Follow me on Twitter RSS FEED

தமது கருத்துகள் தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்களே வெளியிடப்படுகின்றன

Posted in
வடகிழக்கு இணைப்பை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் எதிர்த்து நிற்கின்றது என்ற தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். படுவான்கரை பிரதேசத்தில் உப கல்வி வலயம் ஒன்றை ஆரம்பித்துவைத்து கன்னங்குடா மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தமிழர்கள் மத்தியிலே உணர்வு ரீதியாக பார்க்கின்ற ஒரு விடயம் வடகிழக்க இணைந்த தாயகம். இந்த வடகிழக்கு இணைந்த தாயகம் வரலாற்று ரீதியாக இருந்திருக்கின்றது, அதை நாங்கள் வந்துதான் ஜனாதிபதியுடன் சேர்ந்து பிரித்தெடுத்தோம் என்கிற பார்வை மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

இது உண்மையாக, அறிவுபூர்வமாக, ஆழமாக பார்க்கவேண்டிய விடயம்.நான் கடந்த சில கூட்டங்களில் தெரிவித்த கருத்துகள் பத்திரிகைகளில் மாறிமாறி எழுதப்பட்டுள்ளன. அது அவர்கள் தமது பத்திரிகையின் புகழுக்காக பத்திரிகை விற்பனைக்காக அல்லது அந்த பத்திரிகையாளர் தனது மூளையில் எடுத்துக்கொள்கின்ற பாணியில் அவர் எழுதிக்கொள்கின்றார். 

நீங்கள் ஆழமாக பார்க்கவேண்டும். இந்த இலங்கை திருநாட்டிலே காலம் காலமாக 9 மாகாணங்கள் இருந்துவந்துள்ளது. அது 1986ஆம் ஆண்டு மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டபோது வடகிழக்கு இணைந்த மாகாணமாக கொண்டுவரப்பட்டபோதிலும் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பிணை நடத்தி அவர்கள் இணங்கினால் மட்டுமே வடக்குடன் செல்லலாம் என தீர்மானிக்கப்பட்டது. 

அந்த அடிப்படையில் அந்த மாகாணங்கள் இணைவதும் கலைந்துசெல்வதும் உண்மை. இந்த நிலையில் இது தொடர்பில் சரியான அறிவற்றவர்கள்,அல்லது கிழக்கு மாகாணம் தொடர்பில் சரியான விளக்கம் இல்லாதவர்கள் நாங்கள் நினைத்தால் வடகிழக்கை இணைக்களாம் என கூறுகின்றனர். 

வடகிழக்கு என்பது எங்கள் தாயகம் என்று கூறுபவர்கள் எங்கள் தாயை நாங்கள் இரண்டாக வெட்டி இரத்தம் கொட்ட பிய்த்து எறிந்ததாக நினைக்கின்றார்களா ? அப்படியில்லை. இயல்பாக அது பிரிக்கப்பட்டுள்ளது. அதனை உச்ச நீதிமன்றமே பிரித்துள்ளது. அதில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. 

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம். அதன் மூலமே எமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கலாம். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம். அது வடக்குடன் இணைக்கப்படுமானால் எமது மாவட்டத்தில் எதுவும் செய்யமுடியாத நிலையே ஏற்படும். 

இன்று எமது மாவட்டம் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் பெற்றுவருகின்றது. அதற்காக நாங்கள் பாடுபட்டுவருகின்றோம். இந்த நிலையில்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, எமது மக்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ஆகியோர் என்னை அழைத்து அமைச்சு பதவி ஒன்றை பெற்று தங்களது மக்களுக்கு சேவை செய்ய ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அணுகுமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்படி பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியிடம் இது குறித்து தெரிவித்தேன். நல்ல பாதுகாப்பு தருவார்கள், அமைச்சு பதவி தருவார்கள், நமது மக்களுக்கு நல்ல சேவை செய்யலாம் என கூறினேன். 

ஆனால் அவர் தமிழ் தேசியம், சம்பந்தன் ஐயா பேசுவார், பிரபாகரன் சுடுவார் என பல்வேறு காரணங்களை கூறி அன்று அந்த நல்லவாய்ப்பை தட்டிக்கழித்தார். அவர் அன்று அந்த அமைச்சு பதவியை பெற்றிருந்தால் பெருமளவான நிதி கிழக்கை நோக்கி திரும்பியிருக்கும்,தேர்தலில் வெற்றிபெற்றிருப்பார். 

ஆனால் அவர் இன்று அதே வெற்றிலையில் போட்டியிட்டு எதுவும் அற்ற நிலையில் அரசியலில் நிலைக்கமுடியாத நிலையில் உள்ளார் என்று அங்கு அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments: