Follow me on Twitter RSS FEED

அதிகரித்துள்ள போதைவஸ்து விற்பனையை ஒழிக்க இராணுவத்தினர் களமிறக்கப்பட வேண்டும்.

Posted in
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல். அஹமட் அவர்கள் எமது செயதிச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் “அண்மைக்காலமாக எமது கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து விற்பனை அதிகரித்து வருவதினால் அதனை பாவிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அதிகம் இளம் மாணவ சமூகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதோடு எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்தோடு போதைவஸ்து பாவனையாளர்களை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சாதகமான நிலை காணப்பட்டாலும் அதனை விற்பனை செய்பவர்கள் மற்றும் இடைவிநியோகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்தினால் மாத்திரமே போதைவஸ்துக்களை எமது பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் “அந்தவகையில் போதைவஸ்து விற்பனை மற்றும் விநியோக மார்க்கங்களை தடைசெய்து அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசாரும் விஷேட அதிரடிப் படையினரும் அவர்களுக்கு இயலுமானளவு செய்து வருகின்றார்கள். இருந்தாலும் பாரிய நடவடிக்கைகளில் இறங்கக் கூடியளவு ஆளணி வளம் அவர்களிடம் இல்லாமை எமக்குப் புலனாகின்றது. அத்தோடு குறிப்பிட்ட சில நடவடிக்கைகளின் போது ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு போதைவஸ்து வியாபாரிகளினால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளமையும் மறுக்க முடியாததொன்றாகும். 

போதைவஸ்து விற்பனையாளர்களின் வலைப்பின்னல் பரந்து காணப்படுகின்ற இந்நிலையில் அவர்களின் மீது முழுமையானதும் பாரியளவிலும் ஒரே தடவையிலும் நடவடிக்கையில் இறங்க இராணுவத்தினரே பொருத்தமானவர்கள். இந்த நாட்டின் மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து எம் அனைவரையும் சாந்தியும் சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு பாரிய தியாகங்களை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு இந்த போதைவஸ்து வியாபாரிகளை ஒழிப்பது என்பது பெரிய விடயமாகாது. ஆகவே பொலிசார், விஷேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை இந்நடவடிக்கையில் முற்றாக இறக்கி எமது இளஞ் சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பையும் நாம் அனைவரையும் ஒன்றிணைந்து இராணுவத்தினருக்கு வழங்க வேண்டும். 

இந்நடவடிக்கையில் இராணுவத்தினரைக் கொண்டுவந்து களமிறக்குவது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகத்தினர், பொதுமக்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் இணைந்து கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதிக்கூடாக இராணுவத் தளபதிக்கும் மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கோரிக்கை முன் வைக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

0 comments: