Follow me on Twitter RSS FEED

மீராவோடை பாடசாலைக் காணி வழக்குத் தீர்ப்பு நாளை - இனமுறுகல் ஏற்படும் அபாயம்

Posted in
மீராவோடை பாடசாலைக் காணி சம்மந்தமான வழக்கு வாழைச்சேனை நீதவான்  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை 29.10.2017ம் திகதி அதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மீராவோடை பாடசாலைக்குரிய காணியை ஒரு சில முஸ்லிம்கள் அத்துமீறி அபகரித்துள்ளதாக தமிழ்த் தரப்பிலும், அது தங்களது மூதாதையர்களின் காணி என முஸ்லிம்களின் தரப்பிலும் ஆதார ஆவணங்கள் காட்டப்பட்டு வருகின்றது. 


இவ்வாறான ஒரு அசாதரண நிலை குறித்த காணிக்கு அண்மையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் இடம்பெற்றிருந்த வேளை தமிழ்த் தரப்பு சார்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமங்கல தேரர் சம்பவ இடத்தில் ஆஜராகி முஸ்லிம்களின் காணி வேலிகளை உடைத்திருந்தார். இதனால் அங்கு பதட்ட நிலை அதிகரித்ததினால் பாரியளவில் பொலிசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டு விடயம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஆட்டோத் தரிப்பிட முறுகல் நிலை, அதனைத் தொடர்ந்து இன்று 29.10.2017ம் திகதி இடம்பெற்ற கிரான் சம்பவம் இவ்வாறு தொடர்கையில் நாளை நீதிமன்றத் தீர்ப்பானது வெளிவரும் பட்சத்தில் அதுவும் ஒரு இனமுறுகல் நிலைமையை ஏற்படுத்தலாம் என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதேவேளை வாழைச்சேனை ஆட்டோத் தரிப்பிட பிரச்சினைக்கான தீர்ப்பும் நாளை நீதிமன்றத்தில் வெரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான தருணத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் நடுநிலையாக உணர்ந்து இன்னுமொரு கசப்பான சம்பவம் மூலம் இரு சமூகங்களுக்குமிடையிலான உறவு பாதிப்படையா வண்ணம் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. 

0 comments: