Follow me on Twitter RSS FEED

இரு இராஜாங்க அமைச்சர்கள் கல்குடா முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Posted in
கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் சமகாலத்தில் மிக முக்கிய பிரச்சினைகளாக இரு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
1. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீகவளக் குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலையைத் தரமுயர்த்தல். 
2.  முஸ்லிம்களுக்கு தனியான கோறளைமத்தி பிரதேச சபை.

இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களினால் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், கௌரவ சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பைஷல் காசீம் அவர்களுக்கும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில் மேற்படி விடயங்கள் இரண்டினையும் உடனடியாகத் தீர்ப்பதற்கு சகல மட்டங்களுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமென இரு இராஜாங்க அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர். 

இது தொடர்பாக மேலும் நாம் எம்.ஜே.எம். அன்வர் நௌசாத் அவர்களிடம் வினவியபோது ”வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் குறைபாடுகள் மற்றும் நெருக்கடி நிலைகள் பற்றி மிகவும் கவலையுடன் வைத்தியர்கள் தங்களது கோரிக்கையினை ஊடகங்கள் வாயிலாக முன்வைத்திருந்தும், அதுபோல முஸ்லிம்களுக்கான தனியான கோறளை மத்தி பிரதேச சபையின் அவசியத்தை பல புத்திஜீவிகள் வலியுறுத்தி இருந்தபோதும் அவை எது தொடர்பாகவும் எள்ளளவு கூட இந்தப் பிரதேசத்தின் அரசியல்வாதியோ அல்லது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அமைப்பாளர்களோ கவனம் எடுக்காமையானது அவர்களது வங்குரோத்து நிலையினை எடுத்துக் காட்டுவதோடு, அரசியல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு ஏனைய நாட்களில் மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்வதும் வழமையாகியுள்ளது.” என்றும் தெரிவித்தார்.


அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கமைவாக அஷ்ஷேக். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு ஆளுநர் வைத்தியசாலைக்கு விஜயம்

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின், பணிப்பாளரும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருமான அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களுக்கும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று 2019.02.10ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது.


இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை மீராவோடை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து இங்கு காணப்படும், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறும், அதற்கான நேர, காலம் ஒன்றினை ஒதுக்கி ஆளுநரை அழைத்து வருமாறும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இச்சந்திப்பில், கருத்து தெரிவித்த அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் எமது பிரதேசத்தில் காணப்படும், வாழைச்சேனை மற்றும் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு எனது அழைப்பினையேற்று மிக விரைவில் ஆளுநர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கான, ஆளுநரின் விஜயத்தின்போது, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்துவருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

அச்சந்திப்பில் மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தினையும் கேட்டறிந்துகொண்டு இயன்றளவு முடியுமான தீர்வினை பெற்றுத்தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேக். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலைக்கு ஆளுநரை அழைத்து வருவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டது.

மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) நியமனம் - கிழக்கு ஆளுநருக்கு வைத்திய அத்தியட்சகர் மற்றும் அபிவிருத்திக் குழுவினர் நன்றி தெரிவிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மீராவோடை வைத்தியசாலைக்கு மருந்தாளர் (Pharmacist) ஒருவர் 2019.02.11ஆம்திகதி - திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.


வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளையேற்று இந்நியமனத்தினை வழங்கியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மீராவோடை வைத்தியசாலையில் நாளாந்தம் சுமார் 250க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளர் பிரிவிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் நாளாந்தம் பற்சிகிச்சை கிளினிக் இடம்பெறுவதுடன், மாதத்தில் 8 தினங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு ஆஸ்த்மா, தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான கிளினிக் நடைபெறுகின்றன. இதற்காக சுமார் 1400க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்குமுரிய மருந்து, மாத்திரை வகைகளை வழங்குவதற்கு மருந்தாளர் ஒருவர் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய தேவைப்பாடும், குறிப்பாக வயோதிப நோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.

சில சந்தர்ப்பங்களில் இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர்களே மருந்தாளருக்கான கடமையினையும் மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றும் வந்துள்ளன.

இவ்வாறு பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளை ஏற்று இந்நியமனத்தினை பெற்றுத்தந்தமைக்காக ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தி வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்திற்கும் இன்றுவரை உதவி புரிந்து வரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.


மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Posted in
-M.T. Haither Ali-
மீராவோடை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் 2019.02.10ஆம் திகதி - ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலையின், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள், கிடைக்கப்பெற்ற விடயங்கள் மற்றும் கிடைக்க இருக்கின்ற விடயங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 

இச்சந்திப்பில், கலந்தாலோசிக்கப்பட்ட மிக பிரதானமான விடயங்களாக, ஆளணிக்கேற்ப வைத்தியர்களை பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், கிழக்கு மாகாண ஆளுநரை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாக கையளிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் என பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்றான மகப்பேற்று விடுதியை (Maternity ward) இயங்கச் செய்வதற்கு குடும்பநல உத்தியோகத்தரின் (Midwife) பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்ததற்கமைவாக குடும்பநல உத்தியோகத்தர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், இன்றைய அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின்போது மகப்பேற்று விடுதி/பிரசவ விடுதி (Maternity ward) மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு 24 மணித்தியாலங்களும் இயங்குவதனையும் மற்றும் பல் சிகிச்சை நிலையம் (Dental clinic center) ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய திங்கள் தொடக்கம் சனி வரையான ஆறு நாட்களில் தொடராக இயங்குவது தொடர்பான தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் 2019.02.15ஆம் திகதி - வெள்ளிக்கிழமை பிரதேசத்திலுள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல்களில் ஜூம்ஆவின் பின்னர் இது தொடர்பான அறிவித்தல்களை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் இவ்வைத்தியசாலை ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் வீழ்ச்சியில் காணப்பட்டபோதிலும், வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா மற்றும் தப்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோரின் தொடர் முயற்சிகளினாலும், பல்வேறுபட்ட உயர் மட்டத்திலான சந்திப்புக்களின் மூலமாகவும் பல முன்னேற்றங்களை இவ்வைத்தியசாலை இப்போது கண்டு வருகின்றது.

ஒரு விடயத்தினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் பல்வேறுபட்ட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புக்களையும், காத்திருப்புக்களையும் மேற்கொள்வதனூடாகவே அதன் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள மீராவோடை வைத்தியசாலையானது முஸ்லிம் மற்றும் தமிழ் இரு இன மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு வைத்தியசாலையாகும் காணப்படுகின்றது.

பொத்தானையில் பறி போகும் முஸ்லிம்களின் பூர்வீகம்: ஆளுநர் கவனத்திற்கொள்வாரா?

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி- 
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு கட்டளையொன்றைப் பிறப்பித்திருந்ததுடன், அம்பாறையில் வன இலாகாவினர் மக்கள் குடியிருப்பு காணிகளைக் கையகப்படுத்த எடுத்த முயற்சியை, ஆளுநர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தமையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், புதிய கிழக்கு மாகாண ஆளுநர் காணிப்பிரச்சினைக்கு சரியான தீர்வினை பெற்றத்தருவார் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

கிழக்கிலும் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் தற்போதைய ஆளுநர் முற்றுமுழுதாக அறிந்தவர் என்ற வகையில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் வழங்கப்படாமலிருந்த காணி உறுதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்து.

அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீள வழங்கத்தேவையான நடவடிக்கைளை முன்னெடுப்பதோடு, இப்பிரதேசத்தில் காணப்படும் பாதுகாப்புப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளையும் மீட்டுத்தர வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாகும்.

அத்தோடு, இப்பிரதேசத்திலுள்ள மீள்குடியேற்றக்கிராமங்கள் தொடர்பிலும் ஆளுநர் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பது மீள்குடியேறியுள்ள மக்களின் வேண்டுகோளாகவுமுள்ளது.

இது காலவரை பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மீள்குடியேறியுள்ள மக்கள், சரியான அடிப்படை வசதிகளின்றி தமது காணிக்கான ஆவணங்கள் கிடைக்காமல் ஏனைய திணைக்கள அதிகாரிகளின் அழுத்தங்கள் என்பவற்றால் தொந்து போயுள்ள அவர்களுக்கு தாங்கள் காணி மீட்பு தொடர்பில் மேற்கொண்டு வரும் துரித செயற்பாடு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில், இப்பிரதேசத்தை அண்டிக்காணப்படும் பொத்தானை மீள்குடியேற்றக்கிராமத்தின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக 210 E கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பொத்தனை கிராமத்தில் 40 தமிழ் குடும்பங்களும் 45 முஸ்லிம் குடும்பங்களும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழும் மாதுறு ஓயா யானைகள் சரணாலயம் திட்டத்தின் கீழும் பொத்தனை பிரதேசத்திலுள்ள பல ஏக்கர் முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகளும் வயல் நிலங்களும் பறி போகும் நிலையேற்பட்டுள்ளமை பிரதேச செயலகத்தின் ஊர்ஜிதமான தகவல்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

கடந்த சில தினங்களாக மேற்குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து அளவீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் மிக விரைவில் அக்காணிகள் அனைத்தும் குறித்த திணைக்களங்களின் கொண்டு வரப்படும் நிலையும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் பல ஏக்கர் நிலங்களை இழக்கும் அபாய நிலையேற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் பல்வேறு இழப்புகளை அனுபவித்த இப்பிரதேச மக்களும் விவசாயிகளும் தற்போது இவ்வாறான நிருவாக ரீதியான நெருக்குதல்களை எதிர்கொண்டு வருவது தொடர்பிலும் மேற்குறித்த திணைக்களங்களின் நடவடிக்கை தொடர்பிலும் கிழக்கு மாகாண ஆளுநரும் பிரதேச அரசியல்வாதிகளும் சமூக மட்ட அமைப்புகளும் உடனடியாக கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களது கோரிக்கையாகும்.

பொத்தானை மக்களின் காநிப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா? அல்லது அங்கிருந்து வெளியேறும் நிலை உருவாகுமா?

பொத்தானை மீள்குடியேற்றக் கிராமத்தின் பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்கள கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் சிவில் சமூகச்செயற்பாட்டாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைத் நளீமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையை காலத்தேவை கருத்தி மீள்பிரசுரம் செய்கின்றோம்.

கட்டுரை
பொத்தானை மக்களது மீள்குடியேற்ற பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்- ஜுனைட் நளீமி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாகக் கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ், முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த போதும் பயங்கரவாதச்சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயர வேண்டி வந்தது.

உயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறுவதில் பல சிரமங்களைத் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.

உத்தியோகபூர்வ அவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றதுடன், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களை பலப்படுத்துவதில் முனைப்புக்கொண்டுள்ள போதும் பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, புலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றன. இவற்றினை துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்ற போது அதிகாரிகளாலும், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர்.

அத்தோடு, வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லைக்கற்களை நட்டுள்ளதால், முறுகல் நிலையேற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர்.

மக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களைக் களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன், நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின், அதனை உரிய முறைப்படி விடிவித்து, எல்லைக்கற்களை இடுவதாக வாக்களித்தனர்.

இதனடிப்படையில் சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாதெனவும் குறிப்பிட்டனர். இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா? என மக்கள் வினவிய போது இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலயத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதால், இது குறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டுமென பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

என்ற போதும், குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை பொது மக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.

இக்கிராம மக்களது அடிப்படைத்தேவைகளான பாடசாலை, விளையாட்டு மைதானம், வைத்தியசாலை, பொது மயானம் போன்ற பொதுத்தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என்பதுடன் பொது மையவாடிக்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓயாத்திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதி வாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேசவாசிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.

காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் முயற்சியால் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டு கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரங்கள் - பொறி. ஷிப்லி பாறூக்

Posted in
-எம்.ரி.எம்.ஹைதர் அலி-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் வேண்டிக்கொண்டதற்கு இணங்க திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் (கொம்பெக்டர்ரக குப்பை அள்ளும் இயந்திரம்) இரண்டு காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவுள்ளன. 


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுள்ள வாகனங்களில் காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரு வாகனங்களும் நகர சபை சாரதிகளால் துறைமுக வாகனம் நிறுத்தும் இடமான மிரிச்சிவலயில் இருந்து இன்று எடுத்துச் செல்லப்பட்டு காலியில் பையளிப்பு இடம்பெறவுள்ள ஹொலிடே ஹாள் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் காலியில் வைத்து நாளைமறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நகர சபையிடம் கையளிக்கவுள்ளார். 

காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை சார்பாக நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இவ்விரு இயந்திரங்களையும் ஒதுக்கீடு செய்தமைக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசுக்கு காத்தான்குடி மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் நகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். 

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான முதற்கட்ட இயந்திர தொகுதிகள் இலங்கை வந்தடைந்துள்ளன, அவற்றில் 16 இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும் கொரிய மற்றும் இந்திய நாடுகளின் உதவியுடன் இரண்டாம் கட்ட இயந்திர தொகுதிகள் கூடிய விரைவில் இலங்கை வந்தடையவுள்ளன. அவற்றிலும் பல இயந்திர தொகுதிகளை கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் இராஜாங்க அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் கலாசாலைக்கு புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

Posted in

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் பள்ளிவாயலில் இயங்கிவரும் குர்ஆன் கலாசாலைக்கு இன்று 07.02.2019ம் திகதி அஸர் தொழுகையின் நேரம் ஒரு தொகை புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். சிம்ஷான் மற்றும் அந்நிறுவனத்தின் செயலாளர் ஏ.பி.எம். றிஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டு புனித குர்ஆன் பிரதிகளை குறித்த கலாசாலையின் பொறுப்புதாரியான முஹாஜிரின் மௌலவி அவர்களிடம் கையளித்திருந்தனர். அத்தோடு எதிர்காலத்திலும் புனித குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் பெற்றுத் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.





அதிகரித்துள்ள போதைவஸ்து விற்பனையை ஒழிக்க இராணுவத்தினர் களமிறக்கப்பட வேண்டும்.

Posted in
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல். அஹமட் அவர்கள் எமது செயதிச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் “அண்மைக்காலமாக எமது கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து விற்பனை அதிகரித்து வருவதினால் அதனை பாவிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அதிகம் இளம் மாணவ சமூகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதோடு எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்தோடு போதைவஸ்து பாவனையாளர்களை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சாதகமான நிலை காணப்பட்டாலும் அதனை விற்பனை செய்பவர்கள் மற்றும் இடைவிநியோகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்தினால் மாத்திரமே போதைவஸ்துக்களை எமது பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் “அந்தவகையில் போதைவஸ்து விற்பனை மற்றும் விநியோக மார்க்கங்களை தடைசெய்து அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசாரும் விஷேட அதிரடிப் படையினரும் அவர்களுக்கு இயலுமானளவு செய்து வருகின்றார்கள். இருந்தாலும் பாரிய நடவடிக்கைகளில் இறங்கக் கூடியளவு ஆளணி வளம் அவர்களிடம் இல்லாமை எமக்குப் புலனாகின்றது. அத்தோடு குறிப்பிட்ட சில நடவடிக்கைகளின் போது ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு போதைவஸ்து வியாபாரிகளினால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளமையும் மறுக்க முடியாததொன்றாகும். 

போதைவஸ்து விற்பனையாளர்களின் வலைப்பின்னல் பரந்து காணப்படுகின்ற இந்நிலையில் அவர்களின் மீது முழுமையானதும் பாரியளவிலும் ஒரே தடவையிலும் நடவடிக்கையில் இறங்க இராணுவத்தினரே பொருத்தமானவர்கள். இந்த நாட்டின் மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து எம் அனைவரையும் சாந்தியும் சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு பாரிய தியாகங்களை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு இந்த போதைவஸ்து வியாபாரிகளை ஒழிப்பது என்பது பெரிய விடயமாகாது. ஆகவே பொலிசார், விஷேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை இந்நடவடிக்கையில் முற்றாக இறக்கி எமது இளஞ் சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பையும் நாம் அனைவரையும் ஒன்றிணைந்து இராணுவத்தினருக்கு வழங்க வேண்டும். 

இந்நடவடிக்கையில் இராணுவத்தினரைக் கொண்டுவந்து களமிறக்குவது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகத்தினர், பொதுமக்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் இணைந்து கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கூடாக இராணுவத் தளபதிக்கும் மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கோரிக்கை முன் வைக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஹனீபா அவர்களின் சுதந்திர தினச் செய்தி

Posted in
எமது நாட்டில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையும், தன்னம்பிக்கை இழந்து தங்களது உயிர்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் தற்கொலை கலாசாரத்தில் இருந்தும் விடுபட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என SECRO Sri Lanka அமைப்பின் தலைவர் ஜனாப் அபூபக்கர் முகம்மது ஹனீபா தெரிவித்தார். 

எமது தேசத்தின் 71வது சுதந்திர தினத்தின் வாழ்த்து செய்தியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வளர்ந்து வரும் வளர்முக நாடுகளில் மதங்களின் தோற்றமும், வளர்ச்சியும் காணப்படுகின்ற போதும் அது எந்தளவிற்கு மனித உள்ளங்களில் இடம்பிடித்துள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இன்றைய இளைஞர் சமூகம் ஆன்மீக செழிப்புடன் தங்களது விவகாரங்களை கையாள கற்றுக் கொள்வதன் மூலம் எமது தேசம் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயனிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.