள் எங்கள் தலைமகள். சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை பின் தள்ளி விட்டு முன் நிற்கின்றீர்கள் நீங்கள். ஆனால், எங்கள் தலைமைகளோ சமூகத்தின் உரிமைகளுக்காக மக்களை முன் தள்ளி விட்டு பின் நிற்கின்றார்கள்.

வாழைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களிலுள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்களைப் போன்று தைரியமாக ஒரு பிரதேசத்திற்குமாவது பிரதேச சபையினைப் பெற்றுத்தர முடியாத தலைமைகளே எங்கள் சத்தியமும், தேசியமும். இன்று ஒரு உள்ளூராட்சி சபையையேனும் பெற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் தலைமைத்துவங்களுக்கு உங்களின் வீரமுள்ள செயற்பாடு நல்லதொரு பாடமும் படிப்பினையுமாகும். எம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்று எமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு, நாங்களே எமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதே.

ஆனால், ஆர்ப்பாட்டமில்லாமல் உங்கள் ஆளுமையினால் இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள் உங்கள் பயணத்தில் நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எம்.ரீ. ஹைதர் அலி
மீராவோடை.


சித்தாண்டி வாராந்த சந்தைக்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் அவதானம்!!!

Posted in
நாளை வியாழக்கிழமை 02.11.2017ம் திகதி சித்தாண்டி வாராந்த சந்தை இடம்பெறவுள்ளது. வழமையாக முஸ்லிம் வியாபாரிகள் இங்கு தங்களது அங்காடிப் பொருட்களை விற்பதற்காகச் செல்வதுண்டு. 



இருந்தாலும் கிரான் மற்றும் சந்திவெளி வாராந்த சந்தைகளின்போது முஸ்லிம் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மேற்கொள்ளவிடாமல் இனவாதக் குழுக்கள் தடுத்திருந்தன. இச்சம்பவங்கள் நடந்து ஓரிரு நாட்களே ஆகின்ற நிலையில் சித்தாண்டியிலும் நாளை அவ்வாறு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆகவே நல்லதொரு சுமூகமான நிலை ஏற்படும்வரை சித்தாண்டிக்கு நாளை வியாபாரத்திற்காகச் செல்வதை முஸ்லிம் வியாபாரிகள் தவிர்ந்து கொண்டால் சில வீணான பிரச்சினைகளிலிருந்தும் சமூகங்களுக்கிடையிலான பதற்றநிலை ஏற்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியும். 

ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளுக்கு தமிழ் சகோதரர்கள் எவ்வித தயக்கமும் இன்றி தங்களது தொழில் நடவடிக்கைகளுக்கு எந்நேரமும் வரமுடியும் என்றும் அதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்கியுள்ள முஸ்லிம் சமய நிறுவனங்களைப் போன்று தமிழ்ப் பிரதேச சமய நிறுவனங்களும் முன் வந்து அறிவிப்பு செய்வதோடு இனவாதக் குழுக்களுக்கு இடமளியாது இரு சமூகங்களுக்குமிடையிலான உறவைப் பலப்படுத்த முன் வரவேண்டுமென்பது இனங்களுக்கிடையில் சமாதானத்தை விரும்பும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். 

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்... (Thilipkumaar Ganeshan's FB)

Posted in
எங்கள் முகநூல் நண்பன்  Thilipkumaar Ganeshan யின் முக நூல் ஆக்கம்.

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்...

சந்தைக்கு சோனி வரக்கூடாது என்று இந்தப்பக்கம் இருந்து சொல்வீர்கள், அந்தப்பக்கம் தமிழன் எங்கள்
ஊருக்கு தொழிலுக்கு வரக்கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு நாள் வன்முறையாக வெடிக்கும்
தொடர்ந்து பத்து நாட்கள் கலவரம் நடக்கும்12ம் நாள் பேச்சுவார்த்தை மறு நாள் பழையபடி நல்லுறவு ஒற்றுமை எல்லாம் ஏற்படுத்தப்படும். சுமுகமாக எல்லாம் வழமைக்கு திரும்பும்.


இடையில் நீங்கள் சண்டையிட்ட அந்த 10நாட்களில்
மீன் விற்கவும், ஓலைப்பெட்டி,பாய் விற்கவும் வரும் ஏழை முஸ்லீமும்
மேசன்,ஓடாவி என்று சோற்றுகாக கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழரும் செத்துப்போயிருப்பார்கள்.

விதவைப்பெண்களும் அனாதைக்குழந்தைகளும் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.கலவரம் ஒன்றை உருவாக்க ஓடித்திரியும்நீங்கள் அவர்களுக்கு சோறு கொடுப்பீர்களா?

அரைவயிறும் கால்வயிறுமாய்
பட்டினியோடும் வறுமையோடும் போராடி
பள்ளிக்கு சென்று படிக்கவும் வசதியில்லாமல் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்து அந்தக் குழந்தைகள் படாத பாடு படும்.

வருமானத்திற்கு வழியின்றி கணவனை இழந்து கிடைக்கின்ற தொழிலை செய்து வாழும் பெண் மீது பாலியல் சுரண்டலுக்காய்
உங்களில் ஒரு கூட்டம் திரியும்,
பின்பொருநாள்
அவள் வேசை என்று சொல்லிக்கொண்டு இலகுவாய் கடந்து செல்வீர்கள்.

உங்களை வைத்து அரசியல் செய்பவன் இனவாதத்தை காட்டி வென்றுவிட்டு தனது வேலையைப் பார்க்க போய் விடுவான்.
வன்முறையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
வருடக்கணக்கில் நீதிமன்றும் போலீசுமாக இழுபட்டு திரிவார்கள்.

இவற்றுக்காவே இத்தனை பிரயத்தனம் செய்கிறீர்கள்.
ஏன் என்றால் இழப்புக்கள் உங்கள் குடும்பத்திற்கு இல்லை தானே..

BREAKING NEWS - தாக்குதல்களுக்குள்ளான ஓட்டமாவடி வர்த்தகர்

Posted in
இன்று காலை சந்திவெளி வாராந்த சந்தைக்கு வியாபாரத்திற்காகச் சென்ற ஓட்டமாவடி செம்மண்ணோடையைச் சேர்ந்த ஆதம்பாவா (வயது 55) தமிழ் இனவாதக் குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.


இதேவேளை ஏறாவூருக்கு சென்ற வாகனம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் சம்மேளனம் பதட்டத்தைத் தணிக்க முயற்சி எடுத்து வருகின்றது.


மேலும் செய்திகள் பதிவேற்றப்படும். 

BREAKING NEWS-சந்திவெளியில் முஸ்லிம் வியாபாரிகள் மீது சற்று முன்னர் தாக்குதல்

Posted in
இன்று காலை வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சந்திவெளி சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் மீது தமிழ் இனவாதிக் குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் சந்திவெளியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிய வருகிறது. 



இந்நிலையைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிசார் சந்திவெளியில் குவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வியாபாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை. 

மேலதிக செய்திகள் பதிவேற்றப்படும். 

சந்திவெளி, சித்தாண்டிக்கு செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் அவதானம்!!!

Posted in
கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதவாறு வெளியேற்றப்பட்டதைப் போன்று நாளை செவ்வாய்க் கிழமை சந்திவெளி வாராந்தச் சந்தையிலும் எதிர்வரும் வியாழக்கிழமை சித்தாண்டி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகளை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.


சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த முஸ்லிம் விரோதப் போக்கில் எவ்வித சம்மந்தமில்லை என்பதோடு இதற்குப் பின்னணியாக இனங்களுக்கிடையில் குழப்பங்களை விளைவித்து அதன் மூலம் அரசியலில் பிரபல்யமடையத் துடிக்கும் ஒரு சில இனத் துவேசிகள் வேலைத் திட்டமே இவையாகும்.

ஆகவே மேற்படி பிரதேசங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் மாத்திரமே உங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்படி இடங்களில் மேற்கொள்ளவும். இனமுறுகலொன்று ஏற்பட வாய்ப்பிருக்கும் தருணத்தில் அவ்விடங்களுக்குச் செல்வதை பெருமு்பாலும் தவிர்த்துக் கொள்வது வீணான பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காக்கும். 

மீராவோடை பாடசாலைக் காணி வழக்குத் தீர்ப்பு நாளை - இனமுறுகல் ஏற்படும் அபாயம்

Posted in
மீராவோடை பாடசாலைக் காணி சம்மந்தமான வழக்கு வாழைச்சேனை நீதவான்  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை 29.10.2017ம் திகதி அதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மீராவோடை பாடசாலைக்குரிய காணியை ஒரு சில முஸ்லிம்கள் அத்துமீறி அபகரித்துள்ளதாக தமிழ்த் தரப்பிலும், அது தங்களது மூதாதையர்களின் காணி என முஸ்லிம்களின் தரப்பிலும் ஆதார ஆவணங்கள் காட்டப்பட்டு வருகின்றது. 


இவ்வாறான ஒரு அசாதரண நிலை குறித்த காணிக்கு அண்மையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் இடம்பெற்றிருந்த வேளை தமிழ்த் தரப்பு சார்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமங்கல தேரர் சம்பவ இடத்தில் ஆஜராகி முஸ்லிம்களின் காணி வேலிகளை உடைத்திருந்தார். இதனால் அங்கு பதட்ட நிலை அதிகரித்ததினால் பாரியளவில் பொலிசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டு விடயம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஆட்டோத் தரிப்பிட முறுகல் நிலை, அதனைத் தொடர்ந்து இன்று 29.10.2017ம் திகதி இடம்பெற்ற கிரான் சம்பவம் இவ்வாறு தொடர்கையில் நாளை நீதிமன்றத் தீர்ப்பானது வெளிவரும் பட்சத்தில் அதுவும் ஒரு இனமுறுகல் நிலைமையை ஏற்படுத்தலாம் என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதேவேளை வாழைச்சேனை ஆட்டோத் தரிப்பிட பிரச்சினைக்கான தீர்ப்பும் நாளை நீதிமன்றத்தில் வெரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான தருணத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் நடுநிலையாக உணர்ந்து இன்னுமொரு கசப்பான சம்பவம் மூலம் இரு சமூகங்களுக்குமிடையிலான உறவு பாதிப்படையா வண்ணம் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.