Follow me on Twitter RSS FEED

“பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும்” சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி. றிஸ்வி (மஜீதி)

Posted in
பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது. 

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்கள் உரையாற்றுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதோடு அவர்களுக்காக இறைவனிடத்தில் துஆச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அத்தோடு “இங்கு இருக்கின்ற பெற்றோர்கள் நல்ல சந்ததியினரை உருவாக்க வேண்டும். வெறுமனே நாம் நன்றாக வாழ்ந்துவிட்டு இந்த சமூகம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் பரவாயில்லை என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கியது மட்டுமல்லாது நல்ல தலைவர்களையும் எமக்கு வெளிக்காட்டினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அப10பக்கர் ரழி அதற்குப் பிறகு உமர் ரழி, உதுமான் ரழி, அலி ரழி என தலைமைத்துவங்களை அடையாளப்படுத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய சமூகத்தில் எல்லாம் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமூகத் தலைமைகள் உருவாகும் போது அதனைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவதுடன் சமூகத்தில் பாரிய இடைவெளி ஏற்படுகின்ற நிலைமைகளும் ஏற்பட்டு விடுகின்றன. எனவே பிறைந்துறைச்சேனை சமூகம் நல்ல ஆளுமைகளை உருவாக்கி இருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் அதன் பிரதிபலன்களை இச்சமூகம் எதிர்காலத்தில் அடைந்து கொள்ளும்” என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார். 


மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்களும், ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments: